என் மதிப்பிற்குரிய வாசகர்களே! வணக்கம்.
இது என் ஐந்தாவது நாவல். ஒவ்வொரு நாவலுக்கும் கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும், என்னைச் சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் பெரும்பாலும், நிஜ வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், தனிப்பட்ட குணாதிசயங்களாலும் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டு வருத்தங்களுடனேயே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள். என் நாவல்களில் நான் எப்போதும் ஒரு சுமுகமான சுபமான முடிவுகளையே தருவதற்கு விரும்புவதால் சம்பவங்களையும், பின்னணிகளையும், உரையாடல்களையும் அதற்கேற்றபடி அமைத்துக் கொள்கிறேன்.
'நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சி முள்' கதாநாயகி நீலவேணியை ஒரு பத்திரிகையாளராக முதன் முதலில் சந்தித்தபோது அதிர்ச்சியடைந்து, செயலிழந்தும் போனேன். அதுவரை நான் ஊனமுற்றவர்களை சாலைகளில் கடந்து போகும்போதும், திரைப்படங்களிலும் மட்டுமே சந்தித்திருந்தேன். ஆனால் நிஜமாகவே கண்களுக்கு முன் இப்படி ஒரு பெண்... மிக வெற்றிகரமாக புகழ்பெற்ற கல்வி ஸ்தாபனம் ஒன்றில் மிக அரிய பாடப்பிரிவின் பேராசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதை அறிந்ததும் நான் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. அவரே காரை ஓட்டுகிறார்! அவரே ஓரளவு சமையல் செய்கிறார்! எல்லாம் பிரமிப்பாக இருந்தது. அவரை இந்த அளவிற்கு உயர்ந்து நிற்க அவருடைய பெற்றோர்கள் செய்திருக்கிற தியாகத்தை எழுத்தில் வடிக்க இயலாது. அதைவிட உலக மகா வியப்பாக இத்தகைய பெண்ணை தானே முன்வந்து தன் மனைவியாக்கிக் கொண்டு, அவளைத் தாயார் ஸ்தானத்திற்கும் உயர்த்தி வைத்துள்ள அவரின் கணவரைப் பார்த்தபோது... தெய்வப் பிறவி என்பார்களே அவர்தானோ இவர் என்று ஆச்சர்யப்பட்டேன்.
நேரில் வெற்றிப் பெண்மணியாக உலா வந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்மணியை என் கதாநாயகியாகக் கொண்டு... சம்பவங்கள் அனைத்தையும் கற்பனையாகக் கொண்டு இந்த நாவல் பிறந்துள்ளது.
உடல் குறைகள் உள்ளவர்களிடம் நம் அன்பை வெளிப்படுத்துவது... அவர்களுக்கு எத்தகைய தெம்பைத் தரும் என்று என் புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அன்பு செலுத்துவது ஒன்றுதான் இந்தச் சமுதாயத்தின் உயர்வுக்கு உயிர் நாடி என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அத்தகைய புரிதலை அனைவருக்கும் ஆண்டவன் அருள வேண்டும் என ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி. என்றும் உங்கள்
ஸ்நேகமுள்ள சியாமளா
சாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.
பத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.
Rent Now