வாழ்க்கை என்பது எதிர்பார்ப்புகளும் திடீர்த் திருப்பங்களும் நிறைந்தது. வெற்றி தோல்விகளும், மகிழ்ச்சியும், சோகமும் ஏமாற்றங்களும் இதில் சகஜமானவை.
எல்லோருக்குமே வாழ்க்கை சுமுகமானதாய் இதமானதாய் அமைந்து விடுவதில்லை. அதற்குக் காரணம் அவரவர் தலைவிதி என்பார்கள். தங்களுடைய கஷ்டங்களுக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று நினைப்பவர்களும் உண்டு, உலகத்தில் தான் மட்டுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக சிலருக்கு பிரமை இருப்பதுண்டு.
கதையில் வரும் மனோஜும் அப்படிப்பட்டவன்தான். அவனுடைய சுயநலமும் பிடிவாதமும் அவனை மட்டுமல்ல சுற்றியுள்ள மற்றவர் களையும் பாதிக்கிறது. என் தந்தையின் நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நடந்த திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. காரணம் அந்தப் பெண் ஒரு மனநோயாளி. அதைப் பெண் வீட்டார் மறைத்து வைத்து கலியாணம் செய்து விட்டது. பிறகுதான் தெரிய வந்தது.
சில செய்திகள் என்னை வினோதமான முறையில் பாதிக்கும் இந்தக் கதையும் அதன் விளைவுதான்.
லஷ்மி ரமணன்இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.
விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.
இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.
கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.
இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Rent Now