அன்பிற்கினிய உங்களுக்கு... வணக்கம்!
எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ஊர்ப்பிடாரி' படித்துவிட்டு கைப்பேசியிலும், மின்னஞ்சல் மூலமும் பல பேர் என்னோடு பேசினார்கள். ஆனால் ஒரு கடிதம் கூட என் வாசலுக்கு வரவில்லை. கடிதங்களை இழந்து விட்டுத்தான் கைப்பேசிகளோடு அலைகிறோம். தந்தி சேவையைப் போல அஞ்சல் சேவைக்கும் நாம் விடை கொடுக்கும் நாள் விரைவில் வரலாம். இழப்புகளை எளிதில் ஏற்றுக்கொள்ள மனசு மறுக்கிறது என்றாலும் இழப்புகளை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.
ஊர்ப்பிடாரி தொகுப்பு எனக்குள் இரண்டு ஆச்சரியங்களை விதைத்தது. ஒன்று, அக்கதைகளை யாரெல்லாம் படித்துவிட்டு அதைப்பற்றி என்னோடு பேசுவார்கள் என நான் நினைத்தேனோ அவர்களில் பலர் அதைப்பற்றி பேசவே இல்லை.
இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக்கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்துவிட்டு என்னிடம் மனம் திறந்து பேசியது இரண்டாவது ஆச்சரியம். எனது கிராமத்தைச் சேர்ந்த சில விவசாயிகளும் அதில் அடக்கம்.
‘சிர்மணி' கதையைப் படித்துவிட்டு சிர்மணியின் மறைவுக்குப் பிறகான ஒருநாளில் அந்த கதாபாத்திரத்தின் சகோதரர் பெங்களூருவிலிருந்து தொலைபேசியில் என்னுடன் நெகிழ்ச்சியுடன் பேசியதும், தேம்பி அழுததும் என்னை பலமாய் யோசிக்க வைத்தது. சில கதை மனிதர்களை எத்தனைதான் மறைத்து மறைத்து எழுதினாலும் சட்டென்று அந்தத் திரை விலக்கப்படும்போது கதாபாத்திரங்களைவிட படைப்பாளிகள் சற்று அதிகமாகவே திணறவேண்டி இருக்கிறது.
சிப்பாய் கணேசன், வலிகள் கதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்து ஆந்திரப் பிரதேச மக்களிடமும் உலவ விட்ட தொண்டநாடு தெலுகு ரசயிதல சங்கத்திற்கு இந்த தருணத்தில் நன்றி சொல்வது அவசியம் என நினைக்கிறேன்.
எப்போதும்போல எனது படைப்புகளின்மீதும் என்மீதும் மிகுந்த பாசம் கொண்ட தோழர்கள் கமலாலயன், கவிஞர் முகில், புல்வெளி காமராசன், மு.முருகேஷ் ஆகியோருக்கும் எனது நன்றிகளைப் பகிர வேண்டும்.
எனது துணைவி மஞ்சுளா, குழந்தைகள் ஓவியா, சிந்து, நிலவழகன் ஆகியோரின் தியாகங்களும், இழப்புகளும்தான் எனது படைப்புகளுக்கு நீரூற்றாய் அமைவதாய் பெருமை கொள்கிறேன். அவர்களின் பங்களிப்பின்றி என்னால் எழுத முடியுமென நான் நம்பவில்லை.
‘தொண்டை நன்னாடு சான்றோருடைத்து' என்று பாடப்பாட எங்களின் மண் தற்போது வறட்சிக்கு பெயர் பெற்ற மண்டலமாக மாறி வருகிறது. பாலாற்றையும், பொன்னை ஆற்றையும் காவு கொடுத்துவிட்டு, தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் மூச்சடைத்து, முழி பிதுங்கி நிற்கிறோம். தொண்டை வறண்டு, பெருந்தாகமெடுத்து தவிக்கும் என் மண்ணுக்கு எனது கதைகள் எவ்விதத்தில் உதவும்? அதற்கான விடையைத் தேடியே எனது பயணம் தொடர்கிறது. இன்னமும்கூட சில வெகுஜன இதழ்கள் எங்களின் வட்டார மொழிக் கதைகளை நிராகரித்தாலும் இந்தத் தொகுப்பிலும் எனது மக்களின் ஏக்கங்களையும், இழந்துபோன அவர்களின் கனவுகளையும் பிடிவாதத்தோடு எங்கள் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறேன்.
இந்தக் கதைகளைப் படித்துவிட்டு உங்களின் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்வதும், மறந்துபோவதும் உங்களின் சுதந்திரம். நன்றி.
பிரியங்களுடன்
கவிப்பித்தன்
வேலூர் மாவட்டத்தின் நீவா நதிக்கரை கிராமமான வசூர் என்கிற சிற்றூரில் பிறந்தவர், நீவா நதியின் இன்றைய பெயர் பொன்னையாறு. இது பாலாற்றின் துணை ஆறு. விலங்கியலில் இளம் அறிவியல் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மக்கள் புது முரசு என்கிற உள்ளூர் செய்தித் தாளை சுமார் பதினைந்து ஆண்டுகள் நடத்தி வந்தவர்.
தற்போது வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியராக வேலூர் மாவட்டத்தில் பணிபுரிகிறார். இது வரை இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
Rent Now