Home / eBooks / Peru Mazhai Kaalam
Peru Mazhai Kaalam eBook Online

Peru Mazhai Kaalam (பெருமழைக் காலம்)

About Peru Mazhai Kaalam :

2015-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சென்னையில் பெய்த பெருமழையை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. மாநகரம் முழுவதுமே வெள்ளக்காடாய் மாறித் தத்தளித்த அவலத்தை, வாழ்க்கையையே முடக்கிப் போட்ட அந்த அசாதாரண நாட்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் நெஞ்சில் புயல் அடிக்கிறது. தண்ணீர்க் குளத்தில் தள்ளாடித் தள்ளாடி நடந்து அலுவலகம் சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம். மின்சார விளக்குகள் இன்றி நகரமே இருளில் மூழ்கிக் கிடந்த கறுப்பு நாட்கள் அவை!

டிசம்பர் குளிரும் பெருமழையும் நகரை வாட்டினாலும், மக்களின் நெஞ்சில் ஈரம் காயாமலிருந்ததை உணர வைத்த நிகழ்வுகளை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வாகனங்கள் விரைந்தோடிய சாலைகள் அமைதியாகி, மழை நீர்க் குளங்களாக நிரம்பியிருக்க, அந்த நீரில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சியைப் பார்க்க முடிந்தது.

கோடி கோடியாகச் சொத்து வைத்திருந்தவர்களும், வங்கியில் லட்சம் லட்சமாகச் சேர்த்து வைத்திருந்தவர்களும், கைச் செலவுக்காக நூறு ரூபாயைக்கூட எடுக்க முடியாத நிலையில், வீட்டிற்குள்ளேயே அவதிப்பட்ட அவலத்தை என்னென்பது?

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, உடைமைகளை இழந்து, தங்குவதற்கு வழியின்றி, மக்கள் தவித்த கொடுமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்து நிற்க, ராணுவ வீரர்கள் படகில் வந்து மக்களை மீட்டுச் சென்றனர்.

பணம், பதவி, படிப்பு, வசதியான வாழ்க்கை என்று அனைத்து சௌகர்யங்களுடன் வாழ்ந்தவர்களையும், உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளியது, பெருமழை! உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, திருமண மண்டபங்களில், சமுதாயக்கூடங்களில் தஞ்சமடைந்தோர் பலர். உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்தோர் அநேகர்.

நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் பாய்ந்தோடிய வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு, முகநூல் மூலமாக உதவிக்கரம் நீட்டியோர் பலர். அரிசி, பருப்பு, போர்வை, ரொட்டி, மெழுகுவர்த்தி, பிஸ்கட் பாக்கெட்டுகள், குடிநீர், சோப்பு என்று தங்களால் முடிந்ததையெல்லாம் தந்து அரவணைத்த தன்னார்வலர்கள் எண்ணற்றோர். மாநகர மக்களின் மனங்களில் மனிதநேயம் மரத்துப் போனதோ என்று சொன்னவர்களின் வாயெல்லாம், சேவை செய்ய நீண்ட கருணைக் கரங்களைப் பார்த்தபிறகு தானாகவே அடைத்துக் கொண்டன.

கொட்டித் தீர்த்த மழையுடன், திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் அணை நீரும் கைகோர்த்ததில், நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்த தீவாகிப் போனது சென்னை!

சாமானிய மக்களின் படுக்கைகள், உடைமைகள், பாத்திரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சேகரித்து வந்த குப்பை கூளங்கள் வீதிகளில் குவிந்தன. எங்கு போனாலும் முடை நாற்றம். வெள்ளத்தின் கோர நாக்கு தீண்டிய பொருட்களிலிருந்து வீசிய கெட்ட வாடை. மழை ஓய்ந்து பல நாட்கள் கழிந்தபின்னும், நகரத்தின் அழுக்குகளை அவ்வளவு சுலபத்தில் நீக்க முடியவில்லை.

திருச்சி, மதுரை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்தெல்லாம் துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, நகரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிஜ சம்பவத்திற்கு சில நிறங்களைச் சேர்த்து, கற்பனையைக் கூட்டி, எழுத்தில் வடித்த குறுநாவல்தான், இப்போது உங்கள் கைகளில் தவழும் `பெருமழைக் காலம்’.

மாரி, ராசாத்தி, வேலு, பழனி என்று இதில் உலா வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே, பெருமழைக் காலத்தின் அவலத்தை அனுபவித்தவர்கள். `செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதற்கேற்ப, வயிற்றுப் பிழைப்புக்காக வஞ்சகமில்லாமல் உழைக்கும் மாரிக்கும், ராசாத்திக்கும் நேர்ந்த துன்பங்களும், ஏமாற்றங்களும்தான் கதைக் கரு. சாமானிய மக்களைச் சுரண்டும் நயவஞ்சக மனிதர்களின் பேராசையைத் துகில் உறித்துக் காட்டும் இந்தக் குறுநாவல், மழை வெள்ளம் வடிந்து சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின், ஆறு மாதங்களுக்குப் பிறகு `மங்கையர் மலரி’ல் இணைப்பாக வெளியானபோது, பலதரப்பட்ட வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

மாரி, ராசாத்திக்காக கண் கலங்கிய, துக்கப்பட்ட வாசகர்களின் பேரன்பைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன். வாழ்வின் எதார்த்தத்தை உணர்த்தும் இந்தக் குறுநாவலை அனைவரும் படித்து மகிழும்வண்ணம் இப்போது புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

`மங்கையர் மலரில்’ இந்த நாவலை வெளியிட ஊக்கப்படுத்திய, கல்கி குழும நிர்வாக இயக்குநர் திருமதி லஷ்மி நடராஜன் அவர்களுக்கு, என் அன்பும், நன்றியும்!

இ-புத்தகமாக வெளியிட முன்வந்திருக்கும் `புஸ்தகா’ நிறுவனத்தின் திரு.ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு, என் மனப்பூர்வமான நன்றிகள்.

அன்புடன்,

ஜி.மீனாட்சி

About G. Meenakshi :

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை' போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் `மங்கையர் மலர்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக உள்ளார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்கு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதை 2009-ல் பெற்றவர். அகில இந்திய அளவிலான விருது இது. இசைக் கலைஞர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக சென்னையைச் சேர்ந்த விபன்ச்சி அமைப்பின் தங்க மெடல் பெற்றவர்.

`கிராமத்து ராட்டினம், `பூ மலரும் காலம், `நினைவுகள் நிறைந்த வெற்றிடம்' என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் 2016-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் `அன்று விதைத்த விதை' என்ற இவரது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. சாகித்ய அகாடமி சார்பில் நடத்தப்படும் பல்வேறு கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

`பேசும் ஓவியம், `பரிசலில் ஒரு படகு', `நீ உன்னை அறிந்தால்', `மல்லிகாவின் வீடு' போன்ற சிறுவர் சிறுகதை நூல்கள், `பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்' என்ற நேர்காணல் நூல், `மனமே மலர்ச்சி கொள்' என்ற தன்னம்பிக்கை புத்தகம் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். தினமணி கதிர், கல்கி, தினமலர், மங்கையர் மலர், கவிதை உறவு, கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

Rent Now
Write A Review

Same Author Books