ஐந்து வயது குழந்தையையும் மனைவியையும் வீட்டை விட்டுத் துரத்திய பிரகதீஸ்வரன், பாசப் பிணைப்பால் இருவரையும் கண்டுபிடிக்க, தேடாத திசையில்லை; சுற்றாத 'ஊரில்லை; வினவாத ஆளில்லை; ஏறி இறங்காத அனாதை ஆஸ்ரமங்களில்லை.
சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கு வாரிசில்லையே என்ற ஏக்கத்தால் நிலைகுலைந்து பேதலித்து அலைகிற நேரத்தில், நண்பனின் முயற்சியால், அனாதை ஆஸ்ரமத்தின் உதவியால் கல்லூரியில் படிக்கும் தன் மகளைக் கண்டு பிடித்து விடுகிறான், பிரகதீஸ்வரன் ; மகளோ வெறுப்போடு பார்க்கிறாள். தாயை இழந்து தவிப்பதற்கும் அனாதை இல்லத்தில் தான் அடைக்கலம் புகுந்ததற்கும் தன் தகப்பனார்தானே காரணம் என்ற கடுங்கோபம் அவள் பாசத்தின் குறுக்கே நின்றது.
இதற்கிடையில் சொத்துக்கு வாரிசான மகளைக் கொன்றுவிட்டு, பிரகதீஸ்வரனை மயக்கி கைக்குள் போட்டுக் கொண்டு, சொத்தை அபகரித்துவிடலாம் என்ற திட்டத்தில் செயல்பட்ட அனைவரையும் ஏமாற்றி, அவர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டு விட்டு, மகளை சொத்துக்கு வாரிசாக்கி விட்டு இறந்து விடுகிறான், பிரகதீஸ்வரன்! இதுவே மகரிஷியின் படைப்பான "ஊசிமுனை".
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Rent Now