அத்தியாயத்திற்கு அத்தியாயம் விருவிருப்பு - எதிர்பார்ப்பு நம் நெஞ்சை அள்ளுகிறது. இடையிடையே புரியும்படியான உலகியல் தத்துவங்கள், பாயசத்தில் காணும் முந்திரிப் பருப்புகளாகக் காட்சி தருகின்றன.
இயல்பான நடையோட்டத்துடன் கூடிய இக் குடும்ப நாவலில், பெண்கள் அவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுகின்ற துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு துவண்டு விடாமல் அவைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் அவர்கள் முன்னேறும் போது, அவர்களைத் தெய்வமாக வணங்கத் தோன்றுகிறது.
எத்தனை முறை படித்தாலும் சலிப்புத் தட்டாத படியும், படிக்கப் படிக்க இன்பம் தருமாறும், சமுதாயச் சிக்கல்களையும் பல்வேறுபட்ட மனிதர்களுடைய குணாதிசயங்களையும் கற்பனைத் திறன் கொண்டு, உவமைகளையும் உருவகங்களையும் தந்து, நகைச்சுவை ததும்ப, இந்நூலாசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும்.
கதை சொல்லும் உத்தியும் பாங்கும் அருமை. படிக்கத் தொடங்கினால் முடித்துவிட்டுத்தான் வைக்கத்தோன்றும் வகையில், ஆவலைத் தூண்டில் போட்டு இழுக்கின்றார் ஆசிரியர்.
நூலின் இறுதியில் திருப்புமுனைகளை மிக அற்புதமாகத் தந்து, வெற்றியும், மகிழ்ச்சியும் ஒருசேர அமையும்படி, நாவலை முடித்துள்ள ஆசிரியரின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், படித்து முடித்தபின் நம் கண்முன் நிற்கும் ஆற்றல் படைத்து விளங்குகிறது.
விரச உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட பரிசளிப்புக்கு ஏற்ற, கல்லூரிகளில் பாடமாக வைக்கத்தக்க, திரைப்படமாக்குவதற்கு ஏற்ற நல்ல கதையம்சங்கள் கொண்ட, படிப்பவரைத் தன்வயப்படுத்தும் இந்த அருமையான நாவலை, வசந்தம் - தினகரன் ஞாயிறு மலர் - தொடர்கதையாக வெளிவந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாவல்.
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Rent Now