Home / eBooks / Panuval Pottruthum
Panuval Pottruthum eBook Online

Panuval Pottruthum (பனுவல் போற்றுதும்)

About Panuval Pottruthum :

இத்தொகுப்பின் கட்டுரைகளை எழுத ஊக்குவித்த மூலவர் இருவர். ஒருவர் ‘சொல்வனம்’ சேதுபதி அருணாசலம். மற்றவர் ‘உடுக்கை இழந்தவன் கைபோல் உதவும்’ எனது நெருக்கமான நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். சொல்வனம் எனும் இணையதள திங்களிருமுறை இதழ் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே, என்னை அதில் எழுதக் கேட்டுக்கொண்டே இருந்தனர். என் இயல்பின் படி தாமதித்துக் கொண்டே இருந்தேன். அப்போது சிக்கி முக்கி. காம் இணையதள இதழில் எனது கதையொன்று வெளியானது. அதைக் கவனித்துவிட்டு, சேதுபதி சொன்னதாக வ.ஸ்ரீ. என்னிடம் விளையாட்டாகச் சொன்னார். ‘நாம முக்கி சிக்கிக் கேட்டாலும் எழுத மாட்டேங்கிறார்’ என்று. உரிமை கலந்த சொல்லென்றாலும் சற்று மனத்தாங்கலாக இருந்தது. அன்று தீர்மானித்ததுதான் ‘பனுவல் போற்றுதும்’ என்றொரு கட்டுரைத் தொடர் எழுதுவது என்று. அதுவே இந்நூலுக்கும் தலைப்பு ஆகிறது.

பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன் தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, அறிமுகம், நூன்முகம் என்பவை போல. பனுவல் எனும் சொல் பழைய பஞ்சாங்கம் என்றும் பிரதி என்பதே பின்நவீனத்துவச் சொல்லாடல் என்றும் நீங்கள் கருதக்கூடும். எமக்கதில் வழக்கில்லை.

சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில், மங்கல வாழ்த்துப் பாடலில், இளங்கோவடிகள் ஓதுகிறார். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றதும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என. அந்தப் பாணியில், புத்தகங்களைப் போற்றுவோம் எனும் குறிக்கோளுடன் ‘பனுவல் போற்றுதும்’ என்று தொடருக்குத் தலைப்பு வைத்தேன். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றொரு பழஞ்சொல் உண்டு. கோயில் என்றால் இந்துக் கோயில் என்று மட்டுமே பொருள்கொளல் வேண்டா. புத்தகங்கள் இல்லா வீட்டில் நீர் பருக வேண்டா என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

‘பனுவல் போற்றுதும்’ தொடர் அதற்காகத் தொடங்கவில்லை. தமிழில் தகுதியான எத்தனையோ நூல்கள் வெளியாகி, வாசிப்புக் கவனம் பெறாமற் போய்விடுகின்றன. பல்கலைக்கழக வளாகங்கள் பலவும் தாம் வெளியிடும் பல முக்கியமான ஆய்வு நூற்களைக் கோவணத்தினுள் பதுக்கிக் கொள்கின்றன.

எனவே சேதுவுக்கு மண்சுமந்த அணிற்பிள்ளை போல, என்னாலான சிறு முயற்சி இது. என்னை வசீகரித்த சில புத்தகங்களை பனுவல் போற்றுதும் எனும் தலைப்பில் சொல்வனத்தில் எழுதத் துணிந்தேன். இருபத்தைந்து கட்டுரைகள் எழுதுவதாய் வாக்கும் தந்தேன். துன்பம் என்னவெனில், இணைய தள இதழுக்கு கையினால் எழுதி அனுப்பும் எனது இயலாமை. 2010 ஜூனில் தொடங்கப்பட்ட இந்தப் பகுதிக்கு இதுவரை என்னால் பத்துக் கட்டுரைகளே எழுத முடிந்தது. சாகித்ய அகாதமி விருது பெற்றமைக்கான பாராட்டுக் கூட்டங்களினாலும் மகள் திருமண வேலைகளினாலும் இந்த ஓராண்டாய் என்னால் முழு முனைப்புடன் செயல்பட இயலவில்லை. என்றாலும் என்ன, யானை படுத்தாலும் குதிரை உயரம் இருக்கும்.

படிக்கப் படிக்கத் தெரிகிறது. இன்னும் ஒன்றுமே நான் படித்திருக்கவில்லை என்பது. அவ்வையே சொன்னாள், ‘கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகு அளவு’ என்று. மீதி வாழ்நாளில் இன்னும் எத்தனை புத்தகங்களை வாசித்து விட இயலும்? அதற்காக ‘எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கீரவும்’ முடியாது.

இந்நூலின் பல கட்டுரைகள் எனது வழக்கமான பாணியிலானவை அல்ல. எனது ஆய்வு முடிவுகளும் அல்ல. என்னை வசீகரித்த நூல்களை வாசகருக்கு அறிமுகம் செய்கிறேன். அவ்வளவே! இவற்றுள் தகவற் பிழைகள் இருக்கலாம், பொருட்குற்றம் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்ல முயல்கிறேன். மேலுள்ளவை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். இவை என் பண்டித்தியம் புலப்படுத்த அல்ல. நான் பண்டிதனும் அல்ல. மாணிக்கவாசகன் சொன்ன, ‘கற்பனவும் இனி அமையும்’ எனும் தொடருக்கு, இதுவரை கற்றது போதும் என்று பொருள் கொள்வதற்கு மாறாக, கற்பன இனிமேல் நடக்கும் என்று பொருள் கொள்கிறேன்.

எமது இளைய படைப்புலக, வாசக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தேடுங்கள், கிடைக்கும்.

மிக்க அன்புடன்
நாஞ்சின் நாடன்

About Nanjil Nadan :

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, தாழக்குடி பகுதி, வீரநாயணமங்கலம் சிற்றூரில் பிறப்பு. நெல், தென்னை, வாழை சூழ்ந்து, மேற்கில் பழையாறு, வடக்கில் தேரேகால் ஊர் எல்லை. இயற்பெயர் சுப்பிரமணியம். பெற்றோர் கணபதியாபிள்ளை, சரஸ்வதிஅம்மாள். பிறந்தநாள் 31.12.1947

பிழைப்பு தேடி பம்பாய் பயணம் செய்து, பம்பாய் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் தனியார் நிறுவனம் ஒன்றிலும் தினக் கூலியாகச் சில காலம். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் எழுத்தர், பண்டகக் காப்பாளர், தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரிந்து விற்பனைப் பிரிவின் மேலாளராக இந்தியா முழுக்கப் பயணம். 1939ல் கோவைக் கிளைக்கு மேலாளராக மாற்றம் பெற்று 2005 ல் ஓய்வு தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சூரத் பக்கமிருக்கும் நவ்சாரி என்னும் நகரைச் சார்ந்த தொழில்நிறுவனம் ஒன்றுக்கு தமிழ்நாட்டுப்பிரதிநிதியாகப் பணிபுரிகிறார்.

1977ல் வெளியான தலைகீழ் விகிதங்கள் எனும் முதல் நாவல் பரவலான கவனிப்புப் பெற்று பத்து பதிப்புகள் வந்து, 20,000 படிகள் விற்றுத்தீர்ந்துள்ளது.தங்கர்பச்சான் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடித்து, சொல்ல மறந்த கதை எனும் பெயரில் திரைப்படம் ஆயிற்று.

என்பிலதனை வெயில் காயும் (1979), மாமிசப் படைப்பு (1981), மிதவை (1986), சதுரங்கக் குதிரை (993), எட்டுத்திக்கும் மதயானை (1998) என்பன பிறநாவல்கள், பல பதிப்புக்கள் கண்டவை. இவற்றுள் எட்டுத்திக்கும் மதயானை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது, Against All Odds (2009) எனும் தலைப்பில்.

இவர் எழுதியது இன்றுவரை 127 சிறுகதைகள், தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(1981), வாக்குப் பொறுக்கிகள் (1985), உப்பு(1990), பேய்க்கொட்டு (1994), பிராந்து (2002), நாஞ்சில் நாடன் கதைகள் (2004), சூடிய பூ சூடற்க (2007), கான்சாகிப் (2010), முத்துக்கள் பத்து (2007), நாஞ்சில் நாடன் சிறுகதைகள் (2011), சாலப்பரிந்து (2012) கொங்குதேர் வாழ்க்கை (2013) இவரது சிறுகதைத் தொகுப்புகள். இரண்டு கவிதைத் தொகுப்புகள். மண்ணுள்ளிப் பாம்பு (2001), பச்சை நாயகி (2010).

கடந்த பத்துஆண்டுகளாக, கட்டுரை இலக்கியத்துக்கு இவர் பங்களிப்பு சிறப்பானது. திருப்புமுனை எனக் கருதப்படுபவை. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (2003), நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2003), நதியின் பிழையன்றுநறும்புனல் இன்மை (2006), காவலன்காவான் எனின் (2008), திகம்பரம் (2010), பனுவல் போற்றுதும் (2001), கம்பனின் அம்பறாத்துணி (2013), சிற்றிலக்கியங்கள் (2013), எப்படிப் பாடுவேனோ (2014) என்பன கட்டுரைத் தொகுப்புகள். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - காலம் நிகழ்த்திய மாற்றங்கள் எனும் முதல் நூல், இன வரைவியல் எழுத்துக்கு தமிழில் முன்னோடி. காய்தல் உவத்தல் அற்ற கள ஆய்வு தீதும் நன்றும் எனும் தலைப்பில் 2008-2009 காலகட்டத்தில் இவர் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைத் தொடர் பெருத்த வாசக கவனிப்பைப் பெற்று, நூலாகி பல பதிப்புகள் கண்டது. தமிழ் பயிற்றும் அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் இவரது நாவல்கள் பாடமாக இருந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.

Rent Now
Write A Review

Same Author Books