சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மிடையே இருக்கின்றன. உலகில் உள்ள மக்களின் சிந்தனைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதுதான் இந்த உலகத்தின் விந்தை. ஆனால் ஒரு சில விஷயங்கள் மட்டும் இறைவன் மனிதனிடம் இயற்கையாகத் தோற்றுவித்துள்ளான். அதில் ஒன்றுதான் ஆணைப் பெண் ஈர்ப்பதும், பெண்ணை ஆண் ஈர்ப்பதும். இந்தச் சங்கமத்தின் புனிதத்தில்தான் உயிர்ப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன ஆனால் இந்த ஈர்ப்பால்தான் எத்தனை சங்கடங்கள்...
பெண்ணுக்குக் கத்தி மேல் நடப்பது போன்ற சோதனைகள்...
காதலனின் சந்தேகம் என்ற பேய் அன்பின் கட்டிடத்தில் நின்று கூத்தாடும் பொழுது காதலி வெந்து உருகிப்போவது சமுதாயத்தின் சகஜ சாத்தியமாகிறது. காதலனுக்கு ஆகட்டும், கணவனுக்கு ஆகட்டும் “பொஸஸிவ்னெஸ்” இருந்தால்தான் குடும்பம் என்ற கூடு கால வெள்ளத்தின் ஓட்டத்தில் கலகலத்துப் போகாமல் நிற்க முடியும்.
நர்ஸ் மாதவி இங்கே கத்தி மேல் நடக்கிறாள். மூளை கலங்கியவனுக்குச் செய்யும் சேவைகூட காதலனின் கண்களுக்குக் காமாலை மஞ்சளைப் பூசுகிறது. அன்பினால் பலப்பட்டவர்களுக்குச் சந்தேகம்கூட ஊடலாக ஆனபின்பு—வாழ்க்கை சுவை கூடும் என்னும்போது நவரசங்களும் வாழ்வில் இருக்க வேண்டும் அல்லவா? அன்பை யாசித்து நிற்கும் பொழுது அது பெண்ணின் தோல்வி என்றும் பலவீனம் என்றும் சொல்லுவார்கள்.
யாசித்து தன்னை நிரூபித்து வெற்றி கொள்ளும் பெண்ணினம்--ஆண்மையை அடக்கியாள்கிறது என்பதுதான் நிதர்சனமான நிரூபணம்!
நானே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் எப்படி? நீங்கள் நர்ஸ் மாதவியைப் படிக்க வேண்டாமா!
‘பூக்கள் மென்மையானவை’ படித்து முடித்து என் அன்பு ரசிகர்களே 'நர்ஸ் மாதவியும்’ ஒரு அனிச்சம் மலர்தான் என்பதனைப் படித்துப் பார்த்து உணர்வீர்கள் என்றுதான் உங்கள் கைகளில் சமர்ப்பிக்கிறேன்.
- லட்சுமி ராஜரத்னம்
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Rent Now