Home / eBooks / Panthaya Purakkal
Panthaya Purakkal eBook Online

Panthaya Purakkal (பந்தயப் புறாக்கள்)

About Panthaya Purakkal :

இணைய தளத்தில் வெளியாகும் என்னுடைய 7-வது சிறுகதைத் தொகுப்பு “பந்தயப் புறாக்கள்”. குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, நட்புக் கதை, என்று பல்வேறு வகை கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் “பந்தயப் புறாக்கள்” என்னும் குடும்பக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், குடும்பக் கதையிலும் சஸ்பென்ஸை கதையின் கடைசி நொடி வரையிலும் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் கதை என்பதாலேயே.

ஒரு சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தோ, படிப்பினையோ எடுத்துரைக்கப்படுமானால் அத்தொகுப்பு முழுமையான வரவேற்பை நிச்சயம் பெறும். அதே நேரம் அவ்வாறு எடுத்துரைக்கப்படும் கருத்து பூடகமாகவோ, கடின வார்த்தைகள் மூலமாகவோ, எடுத்துரைக்கப்படும் போது அவை பாமர மக்களைச் சென்றடைவதில் சிறு தள்ளாட்டம் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்கும் எண்ணத்திலேயே இத் தொகுப்பின் எல்லாக் கதைகளும் சாதாரண வழக்கு மொழியிலேயே புனையப்பட்டுள்ளன.

கேபிள்காரன், என்னும் ஒரு பாத்திரத்தை நாம் நம் அன்றாட வாழ்வில் அனுதினமும் சந்திக்கின்றோம். அவனை ஒரு எந்திரமாக மட்டும் பார்க்கும் சமுதாயத்திற்கு அவனுக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கின்றான், என்பதைக் கூறும் விதமாய் படைக்கப்பட்ட கதை “கேபிள்காரன்”. இதன் பின்புலத்தில் உள்ள ஒரு ரகசியம் என்ன்வென்றால், அது ஒரு நிஜக்கதை. அந்தப் பாத்திரம் ஒரு நிஜப் பாத்திரம். அதன் காரணமாகவே, அக்கதையில் அந்தப் பாத்திரத்தின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

நிதானமாய் வாசியுங்கள். நிச்சயம் நெகிழ்வூட்டும்.

வணக்கம்.

இவண்,

முகில் தினகரன்

About Mukil Dinakaran :

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books