Home / eBooks / Nee Unnai Arindhaal...
Nee Unnai Arindhaal... eBook Online

Nee Unnai Arindhaal... (நீ உன்னை அறிந்தால்...)

About Nee Unnai Arindhaal... :

'புதிய தலைமுறை கல்வி'யில் நான் அசிஸ்டென்ட் எடிட்டராகப் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருந்த வேளை. ஒரு நாள் ஆசிரியர் மாலன் என்னை அழைத்து, 'உங்களுக்குக் கதை எழுதத் தெரியுமா?' என்று கேட்டார். அதற்காகவே காத்திருந்தது போல, "தினமணி கதிர்ல நிறைய கதைகள் எழுதியிருக்கேன், சார்” என்றேன் குழந்தையின் குதூகலத்தோடு.

“நம்முடைய கல்வி இதழ்ல மாணவர்களுக்காக ஒரு தொடர் கொண்டு வரலாம்னு நினைக்கிறேன். அது அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள் பற்றியதா இருக்கணும். அவர்களோட சாதனைகளை ஒரு கதை போல எழுதணும். இதோ, இந்தப் புத்தகத்தைப் போல இருக்கணும்” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் ஆசிரியர்.

குறிப்பிடத்தக்க சாதனை படைத்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை பட்டியலிட்டுக் கொண்டு வரும்படியும் பணித்தார். என் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்? விறுவிறுவென்று சாதனையாளர்களைப் பற்றிய ஒரு பெரிய லிஸ்ட்டை தயாரித்து அவரிடம் நீட்டினேன். அந்தப் பட்டியலிலிருந்து 12 முத்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் ஆசிரியர்.

பத்திரிக்கைத் துறைக்கு நான் வந்ததிலிருந்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். ஆனாலும் ஒரு தொடர் எழுதுவது என்பது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். என்னைவிட என்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் என் அன்பிற்குரிய ஆசிரியர் திரு. மாலன், இந்த அரிய வாய்ப்பை எனக்குக் கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

கொஞ்சம் பதற்றத்துடனும், நிறைய அக்கறையுடனும் புதிய தொடரை எழுதுவதற்கான பணிகளில் இறங்கினேன். இதற்காக ஏராளமான புத்தகங்களைப் படிக்க வேண்டி இருந்தது. சொந்த செலவில் சில புத்தகங்களை வாங்கினேன். நூலகத்திலிருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்தேன். தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக 'இஸ்ரோ'வில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளைத் தொடர்பு கொண்டேன். இப்படி... ஒரு தேர்வுக்குத் தயாராகும் மாணவியைப்போல, பல விஷயங்களைத் தொகுத்து ஒரு கதை வடிவில், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுவாரஸ்யமான கட்டுரைகளாக எழுதி அமெரிக்காவில் இருந்த மாலன் சாருக்கு இ-மெயிலில் அனுப்பிவிட்டு பதிலுக்காக நெஞ்சம் 'திக்... திக்...'கிட காத்திருந்தேன்.

“வெல்டன்! விரைவில் தொடரைத் தொடங்கலாம்!" என்று அவரிடமிருந்து பதில் வந்ததும், உற்சாகத்தில் துள்ளிக் குதிக்காத குறைதான்!

ஆசிரியர் இந்தியா திரும்பியதும், தொடருக்கான தலைப்புகளாக பத்து தலைப்புகளை எழுதி எடுத்துப்போய் அவரிடம் நீட்டினேன். இறுதியில் அவர் ஒரு தலைப்பைக் கொடுத்தார். அதுதான் ‘நீ உன்னை அறிந்தால்...!'

தலைப்பு தயாரானவுடன், ‘புதிய தலைமுறை கல்வி' இதழில் 'நீ உன்னை அறிந்தால்...' தொடர் வருவது குறித்து விளம்பரம் என் பெயருடன் வெளியானது. எனக்குப் பெருமை தாளவில்லை. பத்திரிகைத் துறையில் இருப்பவர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம், மாலன் சார்!

இந்தத் தொடரில் விக்ரம் சாராபாய், ஜகதீஷ் சந்திர போஸ், சதீஷ் தவான் போன்ற விஞ்ஞானிகளின் வரலாறுகளும், டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற கல்வியாளர்களின் சரித்திரங்களும் இடம்பெற்றன. வாராவாரம் தொடர் வெளிவந்து கொண்டிருந்தபோதே, வாசகர்களின் பாராட்டுக் கடிதங்களும் வந்து குவிந்தன. குறிப்பாக, மாணவர்கள் இத்தொடரைப் பெரிதும் ரசித்தனர். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் இத்தொடரைப் படித்துவிட்டு, அறிவியல் அறிஞர்களைப் பற்றி இதுவரை அறியாத தகவல்களையும் தான் அறிந்து கொண்டதாகப் பாராட்டியது மறக்க முடியாத ஒன்று. 'குழந்தைகளுக்கான ஒரு தொடர் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தத் தொடர்' என்று அந்தப் பேரறிஞர் வாழ்த்தியதுடன், இது ஒரு புத்தகமாக வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

இதோ - ‘நீ உன்னை அறிந்தால்...’ தொடர், இப்போது புத்தகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது!

- ஜி. மீனாட்சி

About G. Meenakshi :

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை' போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் `மங்கையர் மலர்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக உள்ளார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்கு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதை 2009-ல் பெற்றவர். அகில இந்திய அளவிலான விருது இது. இசைக் கலைஞர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக சென்னையைச் சேர்ந்த விபன்ச்சி அமைப்பின் தங்க மெடல் பெற்றவர்.

`கிராமத்து ராட்டினம், `பூ மலரும் காலம், `நினைவுகள் நிறைந்த வெற்றிடம்' என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் 2016-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் `அன்று விதைத்த விதை' என்ற இவரது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. சாகித்ய அகாடமி சார்பில் நடத்தப்படும் பல்வேறு கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

`பேசும் ஓவியம், `பரிசலில் ஒரு படகு', `நீ உன்னை அறிந்தால்', `மல்லிகாவின் வீடு' போன்ற சிறுவர் சிறுகதை நூல்கள், `பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்' என்ற நேர்காணல் நூல், `மனமே மலர்ச்சி கொள்' என்ற தன்னம்பிக்கை புத்தகம் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். தினமணி கதிர், கல்கி, தினமலர், மங்கையர் மலர், கவிதை உறவு, கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

Rent Now
Write A Review

Same Author Books