Home / eBooks / Nallenavellam Tharum Navathirupathi Tharisanam
Nallenavellam Tharum Navathirupathi Tharisanam eBook Online

Nallenavellam Tharum Navathirupathi Tharisanam (நல்லனவெல்லாம் தரும் நவதிருப்பதி தரிசனம்)

About Nallenavellam Tharum Navathirupathi Tharisanam :

பாவாடை சட்டைச் சிறுமியாய் நான் வளைய வந்து கொண்டிருந்த என் தாத்தா பாட்டியின் வீடு தான் என் முதல் கோயில். எனக்கு நினைவு தெரிந்த வயதை, நான் எப்போதும் ஐந்து வயதாகவே வைத்துக் கொள்கிறேன்.

என் முதல் குரு. என் அன்புக்குரிய பாட்டி. எனக்கு ஆன்மீகத்தை.... ஆண்டவனிடம் எப்படி பக்தி செலுத்துவது என்கிற வித்தையை... அம்பாளை எப்படிச் சுருட்டி என் கைக்குள் வைத்துக் கொள்வது என்கிற கலையை... ஆலய வழிபாட்டின் அருமை பெருமைகளை, மந்திரங்களின் மகத்தான சக்தியை... என்று தெய்வீகத்தின் பல பரிமாணங்களை எனக்குள் வித்தாய்... பதித்தவளும் அந்த தெய்வீகப் பெண்மணிதான்.

தெய்வ பக்தியை நம் மனதுக்குள் அடித்தளமாக அமைத்துக் கொண்டு... அதன் மீது நம் வாழ்க்கைப் பாதையை செலுத்தக் கற்றுக் கொண்டு விட்டால். நாம் எதிர்பாராமலே சில விஷயங்களை பகவான் நமக்காக அனுப்பி வைப்பார். இதில் எள் அளவு சந்தேகம் கூட யாருக்கும் வேண்டாம்.

அம்பாள் உபாசகியான நான்... விஷ்ணுவின் திருத்தலங்களைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. அதற்கு என்று புறப்பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் வீட்டில் கூட திருமால் வழிபாடு கிடையாது. தெய்வங்களுக்கு பக்தர்களின் மீது கருணை பொழிவதில் அப்படி வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

2011ம் ஆண்டில் நான் எழுதும் முதல் புத்தகம் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியதாக இருக்கும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

திருநெல்வேலி.... தூத்துக்குடி என்ற இரு ஊர்களையும் மையமாகக் கொண்டு ஒரே நாளில் ஒன்பது திருப்பதிகளையும் சற்றே ஓட்டத்துடன் தரிசித்து விடலாம். சற்று சிரமமாகவே இருந்தாலும் கூட, நண்பர்களின் மிகச் சிறப்பான ஏற்பாடுகளாலும், உணவு உபசரிப்புக்களாலும், பரந்தாமனின் தரிசனம் பரவசப்பட்டுப் போனது. நவதிருப்பதிகளையும் நாம் தரிசித்து விட்டோமா? உண்மையிலேயே நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து விட்டதா? என்று நம்ப முடியாமல் வியந்து நிற்கும்போதே... அதற்கும் மேல் ஒரு அற்புத தரிசனம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மெய் வருத்தம் பாராமல் புறப்படுங்கள் என்று புத்துணர்ச்சியூட்டி அழைத்துச் சென்றார்கள் பாருங்கள்.... அதற்கு நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். 'அது என்ன அவ்வளவு அற்புத தரிசனம்' என்கிறீர்களா?

திருக்குறுங்குடி - மலைமேல் நம்பி தரிசனம் தான் அது.... அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடக் கூடியது அல்ல. அடர் காடுகள் நிறைந்த மலைப்பிரதேசம், அருவிகளின் அயராத பாய்ச்சல், சாலைகள் போடப்படாத உயிர் பயத்தை ஏற்படுத்தக்கூடிய கரடு முரடான. பெரும்பாறைகள் நிறைந்த பாதை.... இந்தப் பாதையில் காட்டு இலாக்காவின் முரட்டு வாகனங்கள் மட்டுமே கோயில் வரை செல்லுகின்றன. நமது நவீன வாகனங்களில் செல்வது அவ்வளவு உசிதமல்ல. சென்றாலும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் செல்ல முடிகிறது. அதன் பின்னர் யாத்ரீகர்கள் நடந்துதான் மலையேற வேண்டும். எங்களை அழைத்துச் சென்ற நண்பர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி முரட்டு வாகனங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பயணப்பட்டாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை என்கிற நிலைதான்! பகவான் மீது பாரத்தைப் போட்டு விட்டு... “உயிரே போனாலும்... உன் பாத வழிகளில் தானே போகப் போகிறது' என்று மனம் பக்குவப்பட்டு விடுகிறது. 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என்று பழக்கப்பட்டுப் போய்விட்ட ஐயப்ப பக்தர்கள் மலைமேல் நம்பியை தரிசிக்க சமையல் சாமான்களுடன் வந்திருந்து... மலைப் பாறைப் பிரதேசங்களில் அருவி ஓடைகளின் இடையே அங்கே இங்கே என்று சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. இத்தகைய தெய்வீக அனுபவங்களை தருகின்ற திருக்குறுங்குடி நவதிருப்பதியில் சேர்ந்ததில்லை என்றாலும் 108 திவ்ய தேசங்களில் இடம் பிடித்துள்ளது.

ஆலய தரிசனங்களையும், வழிபாடுகளையும் உறவுகளுடனோ... நண்பர்களுடனோ செல்வதே சிறப்புடையதாக இருக்கும் என்பதை அனைவரும் உணருவார்கள். ஒவ்வொரு மனிதனும், தனது வாழ்க்கைப் படகை செவ்வனே செலுத்துவதற்கு ஒரு குருவைத் தேடிக் கொள்ள வேண்டும். அதுபோலவே நற்காரியங்களைச் செய்வதற்கும், யாத்திரைகளை மேற்கொள்வதற்கும் நம்மை அனுசரிக்கக் கூடிய.... நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம். அப்படி ஒரு நல்லோர் வட்டம் எங்களுக்கு இறைவன் அமைத்துக் கொடுத்திருப்பதால்தான்... நல்லனவெல்லாம் தரும் நவதிருப்பதி தரிசனத்தை எங்களால் மேற்கொள்ள முடிந்தது. யாத்திரை போகும் போதே கொஞ்சம் வைஷ்ணவத்தைப் பற்றியும். திவ்ய தேசங்களின் அருமை பெருமைகளையும் தெரிந்து கொள்வோம்.

என்றும் உங்கள்

ஸ்நேகமுள்ள ஷ்யாமா.

About Dr. Shyama Swaminathan :

சாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

பத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.

Rent Now
Write A Review

Same Author Books