எழுத்தின் எல்லா வடிவங்களையும் எழுத முயற்சிக்கிறவன் நான். கவிதை, நாடகம், கட்டுரை, சிறுகதை, உரைச்சித்திரம் என்றெல்லாம் எழுதியது போதாதென்று நாவல்களும் எழுதிப் பார்க்க எண்ணம் வந்தது. வந்ததற்குக் காரணம் என் இலக்கிய ஆசான் கலைமாமணி விக்கிரமன் அவர்களின் நீண்டநாள் வற்புறுத்தல் தான்.
இதைச் சொல்லும் போது அண்மைக்கால நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. என் நண்பர் ஒருவர் கவிதை எழுதுவார். அவரிடம் ஒருநாள், “நன்றாக எழுதுகிறீர்கள். நீங்கள் ஏன் கதை எழுத முயற்சிக்கக் கூடாது...” என்றேன். வெளியில் இப்படிக் கேட்டாலும் “உள்ளூர மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணம் ‘அப்போதாவது நீங்கள் கவிதை எழுதாமலிருக்க மாட்டீர்களா...’ என்பதுதான்.
இப்போது நினைத்துக் கொள்கிறேன். ‘ஏர்வாடியிடமிருந்து கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை, உரைச்சித்திரம் போன்றவற்றைக் காப்பாற்ற கலைமாமணி விக்கிரமன் அவர்கள் என்னை நாவல் எழுதச் சொல்லியிருப்பாரோ...' என்று இப்படி நான் நினைத்தாலும், எல்லோரும் சொல்கிறார்கள் நான் எழுத்தின் எல்லா பரிமாணங்களிலும் சோபிக்கிறேன் என்று. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சிதான் இன்னும் இன்னும் என்று இன்றும் என்னை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.
அலுவலகம் (பாரத ஸ்டேட் பாங்க்) போய்க் கொண்டிருந்த போதே அலுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு ஓய்வென்றால் கேட்கவா வேண்டும். ஓய்வுபெற்ற பின் என் முழு நேர வேலை எழுதுவது, நண்பர்களுடைய நிகழ்ச்சிகளுக்குப் போவது, கூட்டங்களில் பேசுவது, நடைப்பயிற்சி, நல்ல நண்பர்களுடன் அரட்டை என்று என்னை ஓய்வில்லாமல் ஆக்கிக் கொண்டு விட்டதால், எதற்கும் கவலைப்பட நேரமில்லாமல் போய்விட்டது.
அன்று விக்கிரமன் என்னை விரட்டியதைப் போல இன்று திரு. கௌதம நீலாம்பரன் விரட்டவில்லை வேண்டியது மட்டுமல்ல வரவேற்று உற்சாகப்படுத்தி என்னை நாவலாசிரியராகவும் நாட்டுக்கு அறிமுகப்படுத்திவிட்டார்.
அவருக்கு நான் நன்றி என்று சொன்னால் சம்பிரதாயமாகி விடும். எனவே, அந்த நல்ல நெஞ்சத்தை நிறைவாக வாழ்த்தி அவரது நலனும் நட்பும் நீடிக்க அமைதியாக ஸ்ரீ அரவிந்தர் அன்னையைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்! எழுத்தை விடுங்கள்... பழகி மகிழவும் இப்படியொரு நண்பர் கிடைக்க வேண்டும். நான் கொடுத்து வைத்தவன்.
இதில் வரும் மூன்று நாவல்களையும் நன்றாகப் படித்து ப்ரூப் பார்த்துப் பதிப்பித்தவர் அவர். அணிந்துரை எழுத இதைவிட வேறென்ன தகுதி வேண்டும். பிரமாதமாக எழுதி என்னைப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதற்குமேல் நான் என்னைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் பெருமையடித்துக் கொள்ள வேண்டியதில்லை. போதுமான அளவு என்பதற்கப்பால் என்னை அன்போடு புகழ்ந்திருக்கிறார்.
இதில் வரும் நாயகர்கள் நிஜமானவர்கள் அல்ல; எல்லாம் கற்பனைதான் என்றாலும் இரண்டு நாவல்களில் (அதாவது காதல் வெறும் கதையல்ல, நானும் இன்னொரு நானும்) நாயகர்கள் என்னை நினைவுபடுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
நீங்கள் என்னை நல்லவனாக நினைத்தால் நான் நல்லவனில்லை; மோசமானவன் என்று நினைத்தால் மோசமானவனும் இல்லை. நான் நான்தான்; என் நாயகர்கள் அவர்கள் அவர்கள்தான்.
இனி நீங்களும் என் பாத்திரங்களும் சந்திக்கும் முன் அன்பு நண்பர் கெளதம் நீலாம்பரன் அவர்களின் அணிந்துரையை அவசியம் படித்துவிட்டு மேலே செல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சமூக ஆர்வலர், பேச்சாளர், பத்திரிகையாளர்.
96 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவர்.
கலைமாமணி, இலக்கியப் பேரொளி, கவிச்சிற்பி, ஞாலக் கவிஞர், எழுத்துச் செம்மல், நாடகப் பேரொளி, சேவாரத்னா போன்ற விருதுகள் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ( FETNA ) வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். கனடா உதயன் இதழின் உலகளாவிய இலக்கியச் சாதனையாளர் விருது பெற்றவர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கனடா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்று வந்தவர்.
ஆசிரியர், வெளியீட்டாளர் - கவிதை உறவு இலக்கிய மாத இதழ், நிர்வாக அறங்காவலர் - கவிதை உறவு சாரிட்டபுள் டிரஸ்ட்.
புகழ் வாய்ந்த ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். ஊடகவியல், வாழ்வியல், பத்திரிகையியல் பயிற்சியாளர்.
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
உலகெங்கும் விரிந்த நட்பு வட்டத்தைப் பெற்றிருக்கிற வெற்றியாளர்.
Rent Now