Home / eBooks / Pesum Vattam
Pesum Vattam eBook Online

Pesum Vattam (பேசும் வட்டம்)

About Pesum Vattam :

இக்கதையில் வரும் சம்பவங்கள் கணித உருவங்களான வட்டம் பற்றிய பண்பினை தெளிவாக கூறுகின்றது. இதனை பள்ளி மாணவ மாணவியர்கள் படிப்பதன் மூலமாக அவர்கள் வட்டம் பற்றிய தொடக்க கல்வியினை முழுமையாக அடைய முடியும். இக்கதையில் நூலாசிரியர் இராபிரபாகரன் அவர்கள் திருவைகுண்டம் அணைக்கும் வட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிகூறி இருப்பது கணித பயன்பாட்டின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது.

இரண்டாவது கதையான கோணம் மீட்ட கோமகன் கதை வடிவியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுவும் சாகசகதைதான். மலை, அரண்மனை எல்லாம் உண்டு. சிக்கல்களினின்று வெளிவர தேவையானது கோணங்கள் பற்றிய அறிவு. செங்கோணம், குறுங்கோணம், விரிகோணம், எல்லாம் என்ன என்று அறிந்திருப்பதோடு, ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து இருகரங்கள் இயங்குகையில் கோணங்கள் எவ்வாறு மாறுகின்றன என்ற புரிதலும் தேவைப்படுகிறது.

கதையில் சந்திக்கும் கதாபாத்திரங்கள், அவர்களுடைய பெயர்கள், பேச்சு எல்லாமே மாணவர்களுக்கு சுவையாக இருக்கும். இறுதியில் உள்ள கணித உரையை ஆர்வத்துடன் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆசிரியரிடம் ஒரு குற்றச்சாட்டு உண்டென்றால், அது கோணமணி என்ற சுவாரசியமான வில்லனை உருவாக்கிவிட்டு அவனை சந்திக்காமல் நம்மை ஏமாற்றிவிட்டது தான்! மூன்றாவது கதையான உயிரைமீட்ட உன்னத எண் என்ற தலைப்பைபடிக்கும் போதே, அதனை படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இக்கதையில் வரும் கண்ணை கவரும் வண்ணப்படங்கள் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. கதையை படிக்கும்போது நாம் ஒரு கணித மாறிலியின் மதிப்பை கண்டறியப் போகிறோம் என்பதையே மறந்துவிடுமளவுக்கு கதை சுவாரசியமாக உள்ளது. மொழிநடையும், கதைப்பாத்திரங்களை அறிமுகபடுத்தும் விதமும் அருமையாகவுள்ளது. கதைப்பாத்திரங்கள் கணிதப்பெயர்களை தாங்கி இருப்பது புதுமையாகவுள்ளது கணித பாடங்களை ஆசிரியர்கள் இதுபோன்ற கதையாக நடத்தும் போது கணித பாடங்கள் வாழ்வின் கடைசிவரை மறக்காது, அதுமட்டுமல்லாது எதையும் புரிந்து படிக்கும்போது அதனை மற்றவகையில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

பதறாமல் நாம் ஒரு காரியத்தினை அணுகும்போது சிறப்பாக செய்து முடிக்கலாம் என்ற வாழ்வியல் உண்மையை ஆசிரியர் நிரூபித்துள்ளார். நான்காவது கதையான கோட்டையை மீட்டசதுரங்கள் என்ற கதையினை வேண்டாவெறுப்பாக படிக்க ஆரம்பித்தேன். சிலபக்கங்கள் படித்தவுடன் எனக்கு பெரும் வியப்பும் ஆர்வமும் ஏற்பட்டது. அந்த அளவிற்க்கு எளிமையாகவும் இனிமையாகவும் தாம் சொல்ல வந்த கருத்துக்களை நல்ல படங்களுடன் விளக்கிருந்தார். கதாபாத்திரத்தின் பெயர்கள் மனிதில் ஆழமாக பதிந்துவிட்டது.

பலருக்கும் வேம்பாககசக்கும் இந்த கணிதபாடத்தினை கரும்பாக இனிக்க செய்யும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இன்று என்னை மீண்டும் அந்த சிறுவனாக்கியவர் முனைவர் பிரபாகரன். அவருடைய கதைகள் கணிதத்துடன் பின்னிப்பிணைந்து முன்னேறுகின்றன.

இதுபோன்ற நூல்கள் நிறைய தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும். இவை தமிழ் வழிபயிலும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கலை வடிவங்களையும் கணிதத்தையும் இணைப்பது மிகவும் தேவையானது. அப்பணியை மிகுந்த அக்கறையுடனும் படைப்பாற்றலுடனும் செய்துவரும் முனைவர் பிரபாகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முனைவர் பிரபாகரன் இன்னும் பலப்பல கணிதகதைகளை உருவாக்கிமாணவர் உள்ளங்களை கணிதத்தின்பால் ஈர்க்க வேண்டும்.

இந்நூல் கல்வித்துறையில் உரியவர்களிடம் எடுத்து செல்லப்பட்டு பாடநூலகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம். இது போன்ற கணித உண்மைகளை வாழ்வியல் உண்மையோடு சேர்த்துதாய் மொழியில் நிறைய புத்தகங்களை நண்பர் கணித்தாச்சாரியார். முனைவர்.ரா.பிரபாகரன் அவர்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முனைவர் பெ.கோவிந்தசாமி

துறைத்தலைவர்,

நாடகத்துறை.

தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர், தமிழ்நாடு

About Dr. R. Prabakaran :

முனைவர்.இரா. பிரபாகரன் அவர்கள் கோவை தொழில் நுட்பக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராகவும் பணி புரிந்து வருகிறார்.

கணிதத்தினை கதைகள் மூலம் நடத்துவதில் வல்லவர்.சிறந்த இந்தியன் விருது, மனிதநேய மாமணி விருது, சுவாமி விவேகானந்தர் விருது,கவிதென்றல் என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் பல்கலைக் கழகமானியக் குழுவிடமிருந்து நிதியுதவி பெற்று கணிதவியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பண்டைய தமிழர்களின் கணித திறன்கள், இந்தியர்களின் புராணங்களில் புதைத்துள்ள கணித புதையல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் பொறியியல் கல்வி அமல்படுத்துவதில், இந்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் சார்பில் அண்ணா பல்கலை கழக பொறியியல் கணிதம் இரண்டாம் பருவத்திற்காக மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் கணித நூல்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து தமிழினை ஒரு அறிவியல் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பு இயக்கத்தினை நடத்தி வருகின்றார்.

தமிழ் வழி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதவியல் கருத்துக்களை கொண்டுசேர்க்கும் பொருட்டு கணிதவாணி என்னும் மாத இதழினை நடத்திவருகிறார்.

Rent Now
Write A Review

Same Author Books