Home / eBooks / Ore Kadal
Ore Kadal eBook Online

Ore Kadal (ஒரே கடல்)

About Ore Kadal :

காதல் என்பதற்குள் பயணித்துப் பார்த்ததில் அது எதிர்பார்ப்பை கடந்துபோய் நிமிர்ந்து நிற்கிற ஒரு மனநிலை என்று தோன்றுகிறது. இங்கே எதிர்பார்ப்புகள் இல்லாத உறவு இருக்கிறதா என்ன... இருந்தால் அங்கே உத்தரவாதமாய் காதல் இருக்கலாம். உள்ளது உள்ளபடி நிறைகுறைகளோடு அந்த உயிரை அப்படியே ஏற்றுக்கொள்வது என்று ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. அதையே அப்படிப்பட்ட நிறைகுறைகள் நிறைகுறைகளாகவே தெரியாதது என்று சொல்வது இன்னும் நெருக்கமாய் தோன்றுகிறது. பரஸ்பர புரிதல் அவர்களின் சுதந்திரத்திற்கு துணை சேர்க்கிறது. வாழ்வை எளிமையான இலக்கணத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது. சௌகர்யமாய் கம்ஃபர்டபிளாக பரஸ்பரம் உணரச் செய்கிறது. அங்கே தவறென்பதும் கிடையாது... சரியென்பதும் கிடையாது... இரண்டிற்கும் நடுவே மையத்தில் என எல்லா விசயத்திலும் ஒரு புள்ளியில் மையம் கொண்டுவிடுகிறது. அது சாத்தியப்பட்டு விடுகிறபட்சம் எது இல்லாவிட்டாலும் எல்லாமும் இருக்கிறதாய் உணரச் செய்கிறது. அது வானத்திற்கு கீழே உள்ள அத்தனையையும் புரிவியலோடு உணரச் செய்கிறது.

இங்கே காதலை அப்படி வெளிப்படுத்திவிட முடியாதபடி அனைவருக்கும் இந்த முரண்பட்ட சமுதாயம் மாயமாய் தடை விரிக்கிறது. அனைவரையும் வெளிமுகத்தோடும், உள்முகத்தோடும் இருக்கும்படி ரகசியமாய¢ நிர்பந்தித்துக் கொண்டேயிருக்கிறது. அவள் அப்படிப்பட்ட வதைப்புக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு பெண் தான். அவளுக்குள் காலங்காலமாய் அடக்கி வைக்கப்பட்டிருந்து இருக்கிற காதல் பனிமலையாய் உறைவு கொண்டு இறுகி விரிந்தபடி கிடக்கிறது. அது அவளை கடந்துபோகவிடாமலும், சும்மா இருக்கவிடாமலும் படுத்துகிறது. சொல்லின் உணர்வு வழியாய் பாதாளம் பயணித்து அதன் வேர் தொட்டு அந்த உணர்வின் ஒட்டுமொத்த குறியீடு பதுங்கியே யிருக்கிறது. வழிமேல் விழி வைத்து வழியறியாத மனங்களோடு. எதையும் வெளிக்காட்ட அனுமதிக்காமல் காலம் சங்கிலியிட்டிருந்தது. அங்கே அரங்கேற்றவே படாத குளுமை பனிமலை யாய் உறைவுற்று ஒரு பக்கம் கிடந்தது. எரிமலைகள் அருகிலேயே வாய் பொத்திய மௌனிப்பில் இருந்தது. சூறாவளி பக்கத்திலேயே அடைபட்டு புழுங்கிப்புழுங்கி உப்புப் படிவ மலைத்திட்டு களாகி அதனுள் இமையறுத்து விழித்திருந்தது. தூண்டிலில் மாட்டிக் கொண்டிருந்த அலைகளின் ஒடுக்கம் சுனாமிகளாய் பரிணமித்தபடி இருந்தது.

அவள் அவளின் சுதந்திரமான உணர்வுகளை சுற்றிலும் கட்டமைத்திருந்த கடல் சுவற்றை ரகசிய அழுத்தங்களால் அழுத்தித் திறக்க முனைந்து கொண்டேயிருந்தாள். வழி கிடைக்காமல், வழி தெரியாமல் அவளின் உணர்வலைகள் முட்டிமோதி அவளுக்குள்ளாகவே காலங்காலமாய் வெளி காண துடித்து, நசுங்கி, பொசுங்கி, கசங்கி, கலங்கி ஆழ்மனதுக்குள் ஓசையற்ற ஓலங்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தது. அவளுக்குள் இருந்த அந்த உந்துதல் மட்டும் குறையாமல் கூடிக்கொண்டேயிருப்பதை அவளின் அந்தரங்க பார்வையால் உணர முடிந்தது. உள்ளே சடங்கு சம்பிரதாயங்கள் கடக்கும் உடைப்புக்கான தருணத்திற்காக முண்டிக்கொண்டேயிருந்தது.

எப்போதும் பெண் மீது நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை அவளை சராசரியாக காட்ட வைக்கிறது. அவளின் உள்மனது அதை உடைத்தெறிந்து கொண்டு தன் காதலை பீய்ச்சி அடிக்க சமயம் பார்த்துக் காத்திருக்கிறது.

அவனுக்கு காதலின் அர்த்தம் பிடிபடுவதேயில்லை. அதனால் காதலே அர்த்தமற்றதாய் அவனுக்கு ஆகிப்போகிறது. அவளே காதலாகி காதலின் அர்த்தமுமாகி உணர்த்திச் செல்கிறாள்.

இந்த சமுதாயத்தில் ஆணுக்குள் அப்படியரு காதல் வருகிறபோது முதல் மரியாதை தந்து சிலாகிக்கப் படுகிறது. ஆனால் அதையே அதே உணர்வுகள் கொண்ட ஒரு பெண்ணுக்குள் என்கிறபோது நினைத்துப் பார்க்கக்கூட தயங்குகிறது. இந்த முரண்பட்ட கோணல் சமுதாயத்தின் விதிமுறைகள் அப்படித் தானே இயங்குகிறது.

அடக்கி வைக்கப்பட்டிருக்கிற உணர்வுகளின் குறியீடாய் அவள் இருக்கிறாள். யுகம்யுகமாய் அடக்கிவைக்கப்பட்டிருந்த காதல் அவளின் ஜீன்களில் தேங்கிப்போன படிவங்களாய்... உயிர் படிவங்களாய் அடர்வுகொண்டு தொடர்ந்தவண்ணமிருக்கிறது. அவள் காலங்காலமாய் மறுக்கப் பட்டு வந்திருக்கிற காதலின் ஒட்டுமொத்த அடையாளமாய் இருக்கிறாள். தடை போடப்போட தேங்கிப்போய்விடவில்லை. அடத்தியாகி, மட்டம் உயர்த்தி ஒரு நாள் நதி அந்த மேட்டின் மீதும் ஏறி அத்தனையையும் நொறுக்கிக்கொண்டு கடக்கும் என்கிற நியதியை நிரூபணமாக்குகிறது. அது ஒரு புள்ளியில் இலக்கணம் தகர்த்து அவனுக்குள் சீறிப்பாய்கிறது. புதிய இலக்கணமாய் பரிணமித்து நிமிர்வு கொள்கிறது. சுனில் கங்கோ பாத்யாயா எழுதிய கதையை மூலமாக கொண்டு சியாம் பிரசாத் எழுதிய திரைக்கதையை அடியற்றி உருவாக்கப்பட்ட இந்த படைப்பு காதலின் அறியாத யதார்த்தத்தை நேர்மையோடு உங்கள் மனதில் பதிவுசெய்து புதிய புதிய சிந்தனானுபவத்தை விதைத்துச் செல்லும்.

About Kulashekar T :

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Rent Now
Write A Review

Same Author Books