சொந்தக் கற்பனையைக் கொண்டு ஒரு நாவல் எழுத வேண்டும் என்கிற ஆசைதான் இந்த நாவலுக்கு அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டுள்ள கட்டிடம் எப்படியிருக்கிறது என்று நிர்ணயிக்க வேண்டிய வேலை என்னுடையதல்ல. கட்டிடத்தின் உள்ளே நுழைந்து பார்ப்பவர்களுடைய காரியம் அது.
விக்கிரமாதித்தனின் வேதாளம், கானன் டாயிலின் 'ஷெர்லாக் ஹோம்ஸ்', அல்லாவுத்தீனின் அற்புத தீபம், அலி பாபாவின் 'ஸெஸேமி' மந்திரம், ராபின் ஹுட்டின் தீரச் செயல்கள், பிராங்கன்ஸ்டீனின் பைசாசரூபம் இப்படிப்பட்ட அபூர்வங்களில் எதையாவது காண முடியும் என்கிற நம்பிக்கையுடன் இந்தக் கட்டிடத்துக்குள்ளே நுழைபவர் கட்டாயம் ஏமாற்றமே அடைவர். ஏனெனில் அப்பேர்ப்பட்ட அபூர்வங்களுக்கே இதில் இடம் இல்லை.
இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர் எல்லோருமே சாதாரண மனிதர்கள் தாம். தினசரி வாழ்க்கையில் நம் கண்ணெதிரே காணப்படும் பலதிறப்பட்ட மனிதர்களில் சிலரே இந்தக் கட்டிடத்தில் வசிக்கிறார்கள். அவர்களுடைய ஆசைகள், கனவுகள், மன நிகழ்ச்சிகள், இன்பங்கள், துன்பங்கள், லக்ஷ்யங்கள் - இவை யாவுமே இக்கட்டிடத்துக்குப் பலவிதமான வர்ணப் பூச்சுக்களாக விளங்குகின்றன. அவர்களது வாழ்க்கைதான் கட்டிடத்துக்குக் களை உண்டாக்குகிறது.
இதிலுள்ள ஆண்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. பெண்களைப்பற்றி மாத்திரம் ஒரு வார்த்தை. ஏனெனில் இதற்குப் ‘பெண் தெய்வம்' என்று பெயரிட்டிருக்கிறேன் அல்லவா? அதனால் தான்.
கட்டிடத்தில் உள்ள பெண்களில் முக்கியமானவர்கள் விசாலாக்ஷி, லலிதா, ஜனகம், குண்டலப்பாட்டி, யமுனாபாய் இவர்களே. இவர்களில் ஒவ்வொருவரைச் சுற்றிலும் ஒரு தனி உலகமே சுழலுகிறது. இவர்களில் ஒருவரையும் கட்டிடத்தை விட்டு அகற்ற முடியாது. ஒருவரை விலக்கினாலும் கட்டிடத்தின் ஒரு பாகம் இருளடைந்து போகும். கட்டிடமும் நாவலாக அமையாது. எனவே, இவர்களில் ஒருவருக்கு மட்டும் விசேஷச் சலுகை காட்டுவதுபோல் அவரது பெயரை மகுடமாக இடுவது உசிதமல்ல என்று தோன்றியது. இதன் பயனாகத்தான் இந்த நாவலுக்குப் 'பெண் தெய்வம்' என்று நாமகரணம் செய்தேன்.
இந்தப் பெயர் அர்த்தபுஷ்டியுள்ளது. கட்டிடத்தில் நுழைந்து பார்ப்பவர்கள் தங்கள் மனப்போக்குப் பிரகாரம் இந்தப் பெயரைச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற அர்த்தத்தில், இவர்களில் யாருக்கு வேண்டுமாயினும் சூட்டி ஆனந்தப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இங்கே 'பெண் தெய்வம்' ஒருவரைத்தான் குறிப்பிடுகிறது. அவர் யார் என்பது உள்ளே நுழைந்து பார்ப்பவர் தாமாகக் கண்டு கொள்ளவேண்டிய விஷயம்.
கட்டிடம் கட்டி முடித்து இரண்டரை வருஷங்களுக்கு மேல் ஆயிற்று. அஸ்திவாரக்கல் நாட்டியதிலிருந்து கட்டிடம் முடிவதற்குச் சுமார் ஏழு மாசகாலம் ஆயிற்று.
பி. எம். கண்ணன்.
Rent Now