எண்பதுகளில் நாங்கள் 'நெம்புகோல்' மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கம் தொடங்கி இன்றளவும் நடத்திக் கொண்டு வருகிறோம். எங்கள் அன்பிற்குரிய பேராசிரியர் பா. கல்யாணி எனக்கு மட்டுமல்ல, எங்களுக்கெல்லாம் தோழரானார். மார்க்சியத்தை அறிமுகப்படுத்தினார். எண்பத்தொன்றின் ஆரம்பத்திலிருந்து 'மனஓசை' பத்திரிகையோடு தொடர்பு. தோழர் சூரியதீபனின் எழுத்து வெகுவாய் கவர்ந்தது. ஆசிரியர் பொறுப்பிலிருந்து “மாணவர் சிறப்பிதழ்” என்று ஒரு மனஓசையைக் கொண்டு வந்தேன். அந்தக் கட்டத்தில் தான் வாசகனாய் இருந்த எனக்கு தைர்யமாய் பேனாப் பிடிக்க முடிந்தது.
கணேசலிங்கனின் "செவ்வானம்" புத்தகத்தை முதன் முதலில் சூரியதீபன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் கொழுந்து விட்டெறியும் என் நெஞ்சிற்கு முன், என் சனங்களின் கதை என்னில் நிழலாடியது. "சாது மிரண்டால் காடுகொள்ளாது” என்பார்கள். சூரியதீபனின் 'காடு' படித்தபிறகு எனக்கு இன்னும் வேகம் அதிகமானது. கதையைப் படித்து கலங்கியிருக்கிறேன். ஒரு சமயம் வாய்விட்டே அழுதிருக்கிறேன்.
இந்த நேரத்தில் என் உணர்வுகளுக்கு கொம்பு சீவிவிட்டு அவ்வப்போது எழுத்துப் பயிற்சி கொடுத்து இன்றளவும் சகதோழராய் இருந்துவரும் பேராசிரியர் பழமலயையும் ஊக்கம் கொடுத்து பாராட்டி வரும் பேராசிரியர் கா. ரா. உலோகியாவையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைக்கிறேன்.
உழைத்து உழைத்துச் சலித்துப்போன அம்மாவும் கண் பார்வையின்றி உழைக்க முடியாமல் இறந்துபோன அப்பாவும் என் தெருவிலுள்ள சனங்களைப் போலவே மிக மிக சாதாரண மனுசர்கள். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் மக்கி மண்ணாகிப் போனதே. எங்களை வயிற்றில் அடித்து எங்கள் உழைப்பைச் சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், ஒரு தலைமை, ஒரு அதிகார வர்க்கம் உங்கள் ஊரைப்போல் இங்கும் உண்டு. இதுதான் என் எழுத்துக் களம். இங்கிருந்து என் எழுத்து ஆரம்பமாகி சமூகத்தில் நடக்கும் அத்துணை அக்கிரமங்களுக்கெதிராக என்னை எழுதவைக்கிறது.
என்னை நான் சமூக மரியாதைக்கேற்ப மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. நான் பழைய தடயங்களை நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் வாழ்வை திருடியவர் யார் யார் என்ற கேள்வி தினம் எழுகிறது. எனக்குத் தேவை சமூக விடுதலை. இந்த அடைபட்ட வாழ்வு விடுபடும் நாள் புதிய சமூக அமைப்பு என்பதை சமுகம் எனக்கு உணர்த்துகிறது. என் வாழ்வின் இலட்சியம் இதை நோக்கித் தொடர்கிறது.
இத்தருணத்தில் கலை, இலக்கிய, அரசியல் பயணத்தில் என்னுடன் உறுதியாய் இவர்களும் தொடர்கிறார்கள்: தோழர்கள் மு. ஞானசூரியன், த.பாலு, ம. சொக்கலிங்கம், ஆ. இரவி, கார்த்திகேயன், பனையபுரம் நடராசன், ஜ, ப. அன்புசிவம், அனந்தபுரம் கோ. கிருஷ்ணமூர்த்தி, ச. சந்திரசேகரன், கோ. செங்குட்டுவன்.
ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளுக்கிடையே கருத்துக்கள் எழுதித்தந்து உதவிய தோழர் சூரியதீபன். நண்பர் பாவண்ணன் ஆகியோருக்கும் புத்தகத் தயாரிப்பில் உதவும் தோழர் ப. தி. அரசுவுக்கும் அச்சகத்தார்க்கும் மற்றும் பெயர் விடுபட்டுப்போன தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
தோழமையுடன்,
விழி. பா. இதயவேந்தன்
விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.
சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:
விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.
அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
- பேராசிரியர் பழ மலாய்
Rent Now