Home / eBooks / Nayam Pada Urai
Nayam Pada Urai eBook Online

Nayam Pada Urai (நயம்பட உரை)

About Nayam Pada Urai :

‘சவேரா ஓட்டல்’ சக்ரவர்த்தியின் வேண்டுகோளை ஏற்று அவரின் குடும்ப விழாவில் பங்கேற்கக் காரில் சென்னையில் இருந்து கிளம்பினேன். என்னுடன் கார்ட்டூனிஸ்ட் மதன், முதுபெரும் இதழாளர்களான ராவ், கிருஷ்ணன் பாலா ஆகியோரும் வந்திருந்தனர். வழியில் ஒரு பீடா கடை அருகே காரை நிறுத்துமாறு மதன் கேட்டுக் கொண்டார். காரை நிறுத்திய டிரைவரிடம், “பீடா கடையில் குட்கா பாக்கெட்டுகள் வாங்கி வாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரின் கைக்கு குட்கா வந்து சேர்ந்தது. அப்போது நான் மதனை நோக்கி, “நீங்கள் இப்போது சாப்பிடப் போவது வேண்டுமானால் குட்காவாக இருக்கலாம் ஆனால் அது உடம்புக்கு பேட்கா” என்றேன்.

இந்த கமண்ட் கேட்டதும் மதன் உட்பட அனைவரும் அனுபவித்து ரசித்துச் சிரித்தனர். அப்போது மதன் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். “எப்போது பேசினாலும் ஏதேனும் ஒரு சிலேடைச் சுவையோடு துணுக்குகளை உதிர்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இவற்றை நாங்கள் மட்டும் ரசித்தால் போதுமா? குறித்து வையுங்கள். பின் தொகுத்து எழுதுங்கள். வாசகர்களுக்கு அதுவே விருந்தாகி விடும் என்று மதன் என்னிடம் கேட்டுக் கொண்டார்.”

அவரின் வழிகாட்டுதலையடுத்து நான் அவ்வப்போது உதிர்க்கும் சிலேடைச் சுவைகளே நூல் வடிவம் பெற்றுள்ளன.

About R. Nurullah :

மனிதர்கள் புளுகலாம். ஆனால் கேமராக்கள் பொய் சொல்வதில்லை. உள்ளதை உள்ளபடியே காட்டும் காலக் கண்ணாடி என்றே இதை வருணிக்க முடியும். பத்து பக்க எழுத்துககள் சொல்லும் கருத்தை ஒரே ஒரு புகைப்படம் சொல்லி விடும் என்பதே உண்மை.

தமிழ் இதழியல் உலகில் போட்டோ புரட்சியை அறிமுகப்படுத்தி வைத்தவர் சுபா சுந்தரம். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிக்கியிருந்தவர் என்ற முரண்பாடு மிக்க அனுபவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, அதற்கு முந்தைய அவரின் புகைப்படக்கலை மீதான அர்ப்பணிப்பைப் பேசுவோம்.

‘தமிழ்நாடு’ தினப் பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றி வந்தவர் சுபா சுந்தரம். புகைப்படங்களின் முக்கியத்துவம் அவருக்குத் தெரியவந்தது. இக்கலைக்கான தேவைகள் இருந்தும் போதிய கலைஞர்கள் இல்லை என்பதையும் அவர் கவனித்தார். அந்த வெற்றிடம் அவருக்கு வெற்றியிடமாக இருக்கும் என்று ஆய்ந்தார். எனவே அதைத் தொற்றத் தொடங்கினார். புகைப்படக் கலைஞராகவே மாறிப்போனார்.

ராயப்பேட்டை காவல் நிலையத்தையொட்டியுள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் அவர் தனியே போட்டோ ஸ்டுடியோவை அமைத்தார். இதற்கு, "சுபா போட்டோ ஸ்டுடியோ" என்று பெயர். இதனால் தான் இவரின் பெயரில் 'சுபா' ஒட்டிக் கொண்டது.

தினமலர் நாளிதழில் 1980ம் ஆண்டு வரை சுபா சுந்தரம் போட்டோக்கள் தான் வெளியாகி வந்தன. பல சமயங்களில் போட்டோ ஆர்டரை நான் அவருக்கு போன் மூலம் அழைத்துச் சொல்லியுள்ளேன். எல்லா பத்திரிகைகளுக்குமே செய்திப் புகைப்படங்களை வழங்கும் தொழில் முறை நிறுவனமாக சுபா போட்டோ ஸ்டுடியோ விளங்கியது. தமிழகம் மட்டுமின்றி இந்தியப் பெருந்தலைவர்களின் படங்களைக் கூட அவர் நிகழ்ச்சிகளின் வாயிலாக எடுத்துள்ளார்.

தான் போட்டோ எடுத்த நெகடிவ்கள் அனைத்தையும் உரிய அறிவியல் முறைப்படி பிரித்து வைத்திருந்தார். எந்த ஆண்டின் எந்த நிகழ்ச்சிப் படம் எனக் கேட்டாலும் அவர் தனது போட்டோ நெகடிவ்களை ...பாசிடிவாக தந்தே தீருவார். இந்தவகையில் இந்திய அரசியல் வரலாற்றின் 50 ஆண்டுகால நிகழ்ச்சிகளை அவர் தன் நெகடிவ்களுக்குள் வாழவைத்துக் கொண்டு இருந்தார். இப்படியாக அவரிடம் ஆயிரக் கணக்கான நெகடிவ்கள் இருந்தன.

அவர் சிறை சென்றபோது தன் ஸ்டுடியோவை காலி செய்ய வேண்டியதாயிற்று. எனவே தனது நெகடிவ் களஞ்சியத்தைப் பத்திரப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். அவரின் மகன் அருண் கூட புகைப்பட நிபுணர் தான். அவரின் ஏற்பாட்டில் நெகடிவ்களை வீட்டுக்கே கொண்டுவந்து காப்பாற்றி வைத்தார். சென்னை, திருவான்மியூர், பத்திரிகையாளர் குடியிருப்பில் தான் அவரின் வீடு இருந்தது.

சுபா சுந்தரத்தின் மறைவுக்குப் பிறகு அவரின் மகனுக்கு டில்லியில் பிரபலமான தொலைக்காட்சியில் வீடியோகிராபர் பணி கிடைத்தது. வீட்டைக் காலி செய்துவிட்டே சென்றார். எனினும் வீட்டை நெகடிவ்களின் சேமிப்புக் கிடங்காக வைத்திருந்தார். சென்னைக்கு அடிக்கடி வரும் அருண், தன் தந்தையின் சாதனை நெகடிவ்களைத் தரிசனம் செய்துவிட்டே சென்று வந்தார். இந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனை…

தினகரன் நாளிதழில் நான் பணிபுரிந்து வந்தேன். இந்த நெகடிவ்களின் வரலாற்று முக்கியத்துவம் சரித்திர மாணவனான எனக்குப் புரிந்திருந்தது. எனவே தினகரன் பொறுப்பைக் கவனித்துவரும் ஆர்.எம்.ஆர். ரமேஷிடம் இதுகுறித்து விரிவாக விளக்கினேன். இதனை விலை கொடுத்து வாங்கிக் கொண்டால் அவை காலாகாலத்துக்கும் சன் குழுமத்தின் அனைத்து ஊடகங்களுக்கும் பயன்படும். அதுவும் 'எக்ஸ்க்ளூசிவ்' என்ற தகுதியோடு திகழும் என்பதை அவருக்குப் புரிய வைத்தேன்.

இதனை வாங்கிக்கொள்ள அவர் சம்மதித்தார். பின்னர் அருணிடம் விபரங்களைத் தெரிவித்தேன். அவரை அழைத்து வந்து ஆர்.எம்.ஆர்.ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தேன். பல கட்டங்களில் இந்த இருவர் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருந்தது. இவர்களுக்கிடையிலான பிணைப்புப் பாலமாக நான் இயங்கி வந்தேன்.

இந்த சூழலில்தான் நான் திடீர் என்று தினகரன் நாளிதழை விட்டு விலக நேர்ந்தது. அதன்பின் சிலமுறை நெகடிவ் பேச்சுவார்த்தைகள் நீடித்தன. நெகடிவ்களைப் பரிமாறிக் கொள்ளும் பேச்சுவார்த்தையும் நெகடிவாகவே முடிந்துவிட்டது. பேச்சு முறிந்து போனது. எனவே பத்திரிகையாளர் குடியிருப்பு வீட்டிலேயே நெகடிவ்கள் தங்கித் தேங்கி இருக்க, அருண் தன் பணியைப் பார்க்க டில்லிக்குச் சென்று விட்டார்.

நானும் பணி மாறிப் போனதால் இதன் மீதான கவனமும் சிதறிப் போனது. மீண்டும் ஒரு முயற்சி செய்து நான் பணிபுரிந்த ‘தமிழ் சுடர்’ நாளிதழின் பொறுப்பில் நெகடிவ்களைப் பெறுவது என்று ஏற்பாடு செய்தேன். அருணிடம் தெரிவித்தேன். "சென்னைக்கு வந்ததும் கிட்டும் தொகைக்குத் தந்துவிடலாம்" என்றார். "பணம் பெற்றுக் கொள்வதை விட சுபா சுந்தரம் என்ற மாபெரும் கலைஞனின் சாதனைப் படைப்புகளைப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதே முக்கியம்" என நானும் தெரிவித்தேன்.

இதன்பின்னர் சென்னைக்கு அருண் வந்தார். தன் வீட்டுக்குள் நுழைந்தார். இமயமே இடிந்து இதயத்தில் பொறுங்கி விழுந்தது போன்ற பேரதிர்ச்சிக்கு உள்ளானார். சென்னையில் புயல் வெள்ளம் என இயற்கைச் சீற்றம் ஊழித்தாண்டவம் ஆடியபோது, இந்த வீட்டுக்குள்ளும் தண்ணீர் ஒழுகி வந்திருக்கிறது. வீட்டில் வசிப்போர் இன்றி வீடு பராமரிப்பு குன்றிக் குலைந்து கிடந்தது. இந்த குறைபாட்டைப் பயன்படுத்திக் கொண்டு மழை நீர் வீட்டுக்குள் பாய்ந்து விட்டது. அனைத்து நெகடிவ்களும் பாழடைந்து போயின. இந்தியாவின் ஐம்பதாண்டு கால வரலாற்றுப் பெட்டகம் குட்டிச்சுவராய்க் கெட்டுப் போனது. ராஜ மகுடத்தில் ஜொலிக்க வேண்டிய வைரக் கற்கள், குப்பை மேட்டுக்குப் போயின. சரித்திரச் சான்றுகள் சரிந்துச் சாய்ந்தன. அதனை இப்போது நினைத்தாலும் மனம் வலித்துக் கொண்டே இருக்கும்.

அபூர்வமான, அபாரமான பண்டைய புகைப்படங்களால் அறியப்பட வேண்டிய சுபா சுந்தரம்... ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு வரலாற்றின் பேரால் அறியப்படுபவராக மாறிப்போனார் என்பதுதான் சோகம். ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி,முகமதலி ஜின்னா, காயிதே மில்லத், அண்ணா, காமராஜர், பெரியார், எம்ஜிஆர் போன்ற தேசியப் பெரும் ஆளுமைகள் பங்கேற்ற ஏராளமான செய்திப் படங்கள் சீரழித்து சின்னாபன்னப்பட்டுப் போயின. தாள முடியாத வேதனை இன்னும்கூட என்னைத் தள்ளாட வைத்துக்கொண்டு இருப்பது இந்த நெகடிவ் பேரழிவினால் தான் எனில் அது மிகையல்ல.

Rent Now
Write A Review

Same Author Books