“எத்தனை எத்தனையோ மகான்கள்
- இந்த ஞானபூமியில்
அத்தனை பேருக்கும் எனது வணக்கங்கள்!”
இது நான் 'ஞானபூமி’ ஆன்மீக மாத இதழில், சுமார் பதினாறு ஆண்டுகள் பங்கெடுத்துக் கொண்டு பணியாற்றிய நாட்களில், மாதந்தோறும் அதன் அட்டையில் வெளியிட்ட வாசகம்.
இந்தப் பாரத புண்ணிய பூமியில், குறிப்பாகத் தென்னகத்தில், மக்களை நல்வழிப்படுத்தி வரும் மகான்கள் பலர். பக்தி மார்க்கத்தின் மூலமாக, நல்ல சிந்தனைகள், சமூகக் கட்டுப்பாடு, நல்ல வாழ்க்கை நெறி, பெற்றோரிடமும், பெரியோரிடமும் மரியாதை செலுத்துவது, எளியவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல பண்புகளை மக்களிடம் பரப்பி வளர்த்து வரும் மிகச் சிறந்த தொண்டை, அவர்கள் செய்து வருகிறார்கள். அதனால் அருளாளர்களைப் போற்றி மதிக்கும் பக்தர்கள் இன்று நாட்டில் பெருகி வருகிறார்கள்.
இன்று ஆன்மீகப் பெரியோர்கள் முன் போல இறை வழிபாடு மட்டுமே தமது கடமை என்று இருந்து விடுவதில்லை சமூகத் தொண்டு, கல்வி அறிவு அளிப்பது மருத்துவ வசதியைக் கொடுப்பது, அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும் காப்பகம் நடத்துவது, பல்வேறு சமயங்களிடையே நல்லிணக்கம் காண்பது, கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பது, கலைஞர்களைக் கெளரவிப்பது போன்ற நற்பணிகள் பலவற்றிலும் முக்கியப் பங்கு கொள்கிறார்கள். தாமே முன்னின்று மக்களை வழி நடத்துகிறார்கள்.
நாட்டில் பல்வேறு தீய சக்திகள், மக்களின் ஆர்வத்தையும், பொறுமையையும், அடக்கத்தையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடையே நல்ல சிந்தனைகளையும், நல்ல பண்புகளையும் ஊக்குவிப்பதை சீர்குலைத்து வரும் இந்த நாளில், இந்த ஆன்மீக ஒளிவிளக்குகள் அளித்து வரும் ஞானச்சுடர், இந்திய மக்களின் எதிர்காலத்துக்குப் புத்தொளி கூட்ட வல்லது.
இப்படிப்பட்ட ஞானியர், தவவலிமை கொண்டோர், மதத் தலைவர்கள், மடாதிபதிகள், சித்தர்கள் ஆகியோரின் தரிசனம் கிடைப்பதே அரிது. அதைக் காட்டிலும் அவர்களிடம் அருகில் இருந்து பழகுவதும், உரையாடுவதும் அபூர்வமான வாய்ப்பு ஆகும். அத்தகைய ஒப்பிலாத அனுபவம் எனக்கு எனது எழுத்துலக வாழ்நாளில் கிடைத்தது. அந்த அரிய நிகழ்ச்சிகள் தந்த நயமிகுந்த உணர்வுகளை, இங்கே நான் இந்த நூலின் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முற்பட்டிருக்கிறேன். அவர்களுடைய வியூகமும், பரிமாணமும் மிகப் பெரியது. இந்தச் சிறு நூலின் மூலம் வாசகர்களுக்குக் கிடைப்பது, பிரம்மாண்டமான இயற்கைக் காட்சியைச் சிறிய ஜன்னல் மூலமாகப் பார்த்து அனுபவிப்பது போன்றதே ஆகும்.
அவர்களுடைய அபூர்வமான பண்புகளைப் பற்றி, அவர்களிடையே நான் கண்டு உணர நேர்ந்த அதிசயிக்க வைக்கும் அனுபவங்களைப் பற்றி, ஏழைகளுக்கு இரங்கும் எளிய இதயம் பரப்பும் நல்லுணர்வுகளைப் பற்றி, சிறு நிகழ்ச்சிகளின் வாயிலாக, ஒரு சிறிய அழகிய மணம் வீசும் மாலையைத் தொகுத்து சமர்ப்பிக்க முற்பட்டிருக்கிறேன். அவர்களுடைய ஆசிரமங்களும், அமைப்புகளும் நடத்தும் நற்பணிகள், அருந்தொண்டுகள், பக்தி மணம் கமழும் விழாக்கள் போன்றவை பற்றிய சிறு குறிப்புகளும், இதில் அழகிய மணம் தரும் பூமாலையின் மீது சுற்றிய ஜரிகை நூலைப் போல எழில் சேர்த்திருக்கின்றன. அங்கே எல்லாம் சென்று தரிசிக்க விரும்பும் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டியாகவும் அமையக்கூடும்.
இந்த அனுபவங்களுக்கும், இவற்றைப் பற்றி எழுதும் வாய்ப்புகளுக்கும், உறுதுணையாக இருந்து எனக்கு ஊக்கம் அளித்தவர் அமரர் மணியன். அவருடைய நல்லுணர்வுகளையும், ஆன்மீகத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் இங்கே நினைவுகூர வேண்டியது என்னுடைய கடமை.
வாசகர்கள் இந்த நல்ல முயற்சியின் மூலம் ஆன்மீக வழியில் நல்லுணர்வு பெற, இந்த நூல் உதவுமேயானால், அதையே எனது எழுத்துலக வாழ்க்கையின் மிகச் சிறந்த தொண்டாக நான் கருத முற்படுவேன்.
நன்றி!
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
Rent Now