சகோதரி அகிலா ஒரு தமிழ் அறிஞர். என் மனைவியின் மூலம் அறிமுகமானார். அவரது அற்புதமான மன வலிமை, அவரது தெளிவு மற்றும் அவரது மொழி வெளிப்பாடுகள் எனக்கு ஆச்சரியமூட்டின. அவர்களுக்கு கடுமையான இதயநோய் இருப்பதை தெரிவிக்க வேண்டிய அந்த நாள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்களுடைய மன வலிமையை சோதிப்பதாக அமைந்தது. என்றாலும் அவருக்கு மேலும் ஒரு பரிச்சையை நான் வைக்க நேர்ந்தது. அவரின் பைபாஸ் அனுபவத்தை எழுத்து வடிவத்தில் வடிக்க கூறினேன். இந்த புத்தகத்தில் உள்ள முழு அனுபவமும் அவரது உரையாடலில் உங்களை ஒரு கண்ணுக்கு தெரியாத பார்வையாளராக ஆக்குகிறது.
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்கிற வள்ளுவ பெருந்தகையின் கூற்றிற்கு இணங்க சகோதரி அகிலா மெய்ப்பித்து மெய்யுணர்ந்து மெய்பொருள் கண்டு கூறியுள்ளார். அவரின் நகைச்சுவை உணர்வும் உரைநடையின் தெளிவும் அருமை. மருத்துவத்தின் மருந்தற்ற பகுதியை அழகாக எடுத்து உரைத்துள்ளார், மருத்துவத்தின் மகத்துவமே அம்மறைபொருள் தானே. அவரின் அனுபவமே மற்றவர்களுக்கு ஒரு விளக்க பாடமாக உள்ளது. நாங்கள் நோயாளிகளுக்கு ஆன்ஜியோக்ராம் மற்றும் பைபாஸ் சிகிச்சை பற்றி கூறுவதை இந்த புத்தகத்த்தின் வாயிலாக எளிதாக்கியுள்ளார். அவரின் எழுத்து பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
டாக்டர் கே சொக்கலிங்கம்,
இருதய மருத்துவர்,
ராயல் கேர் மருத்துவமனை,
கோயம்புத்தூர்.
அகிலா கவிஞர், எழுத்தாளர், ஓவியர் மற்றும் மனநல ஆலோசகரும் ஆவார். கோவையைச் சேர்ந்த இவர், மனநல ஆலோசனை, கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் திறனாய்வு, ஓவியம் போன்ற தளங்களில் இயங்கி வருகிறார்.
கவிதை தொகுப்புகள், சின்ன சின்ன சிதறல்கள் (2012), சொல்லிவிட்டுச் செல் (2013), மழையிடம் மௌனங்கள் இல்லை (2016), ‘மணலில் நீந்தும் மீன்கள்’ (2018) என நான்கு தொகுப்புகள் வெளியிட்டு உள்ளார். இவரின் கவிதைகள் சில, Cultural Centre of Vijayawada & Amaravati என்னும் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘International Multilingual Poetry Anthology of Women Poets’, ‘Amaravati Poetic Prism’ போன்ற தொகுப்புகளில் வெளிவந்துள்ளன. சீ. சிந்துஜா அவர்கள் முனைவருக்கான ஆய்வில் இவரை இவரின் கவிதைகளை ஆய்வு செய்து, ‘கவிஞர் அகிலா’ என்ற நூல் வடிவில் வெளியிட்டுள்ளார்.
சிறுகதை தொகுப்புகள் இரண்டு, ‘மிளகாய் மெட்டி’, ‘மண்சட்டி’ என்ற பெயருடன் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் கணையாழி, கல்கி, கனவு போன்ற பல இதழ்களில், இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரின் சிறுகதைகள், பெண்ணியக் கதைகளாக, தொகுப்பு நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. முனைவர் பிரேமா அவர்களின் ‘உடைபடும் மௌனங்கள்’ என்னும் தொகுப்பில், பெண்ணின் வலியும் மௌனமும் என்னும் தலைப்பின் கீழ் ‘மிளகாய் மெட்டி’ சிறுகதை வெளிவந்துள்ளது.
பெண்கள் குறித்த சுவாரசிய கட்டுரை நூலாக, ‘நாங்கதாங்க பெண்கள்’ (2015) வெளிவந்திருக்கிறது. குறுநாவல் ஒன்றும் ‘சம்முகம்’ 2018 யில் வெளியாகியுள்ளது. இந்நூலுக்கு பைந்தமிழ் இலக்கிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டில் நடந்த, இவருடைய இருதய அறுவை சிகிச்சை அனுபவங்களை, ‘நின்று துடித்த இதயம்’ என்னும் நூலாக எழுதியுள்ளார். பெண் சார்ந்த தன் அனுபவ, இருதய அறுவை சிகிச்சை நூல் இதுவே தமிழில் முதல் நூலாகும். இந்நூலுக்கு ‘நெருஞ்சி இலக்கிய படைப்பாளுமை’ விருது கிடைக்கப்பெற்றது.
ஆங்கிலத்திலும் எழுதும் வல்லமை பெற்ற இவர், ஆங்கிலத்தில் ‘I Named The Village’ என்னும் கவிதை நூல் ஒன்றையும் 2019யில் வெளியிட்டுள்ளார்.
இவை தவிர, பெண் சார்ந்த Semi-abstract வகையான ஓவியங்களில் தேர்ந்தவர். பெண் ஓவியர்கள் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. கோவை சித்ரகலா அகடெமியில் உறுப்பினராக உள்ளார்.
Rent Now