Theni M. Subramani
உலகறிந்த உண்மையை எடுத்துச் சொல்லும் போது, ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்று ஒரு உவமையைச் சொல்வார்கள். ஆனால், இன்று உலகத்தையே உள்ளங்கைக்குள் அடக்கிய ஊடகமாக ‘இணையம்’ வந்துவிட்டது. இணையத்தின் வழியாக, உடனுக்குடன் அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை காணமுடிகிறது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இன்றையச் சூழலில், ‘இணையம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை’ என்று சொல்லும்படியாக, இன்று இணையத்தின் தேவை அவசியமான ஒன்றாகி விட்டது. உலகில் 54.4 சதவிகிதம் பேர் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உலக மொழிகளில் இணையப் பயன்பாட்டில் 301 மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், 162 மொழிகள் மட்டுமே இணையத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இம்மொழிகளில் ஆங்கிலம் அதிகளவாக 52.7 சதவிகிதம் உள்ளடக்கங்களைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. உலகில் இணையத்தின் வழியாக, ஆங்கில மொழியின் பரவல் வெகுவேகமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நம் பயன்பாட்டிற்கும், தேவைகளுக்குமான நூறு இணையதளங்களைக் கண்டறிந்து, அந்த இணையதளங்களில் இடம் பெற்றிருக்கும் தகவல்களைப் பற்றிய குறிப்புகள், அந்த இணையதளத்தின் முகவரி போன்றவைகளைத் தொகுத்து, ‘பயனுள்ள 100 இணையதளங்கள்’ எனும் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நூல் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுடையதாக இருப்பினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பதின்மூன்று நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வரும் இவர், 2006 ஆம் ஆண்டில் முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினைத் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.