Home / eBooks / Oliyin Nizhalil...
Oliyin Nizhalil... eBook Online

Oliyin Nizhalil... (ஒளியின் நிழலில்...)

About Oliyin Nizhalil... :

ஒளியின் நிழலில்...புதினத்தில் மின்னலாய் ஒளிக் காட்டும் நடிகை பிரேமலதா மனித வாழ்க்கையின் ஒரு பிரதிபலிப்புதான். காதலும் தாய்மையும் இரக்கமும் இதயமும் கொண்ட இந்தப் பேதைப் பெண்ணின்பால் ஆபாஸங்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன. நல்லதோர் வாழ்க்கை வாழ நாடும் அந்த பெண்னிடம் சமூகம் துச்சாதனமாய் நடந்துகொள்கிறது. நல்லதோர் வீணை புழுதியில் வீசப் பட்டிருக்கிறது.

தன் குடும்பம் காக்கப் புறப்பட்ட இந்த பெண்ணின் ஊதியத்தில் உல்லாசம் தேடும் அவள் இரத்தத்தின் இரத்தங்கள் அவள் இதயத்தைக் குத்தி கிழிக்கின்றனர். அவளால் வாழ்வு பெற்றவர்களே அவள் வீழ்ச்சியில் கெக்கிலி கொட்டி சிரிக்கின்றனர்.

பொதுவாய் சினிமா... சினிமா நடிகை என்றவுடன் ஆவலாய் வேடிக்கை பார்க்கும் நாம் அவர்களை வேடிக்கைப் பொருளாக மட்டுமே பார்க்கிறோம். அவர்களுக்கும் பிரச்னைகள் உண்டு, கவலைகள் உண்டு என்பதை மறந்து விடுகிறோம். உண்மையோ பொய்யோ அவர்கள் பற்றி வரும் சம்பவங்களைக் கிசுகிசுப்பாய் சொல்லி மகிழும் மனித மனம் ஏராளம்.

எல்லோர் கவனமும் எளிதில் படியும் கண்ணாடி மாளிகை அது. அங்கே கண்ணகியே நடந்து போனால்கூட மாதவிதான் போகிறாள் எனச் சாதிப்பதில் சுகம் காண்பவர் ஏராளம். அப்படி சாதிப்பதில் ஊனப்பட்ட மனங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது.

நடிகைகள் எனச் சொல்லும்போதே அவர் கள் என்னமோ மிக மோசமான ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை நடத்தும் பிறவிகள் என எண்ணும் மனிதர்கள் பலர் உண்டு. யாரோ ஒரு சிலர் அப்படி இருக்கலாம். அது தவிர்க்க முடியாத தாய் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அங்கே நடமாடுபவர்களும் பெண்கள்தான் அவர்களுக்கும் கற்பு உண்டு; தாய்மை உண்டு; காதல் உண்டு என நினைப்பவர்கள் ஒரு சிலராகக்தான் இருக்கிறார்கள்.

ஒன்றை நினைத்துப் பார்த்தால் சிகப்பு விளக்கு என முத்திரை குத்தப்பட்ட பெண்ணை யாரும் பழிக்கவே மாட்டார்கள். அவளுடைய அந்நிலைக்கு யார் காரணம்; ‘எவனொருவன் தவறு செய்யாதவனோ அவன் இவள் மீது முதல் கல்லெறியுங்கள்’ என இயேசுபிரான் அருளினாரே... எந்தப் பெண்மையின் சரிவிற்கும் ஒரு ஆண்மகன்தான் மூலக் காரணம். தவறு செய்யக் காரணமாய் இருந்த ஆண்களைவிட்டு தவறு செய்த பெண்ணை மட்டும் நாம் சபித்தல் எங்ங்னம் நியாயம்.

‘கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்’ என்று சொல்லி இருவரும் நேர்மையாய் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் நம் மகாகவி.

ஆசிரியை தனக்கே உரித்தான பாணியில் வாழ்க்கையில் தென்படும் மனிதர்களின் மனங்களைக் கெல்லிப் பார்த்து எழுத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதில் வரும் மாந்தர்கள் ஆசாபாசங்களும், ஆபாசங்களும், உல்லாசமும், சுய நலமும் மிக்க கதை மாந்தர்கள், நாம் அன்றாடம் வாழ்வில் பார்க்கும் நபர்கள். பணம் என்றால் வாய் திறந்து அதைக் கொண்டு வந்து கொடுப்பவளை எள்ளி நகையாடும் எத்தர்கள்.

பேரழகு பெண்ணின் மூலதனம். அந்த பேரழகே அவளுக்குப் பெரு விலங்காகி விடுகிறது. வீட்டில் எரியும் அகல்விளக்கை வீதியில் ஏற்றி விட்டு அதன் வெளிச்சத்தில் குளிர் காய நினைக்கும் எத்தர்களை இங்கே அடையாளம் காட்டுகிறார் ஆசிரியை.

About Hamsa Dhanagopal :

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Rent Now
Write A Review

Same Author Books