Home / eBooks / Nanavodai Ninaivugal
Nanavodai Ninaivugal eBook Online

Nanavodai Ninaivugal (நனவோடை நினைவுகள்)

About Nanavodai Ninaivugal :

இறைவன் எனக்கு அளித்த கொடை, ரசனையும் நினைவாற்றலும். சிறு வயது முதலே நல்லன பலவற்றையும் ரசித்திருக்கிறேன். அப்படி ரசித்துச் சுவைத்த காரணத்தாலேயே அவை என் நினைவில் பதிந்திருக்கின்றன. நான் எதையும் திட்டமிட்டதில்லை. ஆனாலும் எதுவும் கெட்டுப் போனதில்லை. பெரிதாக எதையும் நான் எதிர்பார்ப்பதும் இல்லை. என்றாலும் எனக்கு வாய்த்திருக்கிறது. பல பெரிய மனிதர்களுடன் பழகும் அரிய வாய்ப்புகளை இறைவன் எனக்கு அருளியிருக்கிறான். அவனை நான் வழிபடாது இருந்த காலத்திலும் என்னை நன்றாகவே வழி நடத்தியிருக்கிறான்.

சிறுவயது முதலே எனது பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான். துன்பங்கள் தொடர்ந்த போது கூட, அதுவும் ஒரு அனுபவம்தான் என்று எண்ணி ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால், சுமைகூட சுகமானதாகவே இருந்திருக்கிறது. படித்தது, பார்த்தது, பலர் சொல்லக் கேட்டது, என்று பலவித அனுபவங்கள் என்னுள் இன்னமும் நீங்காது புதைந்து கிடக்கின்றன. அந்த அனுபவங்களை அசை போடுவதுதான் இந்த நூல்.

நினைவுகள் சுகமானவை. அதுவும் சுகமான, சுவையான நினைவுகள் மிகவும் சுகமானவை. இந்த நூல் முழுவதும் அந்த சுகமான நினைவலைகளில் ஆனந்தமாக நீந்திக் கரை சேர்ந்திருக்கிறேன். ஆனால் பாதையைத் தேர்ந்தெடுத்து நான் நீந்தவில்லை. அலைகள் என்னைக் கொண்டு போன போக்கில் போயிருக்கிறேன். கதை சொல்லும் உத்திகளில் ஒன்று நனவோடை முறை (stream of consciousness). கதை தன் போக்கில் போய்க் கொண்டிருக்கும். அதைப் போலத்தான், எனது நினைவுகளை அதன் போக்கிலேயே இந்த நூல் முழுவதும் அசை போட்டிருக்கிறேன். அதனால் தான் நூலுக்கு நனவோடை நினைவுகள் என்று பெயர் சூட்டினேன். நூல் தலைப்பும் அதன் போக்கிலேயே வந்ததுதான். இந்த நூலில் பலரைப் பற்றி சொல்லியிருக்கிறேன். நான் அண்ணாந்து பார்த்தவர்கள், அன்போடு பழகியவர்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள், இருப்பவர்கள், கல்லுாரித் தோழர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பலரும் இந்த நூலில் வருகிறார்கள். அதில் யாருடைய மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். என்னையும் மீறி யாருக்காவது சிறு சிராய்ப்பு ஏற்படுமானால் கூட, அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நனவோடையில் நீங்களும் இறங்கி மூழ்கலாம். முத்துகள் கிடைத்தால், அந்தப் பெருமை, இதில் யாரைப் பற்றி சொல்கிறேனோ அவரைச் சேரும். சிப்பி மட்டுமே கிடைத்தால் இந்தச் சிறியவனே பொறுப்பு. எது கிடைத்தாலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னும் எழுத வையுங்கள்.

அன்புடன்
இரா. குமார்
தொடர்புக்கு: erakumar25@gmail.com

About Era. Kumar :

இரா. குமார், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் கீழப்புளியங்குடியில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரெ. இராமசாமிப் பிள்ளை. தாய் பராசக்தி.

தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர் இரா.குமார். தினமலர், தினகரன் நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர். பத்திரிகை துறையில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

சிறந்த தமிழறிஞரான இவர், எளிய இனிய நடையில் எழுதுவதிலும் மேடைகளில் சுவைபட உரையாற்றுவதிலும் வல்லவர். சிறந்த கவிஞர்.

இது வரை 15 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள ‘நடைமுறை இதழியல்’ நூல் பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை புதுக்கவிதை நடையில் எழுதி வெளியிட்டுள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திம் சிறந்த எழுத்தாளர் விருது, தருமையாதீனம் குருமகாசன்னிதானம் அவர்களால், ‘இறைத்தமிழ் வேந்தர்‘ பட்டம், புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் ‘ஆன்மீகச் சுடர்‘ பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books