Home / eBooks / Oru Christmas Thoothan
Oru Christmas Thoothan eBook Online

Oru Christmas Thoothan (ஒரு கிறிஸ்மஸ் தூதன்)

About Oru Christmas Thoothan :

மிகவும் தற்செயலாகத்தான் இது நிகழ்ந்தது. வரப் போகும் கிறிஸ்மஸ்க்காக ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர்களுக்காக ஒரு சிறு நாடகம் ஒன்றை செய்து தரும்படி ஏழு வருஷங்களுக்கு முன்பு நண்பர் அருமைதாஸ் கேட்ட பொழுது மறுக்க முடியாத சூழ்நிலையில் ஒப்புக் கொண்டேன், தயக்கங்களுடன்.

இதற்கு காரணமிருந்தது. வழக்கமான நாடக பாணிகளில் அதாவது கிறிஸ்மஸ்க்கு என்று போடப்படுகிற நாடகங்களில் எனக்கு சம்மதமில்லை. ஆனால் அதுவரை நான் பார்த்த அளவிற்கு இருந்த கிறிஸ்மஸ் நாடகங்கள் எல்லாமே பெரும்பாலும் நிகழ்ந்த அம்மா பெரும் சரித்திர நிகழ்வின் மிக வெளிறலான பிரதிகளாக இருந்தன. அமைதியான ஒரு மரியாள். தாடியும் தடியுமாய் யோசேப்பு, பொம்மை குழந்தை யேசு, சரியாக இறக்கை அமைந்த அமையாத தேவதூதர்கள், வசனமின்றி வந்து போகிற மேய்ப்பர்கள். பட்டுப் புடவைகளை ராஜவஸ்திரமாக்கி வந்து நிற்கும் மூன்று ராஜாக்கள்... என்றுதான் இருக்கும். வருஷா வருஷம், இதே தான் ஆனால் நடிக்கிற ஆட்கள் மட்டும் மாறிக்கொண்டு, இதிலும் இந்த பாத்திரங்களுக்கான வசனம் மிகக்குறைவு, பேசப்படுகிற வசனங்களும் பைபிளில் வருகிற சில வசனங்களாய் மட்டுமே. அதுவும் தேவதூதன் மரியாளுக்கு சொல்வது. மேய்ப்பர்களுக்குச் சொல்வது, அகஸ்துராயனின் கட்டளையை அறிவிக்கிற தண்டோராக்காரனின் வார்த்தைகளாகவே இருந்தன.

எனவே இந்த வகையறாக்களிலிருந்து வேறுபட்டு நாடகம் அமைக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.

இதற்கு முன்பு ‘லாங்ஸ்டன் ஹீயுஸ்' என்கிற கறுப்பு அமெரிக்க எழுத்தாளரின் கதை ஒன்றை நாடகமாக்கியிருந்தோம். அப்பொழுது அந்த பெரும் வித்தியாசமான கருத்தும் பார்வையாளர்களிடத்தில் பெற்ற வரவேற்பும் இப்பொழுதும், கிறிஸ்மஸ்க்கும் மாறுபட்ட பாணியிலான நாடகங்களை செய்ய உத்வேகம் தந்தன.

எனவே நிஜ நாடகங்களில் பயன்படுத்துகிறதைப் போல. சில நவீன உத்திகளை இந்த நாடகங்களில் உபயோகிக்கத் தீர்மானித்திருந்தேன். 'மேடை'யில் மட்டுமே நாடகம், நடிப்பு என்றில்லாதபடிக்கு அரங்கத்துக்குள்ளும் நடிப்பை நீடிப்பது நடிப்பவர்கள், பார்வையாளர்களிடையே அமர்ந்திருப்பது. பார்வையாளர்கள் நடுவிலிருந்தே வருவது, பல நாடகங்களிலும், தெருக் கூத்து நாடகத்தில் வருவதைப் போல கட்டியங்காரன் போன்றதொரு பாத்திரத்தை சற்று மாற்றி நாடகத்தின் வர்ணணையாளராக அல்லது அறிவிப்பாளராக வைப்பது. மேடையில் எளிமையான இயல்பான பேச்சுத் தமிழில் பேசுவது போன்றவைகள் இவைகளில் சிலவாகும்

ஆனால், எல்லா நாடகங்களிலும் ஒரு செய்தி அழுத்தமாக சொல்லப்பட வேண்டும் - பார்வையாளர்களுக்கு. அது என்னவெனில் இறை மகனின் பிறப்பு என்கிறமா நிகழ்வின் அர்த்தத்தை உணர்த்த முயற்சிப்பது, அர்த்தப்படுத்தி, தம் இன்றைய வாழ்வின் போக்கோடு பார்க்கத் தூண்டுவது. கிறிஸ்மஸ் வெறும் ஒரு கொண்டாட்டமாக, சில அனுசரிப்பு வைபவமாகவும் மாறிவிட்ட நிலையில் கிறிஸ்மஸ் அதுவல்ல. அது அன்பின் பகிர்தலை அறிவிக்கிற செய்தி, நாமும் அப்படியானதொரு பிரதிபலிப்பை உலகிற்கு காட்டியாக வேண்டிய அவசியத்தை உலகிற்கு உணர்த்துகிற செய்தியாக அது அமைய வேண்டும். இந்த உணர்தலுக்கு நம்மைப் புதுப்பித்துக் கொள்கிற காரியமாக மாற்றிக் கொண்டாக வேண்டிய அவசியத்தை சொல்கிற தருணமாக கிறிஸ்மஸ் அமைய வேண்டும் என்பது தான் அந்த செய்தி.

அநேகமாக இத்தொகுப்பில் உள்ள எல்லா நாடகங்களுமே இந்த செய்தியைதான் சொல்கின்றன. வெவ்வேறு பாணியில், உத்தியில்.

இந்த தொகுப்பின் முதல் நாடகமான ஒரு கிறிஸ்மஸ் அலங்காரம், முன்பு ஒரு நாளில் அருட்திரு மரிய ஜோசப் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு தருணத்தில் அவர் சொன்ன ஒரு 'போலந்து' கவிதையின் தாக்கத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு அமைத்ததாகும். ஆனால் முழு நாடகமும், 'மைமிங்' முறையில் அமைத்து, ஒரு வர்ணணையாளரின் வர்ணிப்புடன் மட்டும் நாடகம் நடந்து முடிந்த பொழுது கிடைத்த வரவேற்பில், புதுப் பாணி நாடகங்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுமா என்றிருந்த சந்தேகங்கள் விலகிப் போயின. Praise the Lord. இப்படி பல நாடகங்களை வித்யாசமாக எழுதத் தூண்டுகோலாக இருந்தது இந்த ஆரம்பம்.

இந்த நாடகங்கள் நடிக்கப்பட்ட பொழுது 'ஒரு கிறிஸ்மஸ் குடிலை’த் தவிர மற்றவைகளுக்கு fixed script என்றில்லாமல், அந்த சூழலுக்கு ஏற்றபடி வசனங்களை அமைத்திருந்தோம். இவைகள் தொகுக்கப்பட, உற்சாகமளித்து fixed script எழுத முனைப்பூட்டிய அன்புத் தம்பி 'வில்பா' ஜெபக்குமாருக்கும் எனது நன்றிகள். அவரின் தோழர் வில்சனுக்கும் கூட கிறிஸ்தவ இலக்கிய நூல்கள் வெளிவருவதில் இந்த வில்பாக்காரர்கள் காட்டுகிற ஆர்வம் பெரிதும் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் மனதில் பூக்க வைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நாடகங்களை உருவாக்க, என் தேவன் தந்த கிருபைக்காக அவரை துதிக்கிறேன்.

- கார்த்திகா ராஜ்குமார்

About Karthika Rajkumar :

எழுத்தை சீராகவும், தொடர்ச்சியாகவும் எழுத ஆரம்பித்த பின் இவருக்கு ஏற்பட்ட இலக்கிய பரிச்சயமுள்ள நண்பர்களின் நட்பும் நிறைய புத்ககங்களும், இவரை நவீன இலக்கியத்தில் வெவ்வேறு அனுபவ விஷயங்களுடன் எழுத்தை தீவிரமாக்கியது. நட்பு, காதல், மனிதம் இவற்றின் அடிப்படை உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவதில் வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனித குமாரர். சக மனித உறவுகள் குறித்த அக்கறையும், இவரின் பெண் பாத்திரங்களும் சற்று வித்தியாசமானவை. வாழ்ந்து கொண்டிருக்கிற மலைப் பிரதேச அநுபவங்களும் அந்த சூழலும் கதைகளில் பரவிக் கிடக்கின்றன. ' வெகு ஜன இதழ்கள் மூலமாவே, எழுத்துலகிற்கு அறிமுகமானவர். இலக்கிய இதழ்களிலும் நிறையவே எழுதி வருகிறார். கவிதைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டுள்ள கார்த்திகா ராஜ்குமார் உதகையிலுள்ள Hindustan Photo Films-ல் Senior Chemist ஆக வேலை.

Rent Now
Write A Review

Same Author Books