Home / eBooks / Petrorgale Kavaniyungal Part 1
Petrorgale Kavaniyungal Part 1 eBook Online

Petrorgale Kavaniyungal Part 1 (பெற்றோர்களே கவனியுங்கள் பாகம் - 1)

About Petrorgale Kavaniyungal Part 1 :

பெற்றோர்களே கவனியுங்கள்.! - கவனத்தை ஈர்க்கும் தலைப்பு. புத்தக ஆசிரியர் ஸ்ரீமதி காந்தலக்ஷ்மி சந்திரமௌலி அவர்களை நான் நன்கு அறிந்தவள். அவரைப் பாராட்டுவது என் நோக்கமல்ல. அவர் ஒரு சக பத்திரிக்கையாளர் என்ற முறையில் சில வார்த்தைகளைச் சொல்வது எனக்கு அவசியம் என்று படுகிறது.

பத்திரிகையாளர்களில் பலவிதம் இருக்கிறார்கள். அவர்களில் இவர் சுதந்திர பத்திரிகையாளர். 'சுதந்திரம்' என்ற வார்த்தையை மிகச் சரியாகப் பயன்படுத்தும் பத்திரிகையாளர். கண்டதைப் பேசுவதும், எழுதுவதும், விமர்சிப்பதும், முகஸ்துதிக்காக, முக்கியப் பிரமுகர்களைத் தூக்கிப் பிடிப்பதற்காக எழுதும் பத்திரிக்கையாளர் இல்லை. காசும் புகழும் தலையில் கிரீடமாக சுமக்க வேண்டும் என்பதற்காக எழுதுபவரும் இல்லை. 'தான் எழுதுவதுதான் எழுத்து' என்கிற அகங்காரம் இல்லாத பத்திரிகையாளர். மன நிறைவுக்காக எழுதுகிறார். இந்த எழுத்தால் ஒரு சிலராவது பயன்பட்டு பெருவாழ்வு வாழட்டுமே என்ற பொது நோக்கத்தோடு எழுதுபவர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை தன்னுடைய அனுபவம் வாய்ந்த கண்ணோட்டத்தில் அநாவசியமான வார்த்தை ஜாலங்கள் இன்றி எழுதுபவர்.

'பெற்றோர்களே கவனியுங்களும் அப்படித்தான். இன்றைய குடும்ப சூழலுக்கு, மிகவும் அவசியமான ஒரு ஆய்வு-அறிவுரை கட்டுரை என்று சொல்லலாம். இப்போது குடும்பம் என்பது எத்தகையது என்கிற சிந்தனை கூட இல்லாமல் பணம், பதவிகள், ஆடம்பரங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். இவை மட்டுமே நம் கண்களை மறைத்து, மனதை நிறைத்து உள்ளது. இத்தகைய சூழலில் பெற்றோர்கள் இருந்தும் குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டு விடுகின்றனர். அவர்களை (குழந்தைகளை) அவர்களுக்கான எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக் கொள்ள பழக்கிவிடுகின்றனர். இதில் பெருமை வேறு இன்றைய பெற்றோர்களுக்கு! 'Oh! He/She is so independent. Can handle everything on his/her own' என்று தோள் குலுக்கும் இளைய தலைமுறை பெற்றோர்களை நான் நிறையப் பார்த்திருக்கிறேன். இதில் அவர்களாகவே ஒரு சமாதானமும் சொல்லிக் கொள்வார்கள். 'அமெரிக்காவில் குழந்தைகள் அப்படித்தானே இருக்கிறார்கள். கெட்டா போய்விட்டார்கள்?' என்பார்கள். பிரச்சினை என்னவென்றால், நமக்கு வேண்டும்போது அவர்கள் அமெரிக்க குழந்தைகளைப் போல் இருக்க வேண்டும், நாம் பிரியப்படும்போது அவர்கள் இந்தியக் குழந்தைகளாக இருக்க வேண்டும். இதில் தான் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன.

இன்று பல பெற்றோர்கள் அடிக்கடி கூறும் விஷயம் "எங்களுக்கும் இந்த சொந்த பந்தத்திற்கும் சரி போகாது. எங்களுக்கு எல்லாம் பிரண்ட்ஸ் தான். நண்பர்கள் சிநேகிதிகள் தான் எங்களுக்கு முக்கியம்." இப்படிப்பட்ட எண்ணம் தங்கள் குழந்தையை மேலும், மேலும் தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது என்பதை முற்றிலும் மறந்துவிட்டு பேசுகின்றார்கள்.

புத்தக ஆசிரியரின் இந்த வாஸ்தவமான கருத்து இன்று மிகவும் அவசியமானது. இதற்கான விளக்கங்களும் தீர்வுகளும் அருமை. அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டியவை. மூன்றாம் அத்தியாயத்தில் இதுபற்றிப் பேசுகிறார். படியுங்கள்.

"படித்து, இஞ்ஜினியர்-டாக்டர்-வக்கீல்-சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகிற வழியைப்பாரு. அதை விடுத்து பாட்டு, டான்ஸ், டிராயிங்க் என்று போனாயோ, தெரியும்" என்று, அதே பெற்றோர் குழந்தைகளை மிரட்டும் காலமும் வருகிறது.

“பிறகு என்னதான் செய்வது?" இந்தக் கேள்வியை கேட்காத பெற்றோர்களேயில்லை எனலாம்.

பெற்ற குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை எல்லா தலைமுறைகளிலும் இருந்து வந்தது. ஆனால் இன்றைய தலைமுறைப் பெற்றோர்களுக்கு இது ஒரு ‘phobia' ஆகவே போய்விட்டது, இதனால் அவர்களும் கஷ்டப்பட்டு, குழந்தைகளும் வதைக்கப் படுகிறார்கள். இதற்கான தீர்வு இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

“நான் வளர்ப்பது சரியா, தவறா?" எனும் கேள்வி அனைத்துத் தாய்மார்களிடம் எழுவது சரியான விஷயம் தான். இதை யாரிடம் கேட்பது? "ஏன், இங்கே நான் போட்டதை தின்று, ஒரு ஓரத்தில் கிடக்கிறேனே. என்னிடம் கேட்கக் கூடாதா” என்று மாமியார், மாமனார் முகம் சுளிக்க, மனோதத்துவ நிபுணர்களிடமும், 'கூகுள் சர்ச்சிலும்' தேடும் இளைய தலைமுறையினர் அதிகரித்து வருகிறார்கள்.

ஆசிரியரின் எத்தனை சத்தியமான சிந்தனை. இன்று கூகிள்-க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் கூன் விழுந்த பெற்றோர்களுக்கு (தாத்தா பாட்டிகளுக்கு) கிடையாது. 'அவர்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று ஓரம் கட்டப்பட்டு விட்டனர். New Generation Parents புரிந்து கொள்ளவேண்டிய மிகப் பெரிய விஷயத்தை மிக அழகாகச் சித்தரிக்கிறார் ஆசிரியர்.

உண்மையாகவே தங்கள் குழந்தைகள் மீது அக்கறை இருக்கும் புதிய தலைமுறை பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டும்.

இந்தப் புத்தகம் நியூ ஏஜ் பெற்றோர்களை அவசியம் சென்று அடைய வேண்டும்.

- Dr. ஷ்யாமா ஸ்வாமிநாதன்

About Kanthalakshmi Chandramouli :

சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books