வாழ்க்கை என்கிற சித்திரம் மாய உறவுச் சங்கிலிகளின் நீட்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உணர்வுக் குவியலாய் வாழ்க்கை மாறிப் போவதற்கும், பரவசத்தின் அர்த்தமாகிறதற்கும் இந்த உறவுகள் பாலமிடுகின்றன.
பொதுவாக உறவுகள் பலதரப்பட்டவை. பெரும்பாலும் உறவுகள் தேயக்கூடியவை. பணத்தால், பொருளால், காலத்தால் அவை அலைக்கலைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் புள்ளியாய் சிறுத்து, மினுங்கி, மறைந்தே போகின்றன. காரணம் எதிர்பார்ப்புகள். எதிர்பார்ப்புகள் வளர்ந்த வண்ணம் இருப்பவை. அதனால் நிறைவேறாமையை, சகிப்பின்மையை அது எந்த தருணத்திலும் எட்டிவிடக் கூடிய சாத்தியம் இங்கே பணத்தால் அதிநுட்ப வியாபார உத்தியோடு உருவாக்கப்படுகிற திருமணம் முதலான உறவுகள் விரைவிலேயே அதிருப்திக்குள்ளாகி, உராய்வு கொண்டு அதன் விளைவாய் படிப்படியாய் தேய்மானம் கொள்ள நேர்கிறது யதார்த்தம்.
எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸ் அவருடைய காதல் மனைவி மரித்த சில நாட்களில் தானும் மரித்துப் போனார். அடுத்தடுத்த நொடிகளில் மரித்துப் போன காதல் தம்பதிகள் ஏராளம் வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு வாழ்வே தன் லைஃப் பார்ட்னர் என்று நினைக்கிற அளவிற்கு ஒரு உறவு உண்டாகிறதென்றால், அது என்ன இலக்கணம்? ஒத்த ரசனையா? வெளிப்படாமல் மனதிற்குள்ளேயே ஒளிந்திருக்கிற ஒத்த ரகசிய விருப்பங்களா? ஒருவரிடம் இல்லாத, ஆனால் அதிவிருப்பத்திற்குரிய ஒன்று மற்றொருவரிடம் இருந்து, இரண்டும் ஒன்றாய் சங்கமிக்கும் போது புதிய படைப்பாக பரிமளிக்கிற அதிசயமா? பரஸ்பரம் நிலவும் புரிதலா? ஒத்த பலங்கள் அல்லது ஒத்திருக்கிற பலவீனங்களா?
எது பிரிக்க முடியாத பந்தங்களை கட்டமைக்கின்றன? அந்த கட்டமைவிற்கு பெயர் தான் பிளட்டோனிக் காதலா? தேய்பிறை அறியாத முழுமதியா? எதிர்பார்ப்பிற்கு எல்லாம் அப்பாற்பட்டதா? நேர்எதிர்மறைகளுக்கு மத்தியில் ஊடாடும் மாயநதியா? ஒப்பீடுகள் கடந்த ஒப்பற்றதன்மையா? விவரிக்க முடியாத பிரமத்தின் சாயல் கொண்டதா?
காதல் பலவிதம். எழுத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். கொள்கையை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். மனிதத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். உயிராய் காதலித்து நீ மட்டும் போதும் என காதலின் நினைவுகளோடு மட்டுமே முழுவாழ்நாளும் வாழ சித்தமாயிருக்கிற ஷாஜகான்களும், செல்மாக்களும், கயஸ்களும், கலீல் ஜிப்ரான்களும், ஃபிரைடா காலேக்களும் இருக்கவே இருக்கிறார்கள். அப்படியான ஒரு காதலுக்காக அந்த காதலன் செய்கிற பிரமிக்க வைக்கிற செயல்கள் தான் இந்த நாவல். இது காதல் கதையா, துப்பறியும் கதையா என இனம்காண முடியாதபடிக்கு விறுவிறுப்பாக அரங்கேறியிருக்கும் ஒரு வித்யாசமான காதல் கதை.
படித்துப் பாருங்கள். படிக்கிற ஒவ்வொருவரையும் இந்த நாவல், இந்த மாதிரியான காதல் மனது ஒன்று மட்டும் நமக்குள் இருந்தால் போதும் என்று நினைக்க வைக்கும்.
காதலுடன், தி. குலசேகர்
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Rent Now