எண்ணற்ற வானொலி நாடகங்களும், தொலைக்காட்சி நாடகங்களும், ஒருசில மேடை நாடகங்களும் எழுதியிருக்கிற நான் அவை என் நேயர்களுக்குப் போய்ச் சேருகிறபோது கிடைக்கிற வரவேற்பு, தருகிற உற்சாகத்தில் இப்போது இதனை நாடக வரிசையில் என் ஆறாவது நூலாகத் தருகிறேன். நூலின் தலைப்பாக அமைகிற 'நிழல் தேடும் நெஞ்சங்கள்' என்ற நாடகத்தை, சென்னை வானொலி நிலையம் தயாரித்து ஒலிபரப்பியது. "தடங்கலுக்கு வருந்துகிறோம்” நாடகம் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று. இவ்விருநாடகங்களுக்குமே நல்ல வரவேற்பிருந்தது. ஏராளமான என் நேயர்கள் பாராட்டியதின் விளைவாகவே மீண்டும் மீண்டும் ஒலிபரப்பாகிற வாய்ப்பு இவற்றிற்கு வாய்த்தது. அதனாலேயே இவை ஒரு அமரத்துவத்தைப் பெறுவதற்காக நூல் வடிவம் தருகிறேன்.
நேர்மையாக வாழ நினைக்கிறவனை, சமூகமும் சூழ்நிலைகளும் நேர்மையாக இருப்பதற்கு உதவ வேண்டுமென்கிற சீரியஸான விஷயத்தை நிழல் தேடும் நெஞ்சங்களிலும் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கிற ஒரு இளைஞன் தன் திருமண முயற்சிகளிலெல்லாம் தோல்வியுற்று தொல்லைகளில் மாட்டிக் கொள்கிற சிரிப்பலைகளை ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்', நாடகத்திலும் தந்திருக்கிறேன்.
இவ்விரு நாடகங்களையும் கல்லூரிகள், பள்ளிகள், அலுவலக மனமகிழ் மன்றங்கள் இவையெல்லாம் மேடையேற்றி மகிழலாம்; மகிழ்விக்கலாம். வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் எழுத விரும்புகிறவர்களுக்குப் பயிற்சியாகவும் இந்நூல் அமையும். படித்தும், நடித்தும் மகிழ இந்நூலைப் பரிந்துரைக்கிறேன்.
- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சமூக ஆர்வலர், பேச்சாளர், பத்திரிகையாளர்.
96 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவர்.
கலைமாமணி, இலக்கியப் பேரொளி, கவிச்சிற்பி, ஞாலக் கவிஞர், எழுத்துச் செம்மல், நாடகப் பேரொளி, சேவாரத்னா போன்ற விருதுகள் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ( FETNA ) வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். கனடா உதயன் இதழின் உலகளாவிய இலக்கியச் சாதனையாளர் விருது பெற்றவர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கனடா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்று வந்தவர்.
ஆசிரியர், வெளியீட்டாளர் - கவிதை உறவு இலக்கிய மாத இதழ், நிர்வாக அறங்காவலர் - கவிதை உறவு சாரிட்டபுள் டிரஸ்ட்.
புகழ் வாய்ந்த ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். ஊடகவியல், வாழ்வியல், பத்திரிகையியல் பயிற்சியாளர்.
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
உலகெங்கும் விரிந்த நட்பு வட்டத்தைப் பெற்றிருக்கிற வெற்றியாளர்.
Rent Now