Home / eBooks / O! Pakkangal - Part 3
O! Pakkangal - Part 3 eBook Online

O! Pakkangal - Part 3 (ஓ! பக்கங்கள் - பாகம் 3)

About O! Pakkangal - Part 3 :

வணக்கம்.

‘‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாகத் திரைக்கு வந்து சில தினங்களே ஆன...‘ என்று அறிவிப்பதைப் போல நானும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய இதழியல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு வார இதழில் வெளிவந்துகொண்டிருந்த ‘காலம்’ (கருத்துப் பத்தி), இன்னொரு வார இதழுக்கு இடம் மாறிய ‘பெருமை’க்குரியது என்னுடைய ‘ஓ’ பக்கங்கள். அதற்குக் காரணமான சில கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.

இதழியல் வரலாற்றில் எனக்கு இன்னும் சில ‘பெருமைக’ளும்’ உண்டு. நான் வேலை பார்த்த பத்திரிகையிலேயே (முரசொலி) என்னை விமர்சித்து கார்ட்டூன் போடப்பட்டது. என் கட்டுரையைக் கண்டிப்பதற்காக பெரும் தொகை செலவிட்டு ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தப் ‘பெருமை’களையெல்லாம் எனக்கு அளித்த தி.மு.கவை ஆதரித்து ஒரு காலத்தில் நான் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன் என்பதும் நினைவுகூரத்தக்கது.

தி.மு.கவையும் கலைஞர் கருணாநிதியையும் விமர்சித்துத் தாக்குவதற்கு மட்டுமே நான் அதிகமான ‘ஓ’ பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்று ஓர் அவதூறு தொடர்ந்து, குறிப்பாக இணைய வலைப்பூக்களில் பரப்பப்படுகிறது. அது பொய்யானது என்பதை இந்தத் தொகுப்பே நிரூபிக்கும். சமூகத்தைப் பாதிக்கும் சகல விஷயங்கள் பற்றியும் எனக்கு அக்கறை உண்டு என்பதற்கு அடையாளமாக இதில் பல துறை பற்றிய கட்டுரைகள் உள்ளன. தி.மு.க, கருணாநிதி பற்றிய கட்டுரைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை அத்தனையும் ஓராண்டில் (2007) வாராவாரம் எழுதியவை.

எல்லா விஷயங்களும் விவாதிக்கப்படவேண்டும். எதுவும் புனிதமானதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதோ அல்ல. எதற்கும் உணர்ச்சிவசப்படுவது, நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை மட்டுமே காட்டும். ஆனால் அது மட்டுமே எந்தத் தீர்வையும் தராது. அறிவுப்பூர்வமான அணுகுமுறையில்தான் தீர்வை அடைய முடியும். பரஸ்பர அன்பும் மதிப்பும் சமத்துவமும் ஒருவருக்கொருவர் காட்டும் சமூகமே நமது கனவு. இதற்குத் தடையாக இருக்கும் எல்லாம் அடையாளம் காணப்படவேன்டும். என் ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னால் இருக்கும் என் பார்வையும் நோக்கமும் இதுவே.

பல விதமான அரசியல் நிர்ப்பந்தங்களை நீண்ட காலம் தாக்குப் பிடித்து என் கட்டுரைகளை வெளியிட்டு வந்த ஆனந்தவிகடன் இதழுக்கு என் நன்றி. இத்தொகுப்பின் மூலம் என் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியிருக்கும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் நன்றி. என் ஆதர்சங்களான பாரதி, பெரியார் ஆகியோருக்கும், என்னைத் தொடர்ந்து இயங்கவைத்திருக்கும் எண்ணற்ற வாசகர்களுக்கும் இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.

-ஞாநி

About Gnani :

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Rent Now
Write A Review