Home / eBooks / Prabalamanavargalin Vetri Ragasiyangal
Prabalamanavargalin Vetri Ragasiyangal eBook Online

Prabalamanavargalin Vetri Ragasiyangal (பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்)

About Prabalamanavargalin Vetri Ragasiyangal :

பிரபலங்கள் (வி.ஐ.பி.க்கள்)...

இந்த மந்திரச் சொல்லைக் கேட்டவுடன், உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் பிரமிப்புடன் விழி உயர்த்தாதவர்கள் வெகு சிலரே. சாதனைகளாலும், கடின உழைப்பாலும் பிரபலங்கள் என்ற நிலையை எட்டிப் பிடித்தவர்களைப் பார்த்து வியக்காதவர்கள் எவரேனும் உள்ளனரா? பிரபலங்களாக இருப்பதாலேயே, அவர்களை மற்றவர்கள் பின்பற்ற விரும்புகிறார்கள்.

எவரொருவரும் பிறந்த உடனேயே பிரபலமாகி விடுவதில்லை. தங்கள் உழைப்பால், விடாமுயற்சியால், செயற்கரிய செயல்களால் பிரபலங்களாக மலர்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை...?

தூக்கம் தொலைத்து, மெய் வருத்தி, அசுர சாதகம் செய்து, இரவும் பகலும் ஆராய்ந்து என்று பல நிலைகளைக் கடந்துதான் பிரபலங்கள் என்ற சிகரத்தை எட்ட முடிகிறது. அப்படிப்பட்ட சிலரை நேரடியாகச் சந்தித்து பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் 'தினமணி' நாளிதழின் கோவைப் பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில், இந்தப் பேட்டிக் கட்டுரைகள் 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் 'ஞாயிறு கொண்டாட்டம்' மற்றும் 'தினமணி கதிரில்’ தொடர்ந்து பிரசுரமாயின.

பிரபலங்களைப் பார்த்ததும் ஒரு ரசிகனைப் போல ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்கத் துடித்திருக்கிறேன். ஆனால், பத்திரிகைத் துறையில் எந்த ஒரு பேட்டிக்கும், ஒரு சில எல்லைக்கோடுகள் உள்ளன. கேட்ட கேள்விகள் எல்லாவற்றையும் பிரசுரித்துவிட முடியாது. இடப்பற்றாகுறை என்ற ஒரு வில்லன், பொங்கி வழியும் நம் ஆர்வத்துக்குத் தடை போட்டுவிடுவான்.

இருப்பினும், என் பேட்டிகளில் முக்கியமான செய்திகள் விடுபடாமலும், வாசகர்களுக்குத் தேவையான தகவல்களைச் சுவைபடவும் கொடுக்க முற்பட்டிருக்கிறேன்.

கே. ஜே. யேசுதாஸ், சுதா ரகுநாதன் போன்றவர்களைப் பேட்டி எடுப்பது அவ்வளவு எளிதாக எனக்கு வாய்க்கவில்லை. பல முறை முயற்சித்து, இடைவிடாமல் தொடர்பு கொண்டு, பல நாட்கள், பல மாதங்கள் காத்திருந்துதான் பேட்டி எடுக்க முடிந்தது. அந்த அனுபவங்களை எழுதினால், அதுவே ஒரு சுவாரஸ்யமான கட்டுரையாகிவிடும்.

கவிப்பேரரசு வைரமுத்து சாகித்ய அகாதெமி விருது பெற்ற போதும், கலைஞர் டி.வி.யில் ரமேஷ் பிரபா பணியாற்றிக் கொண்டிருந்த போதும் எடுத்த நேர்காணல்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

உச்ச நிலையைத் தொட்டுவிட்ட மனிதர்களுக்குள்ளும் சில சோகங்கள், வடுக்கள் இருப்பதை இந்தப் பேட்டிகளின் போது உணர முடிந்தது. அவமானங்கள், ஏளனங்கள் என்று பலவிதத் தடைகளைத் தாண்டித்தான் பிரபலங்கள் என்ற இந்த நிலையை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். தத்தமது துறைகளில் சாதனையாளர்களாகத் திகழும் இந்தப் பிரபலங்கள், தங்கள் சாதனையை எண்ணி மகிழ்ந்து போய் அப்படியே இருந்துவிடவில்லை. விருதுகள், பட்டங்கள் பல பெற்றும், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். புதிது புதிதாய் சிந்தித்துக் கொண்டே தங்களைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறார்கள்.

பிரபலங்களாகிவிட்ட பலரும், தங்கள் பிரபலத்தை இந்தச் சமூகத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்ற உண்மையும் எனக்குப் புலப்பட்டது. பலர், ஏற்கெனவே சத்தமில்லாமல் சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள். தாங்கள் சார்ந்திருக்கும் துறைக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை, உதவியை நிறைவேற்றி வருகிறார்கள்.

வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறவர்களுக்கும், வெற்றி இலக்கை நோக்கி முன்னேறத் துடிப்பவர்களுக்கும், தாம் விரும்பும் துறையில் முதன்மை பெற முயல்பவர்களுக்கும் இந்தப் பிரபலங்களின் அனுபவங்கள், ஒரு சிறிய பிறைக் கீற்றாய் ஒளி காட்டும் என்று நம்புகிறேன்.

என் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு என்னை ஊக்குவித்த 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் திரு. வைத்திய நாதன் அவர்களுக்கும், 'ஞாயிறு கொண்டாட்டம்', 'தினமணி கதிர்’ நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ப்ரியங்களுடன்,
ஜி. மீனாட்சி

About G. Meenakshi :

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை' போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் `மங்கையர் மலர்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக உள்ளார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்கு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதை 2009-ல் பெற்றவர். அகில இந்திய அளவிலான விருது இது. இசைக் கலைஞர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக சென்னையைச் சேர்ந்த விபன்ச்சி அமைப்பின் தங்க மெடல் பெற்றவர்.

`கிராமத்து ராட்டினம், `பூ மலரும் காலம், `நினைவுகள் நிறைந்த வெற்றிடம்' என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் 2016-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் `அன்று விதைத்த விதை' என்ற இவரது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. சாகித்ய அகாடமி சார்பில் நடத்தப்படும் பல்வேறு கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

`பேசும் ஓவியம், `பரிசலில் ஒரு படகு', `நீ உன்னை அறிந்தால்', `மல்லிகாவின் வீடு' போன்ற சிறுவர் சிறுகதை நூல்கள், `பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்' என்ற நேர்காணல் நூல், `மனமே மலர்ச்சி கொள்' என்ற தன்னம்பிக்கை புத்தகம் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். தினமணி கதிர், கல்கி, தினமலர், மங்கையர் மலர், கவிதை உறவு, கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

Rent Now
Write A Review

Rating And Reviews

  Vignesh

Covers the success formulae of many celebrities and highly inspiring.

Same Author Books