Home / eBooks / Parisalil Oru Payanam
Parisalil Oru Payanam eBook Online

Parisalil Oru Payanam (பரிசலில் ஒரு பயணம்)

About Parisalil Oru Payanam :

குழந்தைகளும், வளரிளம் பருவத்தினரும் தான் இன்று பெரும்பாலான பதிப்பகங்கள், வெகுஜன. ஊடகங்களின் இலக்கு வாசகர்கள்/ரசிகர்கள். தொலைக் காட்சிப்பெட்டி வந்துவிட்ட பிறகு திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம்வயதுத் தொழிலாளர்கள் மட்டுமே என்று சமீபத்தில் ஒரு 'சர்வே' சுட்டிக் காட்டியிருந்தது.

ஆனால், பதிப்பகங்களும், ஊடகங்களும் இந்தத் தரப்பு வாசகர்கள் / ரசிகர்களைப் பொறுப்புணர்வோடு அணுகுகிறதா அல்லது அவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறதா? என்று கேட்டால், இரண்டாவது கேள்வியையே பதிலாகத் தர முடிகிறது. தொலைக்காட்சித் தொடர்களில் குழந்தைகளும், வளரிளம் பருவத்தினரும் பல வழிகளிலும் அபத்தமாக, அபாயகரமாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

சமூகச் சீர்கேடுகளைச் சாடுகிறோம் என்ற பெயரில் இளங்குற்றவாளிகள் உருவாக வழிவகுத்து விடுவது சரியா? குழந்தைத் தொழிலாளர்கள் கூடாது என்கிறோம். எனில், விளம்பரங்கள், ஒலி ஒளி ஊடகங்களில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவது எப்படிச் சரியாகும்? வளரிளம் பருவத்தில் இருக்கும் பெண்ணைத் திரைப்படங்களில் எப்படியெப்படியெல்லாமோ நடிக்க வைப்பது எப்படிச் சரியாகும்? என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்தாலும், எழுந்தவேகத்தில் அடங்கிவிட்டன. ஏனென்று தெரியவில்லை.

குழந்தைகளுக்கான கதைகளை எழுத, மொழி பெயர்க்க நேர்ந்தபோது பெரும்பாலான சிறுவர் கதைகள் சிறார்களுக்குப் பிடிக்கும் என்று பெரியவர்கள் தங்களுடைய 'ஃபாண்டஸிகளை முன்னிறுத்தி எழுதியவைகளாகவே புலப்பட்டன.

இப்பொழுதெல்லாம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால், மன்னர்களுக்கிடையேயான போரை, அது சார்ந்த வன்முறையை மாவீரமாகப் போற்றிப் புகழும் போக்கே பாட நூல்களிலும் அதிகமாக இருந்தது. தனியொரு சிறுவன் அல்லது இளைஞன் வீரசாகசங்கள் நிகழ்த்திக் காட்டும் ஹீரோயிஸமே குழந்தைகளுக்கான, வளரிளம் பருவத்தினருக்கான படைப்பாக்கமாக திரும்பத்திரும்ப முன்வைக்கப்பட்டுவந்தது; வருகிறது.

இந்தவிதமான எதிர்மறைச் சூழலில் நன்னம்பிக்கை யொளிக் கீற்றுகளும் தென்படாமலில்லை. சமூக அக்கறையும், குழந்தைகளே வருங்கால உலகை நலமாக்கக் கூடியவர்கள், வளமாக்கக் கூடியவர்கள்; அவர்களுடைய உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற விழிப்புணர்வோடு இந்தப் பிரிவினருக்கான புனைவு, அபுனைவு சார் எழுத்தாக்கங்களை உருவாக்கி வருபவர்களும் இருக்கிறார்கள்; இயங்கி வருகிறார்கள்.

அவர்களில் இதழியலாளரான எழுத்தாளர் ஜி.மீனாட்சியும் ஒருவர் என்பதை இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. பத்திற்கு மேற்பட்ட சிறுகதைகள் இடம்பெறும் இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் துருத்திக்கொண்டு போதனை செய்யாமல் கதையின் போக்கில் சிறுவர்கள் வளரிளம் பருவத்தினர் மனங்கொள்ள வேண்டிய கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல்ல விஷயத்தை எடுத்துரைக்கிறது.

நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியம்: இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை; பள்ளிக்குக் குறித்த நேரத்தில் செல்ல வேண்டியது முக்கியம் தான், ஆனால், ஒரு மாணாக்கருக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் அது மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, பெரியவர்களை மதிப்பதும், வீட்டிலுள்ள பெரியவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்வதும், போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகள் வாங்குவதல்ல உண்மையான வெற்றி, மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

சமூகத்திற்குப் பயன்படும் விதத்தில் நம் வாழ்க்கை அமைவதுதான்; நொறுக்குத் தீனிகளையெல்லாம் தின்று கொண்டேயிருத்தல் உடல்நலத்திற்குத் தீங்கு பயக்கும்; நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்யவேண்டும்; வாயில்லாப் பிராணிகளிடம் அன்பு காட்ட வேண்டும்.

ஆசிரியர்கள் தங்கள் பணியை அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் செய்ய வேண்டும்; தம்மிடம் பயிலும் மாணாக்கர்களின் தனித்திறமைகளை அடையாளங்கண்டு ஊக்குவிக்க வேண்டும் எனப் பல நல்ல கருத்துகள், இளம்பிராயத் தினரை நல்ல முறையில் வழிநடத்தத் தேவையான கருத்துகள் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் இயல்பாய் இடம்பெறுகின்றன.

சமூக அக்கறை உள்ள இளம்பெண்ணாக, பல வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமான தோழர் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளிலும் சமூகம் மீதான அதே அன்பும், அக்கறையும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

- லதா ராமகிருஷ்ணன்.

About G. Meenakshi :

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை' போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் `மங்கையர் மலர்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக உள்ளார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்கு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதை 2009-ல் பெற்றவர். அகில இந்திய அளவிலான விருது இது. இசைக் கலைஞர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக சென்னையைச் சேர்ந்த விபன்ச்சி அமைப்பின் தங்க மெடல் பெற்றவர்.

`கிராமத்து ராட்டினம், `பூ மலரும் காலம், `நினைவுகள் நிறைந்த வெற்றிடம்' என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் 2016-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் `அன்று விதைத்த விதை' என்ற இவரது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. சாகித்ய அகாடமி சார்பில் நடத்தப்படும் பல்வேறு கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

`பேசும் ஓவியம், `பரிசலில் ஒரு படகு', `நீ உன்னை அறிந்தால்', `மல்லிகாவின் வீடு' போன்ற சிறுவர் சிறுகதை நூல்கள், `பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்' என்ற நேர்காணல் நூல், `மனமே மலர்ச்சி கொள்' என்ற தன்னம்பிக்கை புத்தகம் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். தினமணி கதிர், கல்கி, தினமலர், மங்கையர் மலர், கவிதை உறவு, கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

Rent Now
Write A Review

Same Author Books