Home / eBooks / Pesum Oviyam
Pesum Oviyam eBook Online

Pesum Oviyam (பேசும் ஓவியம்)

About Pesum Oviyam :

குழந்தைகளுக்குக் கதை எழுதுவதென்பது மிகவும் கடினமானது. கவனமாகச் செய்யவேண்டியதும்கூட. கொஞ்சம் பிசகினாலும், பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். யதார்த்தம் என்ற பெயரில் சிறுகதைகளில் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் குழந்தை இலக்கியத்தில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி நல்லதை மட்டுமே எழுத வேண்டும்.

மற்ற எந்த இலக்கியத்தையும் விட, குழந்தை இலக்கியத்தில் எழுத்தாளனுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்புணர்வும், கடமையும் இருக்கிறதென்று நான் கருதுகிறேன். குழந்தைகளுக்காக எழுதும் எழுத்து, வருங்காலச் சமுதாயத்துக்கு, புதிய தலைமுறைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாக இருக்கவேண்டும். அந்த எழுத்து, அவர்களின் மனநிலையை ஒருபடி மேலே உயர்த்துவதாக அமைய வேண்டும்; வாழ்க்கையின் விழுமியங்களையும், நம் கலாச்சாரத்தையும் தூக்கிப் பிடிப்பதாக இருக்கவேண்டும்.

சிறுவர் இலக்கிய முன்னோடிகளான அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, பூவண்ணன் போன்ற மாபெரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கின்றன. அவர்களின் எழுத்துக்களைப் படித்த அந்தக் காலத்துக் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள், புரியும்!

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும், இதைப் படிக்கும் குழந்தைகளின் மனத்தைத் தொடுவதாகவும், அவர்களின் எண்ணத்தை உயர்த்துவதாகவும் இருக்கும் என்பது நிச்சயம். சமூக விழிப்புணர்வுக் கருத்துகளையும், தன்னம்பிக்கை விதைகளையும், வாழ்க்கை மீதான நேசிப்பையும் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்க முற்பட்டிருக்கிறேன். இந்தக் கதைகளின் மூலம் குழந்தைகளின் இதயத்துக்குள் நுழைய நான் முயற்சித்திருக்கிறேன். இதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

குழந்தை இலக்கியம் என்பது, தொப்புள்கொடி உறவு. தாயின் மூலமாகத்தான், குழந்தைக்குக் கதைகள் பரிச்சயமாகின்றன. ஒரு குழந்தையின் முதல் இலக்கிய வாசிப்பு, அதன் தாயிடமிருந்தே தொடங்குகிறது. சோறூட்டும்போதும், இரவின் மடியில் அன்னையின் அணைப்பில் படுத்துறங்கும்போதும், தாய் சொல்லும் கதைகளைக் கேட்டுத்தான் குழந்தையின் கற்பனை உலகம் விரிகிறது. குழந்தை இலக்கியத்திற்கான விதை, அப்போதுதான் தூவப்படுகிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'அல்லியும் மல்லியும்,' 'கொழுக்கட்டைக்குக் கையும் உண்டோ?,' 'அரசமரத்துக் காகம்' போன்ற மூன்று கதைகளும் நான் சிறுமியாக இருந்தபோது என் தாய் எனக்குச் சொல்லியவை. இந்தக் கதைகளை நான் எப்போது கேட்டாலும், மறுக்காமல், சலிக்காமல், சுவாரஸ்யம் குன்றாமல், முதல் முறை சொல்லும்போது இருந்த அதே உற்சாகத்துடன் என் அம்மா எனக்குச் சொல்லுவார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத கதைகள். இந்தக் கதைகளை பின்னர் நான் என் மகனுக்குச் சொன்னேன். இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவன் கேட்கும்போதெல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு தாயும், தன் குழந்தைக்கு மிகச்சிறந்த கதாசிரியையாக இருக்கிறாள். தாய்மொழியைப்போல, குழந்தை இலக்கியமும் மரபுவழி உறவாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் பெரும்பங்கு வகிப்பவர்கள், ஆசிரியர்கள்! குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்! பாடங்களைவிடக் கதைகளையே அதிகம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் இன்று இருக்கிறார்களா? கற்பிக்கும் பணியுடன், காகிதப் பணிகளையும் பார்த்துக் கொள்ளும் இன்றைய ஆசிரியர்களில் எத்தனை பேருக்குக் கதை சொல்ல நேரமிருக்கிறது? நேரமிருந்தாலும் கற்பனை வளத்துடன் கதை சொல்லும் மிகச் சிறந்த கதைசொல்லிகள் அவர்களில் எத்தனை பேர்? விரல்விட்டு எண்ணிவிடலாம்!

அலுவலகப் பணியில் பகல்பொழுதெல்லாம் தன்னைத் தொலைத்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியவுடன் சமையல் கட்டுக்குள் நுழையும் தாயால், தன் குழந்தைகளுக்குக் கதை சொல்ல முடிகிறதா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொலைந்து போகாமல், இருந்த இடத்தில் இருந்தபடியே காலை நீட்டிக்கொண்டு பேரன் பேத்திகளுக்காக இட்டுக்கட்டி கதை சொல்லும் பாட்டிகள் இன்று இருக்கிறார்களா? இந்தக் கேள்வி காதலனாகவோ, இலக்கிய இரசிகனாகவோ, படைப்பாளனாகவோ வலம் வரப்போவது நிச்சயம்.

நம் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை, அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களை அறிமுகப் படுத்த வேண்டியது, நமது கடமை. ஒரு தாயால், ஆசிரியரால், நண்பரால் சொல்ல முடியாத பல நல்ல கருத்துகளை, அறிவுரைகளை ஒரு நல்ல புத்தகம் சொல்லித் தந்துவிடும். குழந்தைகளுக்காக நாம் சேர்த்துவைக்கும் சொத்து, காசு பணமாக மட்டுமல்லாமல், கதைப் புத்தகங்களாகவும் இருக்கட்டும்.

மிக்க அன்புடன்,
- ஜி.மீனாட்சி

About G. Meenakshi :

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை' போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் `மங்கையர் மலர்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக உள்ளார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்கு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதை 2009-ல் பெற்றவர். அகில இந்திய அளவிலான விருது இது. இசைக் கலைஞர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக சென்னையைச் சேர்ந்த விபன்ச்சி அமைப்பின் தங்க மெடல் பெற்றவர்.

`கிராமத்து ராட்டினம், `பூ மலரும் காலம், `நினைவுகள் நிறைந்த வெற்றிடம்' என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் 2016-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் `அன்று விதைத்த விதை' என்ற இவரது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. சாகித்ய அகாடமி சார்பில் நடத்தப்படும் பல்வேறு கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

`பேசும் ஓவியம், `பரிசலில் ஒரு படகு', `நீ உன்னை அறிந்தால்', `மல்லிகாவின் வீடு' போன்ற சிறுவர் சிறுகதை நூல்கள், `பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்' என்ற நேர்காணல் நூல், `மனமே மலர்ச்சி கொள்' என்ற தன்னம்பிக்கை புத்தகம் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். தினமணி கதிர், கல்கி, தினமலர், மங்கையர் மலர், கவிதை உறவு, கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

Rent Now
Write A Review

Same Author Books