Home / eBooks / Oru Snegithikkaga...
Oru Snegithikkaga... eBook Online

Oru Snegithikkaga... (ஒரு சிநேகிதிக்காக...)

About Oru Snegithikkaga... :

இது எனது முதல் முயற்சி. உத்வேகம் என்னவோ சிறந்த இலக்கியம் படைத்திருக்கிற அத்தனை எழுத்தாளர்களையும்விட வித்யாசமான ஏதோ ஒன்றை தொட்டுவிட வேண்டுமென்பது தான். எத்தனை பேராசை பார்த்தீர்களா? முதல்படியில் நிற்பதற்கே தட்டுத்தடுமாறிக் கொண்டு, விரிந்துகிடக்கும் பிரபஞ்சத்தின் உச்சத்தை எட்டிப்பிடிக்கத் துடிக்கிற ஆசை. எனினும் எனது துடிப்புகள் என்றுமே வயோதிகமாகாதவை.

ஜாதி மத வெறி, மடமை கொண்ட சாஸ்திர சம்பிரதாயங்கள், ஒவ்வாத நம்பிக்கைகள், பொய்முகம் போர்த்த வைக்கிற சமூகச்சூழல், பாசத்தை பணம் விழுங்குகிற கொடுமை, சமூகத்தின் இருசரிபாதியான ஆண்பெண்ணை நட்போடு பழகி கருத்துப் பரிமாறிக் கொள்ளக்கூட விடாமல் இருதுருவமாய் நிறுத்தி வைத்திருக்கிற நிலை, கலாச்சார கலப்பட நிலை, தான் தோண்டுகிற குழி தன்னை விழுக்காட்டுவதற்காகத் தான் என்பதனைக் கூட உணரமுடியாத அளவிற்கு கல்வியில் பெண்களின் பின்தங்கிய நிலை, அதனால் பொருளாதார சுதந்திரம் இன்றி பிறரையே சார்ந்திருக்கவேண்டிய கட்டாயம், கற்பு என்கிற பதத்திற்கு அபத்தமாய் கற்பிக்கப்பட்டு வரும் அனர்த்தங்கள். தாய்மார்களை ஏமாற்றுகிற மூன்றாந்தர சென்டிமென்ட்டின் தயவில் பார்ப்பவர் மதியை மறைத்து ஏராளம் சம்பாதிக்கிற சினிமா சகுனி களின் ஆதிக்கம், லஞ்ச லாவண்யங்கள், மனிதாபி மானத்தைக் கழுவேற்றும் ரவுடியிஸம், முழுக்கமுழுக்க வியாபாரமாகிக் கொண்டிருக்கிற அரசியல் இப்படி எத்தனையோ தாக்கங்கள் நெஞ்சை அறுத்துக் கொண்டு தானிருக்கின்றன.

எனினும் என் பார்வையில் பிரச்னைகள் மனது சம்பந்தப்பட்டவையாகவும், வயிறு சம்பந்தப்பட்டவையாகவுமே தெரிகின்றன. மனது சம்பந்தப்பட்ட புழுக்கங்களும், ஏக்கங்களும் நிவர்த்திக்கப்படுகிற பட்சத்தில் மனுஷாள் நிஜத்துவம் பெறக்கூடும். நிஜம் ஆட்சி பெறுகையில் ஏமாற்றுவித்தை இடம் தெரியாமல் போயே தீர வேண்டும். அதுவே பசிக்கான தீர்வாயும் இருக்க முடியும்.

அதனாலேயே அனைத்திற்கும் ஆதாரமான மனது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என்னை வெகுவாய் பாதிக்கின்றன. அதன் விளைவாய் விடாமல் நெஞ்சை பிசையும் விசயங்களை கதையாய் கொணர முயற்சிக்கிறேன். அதேசமயம் அவைகள் பரவலாக சென்றடையவேண்டும் என்பதிலும் கூடிய மட்டும் கவனமாயிருக்கிறேன்.

நமக்காகத்தான் கலாச்சாரம் ஏற்படுத்தப்பட்டதே தவிர, கலாச்சாரத்திற்காக நாமல்ல. இயற்கை நியதிக்கு இடறாத கலாச்சார புதுப்பிப்பும், சமூகத்தேவையான சுயகட்டுப்பாடும் வித்தாகிற போது மானுடம் செழிக்காமல் போகாது.

சிநேகத்துடன், டி. குலசேகர்

About Kulashekar T :

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Rent Now
Write A Review

Same Author Books