Home / eBooks / Pulveli Payanangal
Pulveli Payanangal eBook Online

Pulveli Payanangal (புல்வெளிப் பயணங்கள்)

About Pulveli Payanangal :

இந்த என்னுடைய நாலாவது சிறுகதைத் தொகுப்பில் பதினேழு சிறுகதைகள் இடம் பெறுகின்றன. இதுவும் இதற்கு முந்தைய தொகுதி 'மேலிடங்க’ளும் என்னுடைய பேரன்புக்குரிய நா.சீ.வ. அவர்களின் அங்கீகாரம் பெற்றவை என்று சொல்வதில் மிகை இருக்க முடியாது. படைப்பாளி, கவிஞர் என்பதோடு, வாழ்க்கை நெறிகளையும் மதிப்பீடுகளையும் நன்கறிந்த நல்ல நண்பர் அவர். "சுப்ர. பாலன். இது வேண்டாமே. நல்லா இல்லே..." என்று ஒதுக்கிவிடும் உரிமை பெற்றவர்.

ஒவ்வொரு கதைக்கும் அவர் குறிப்பு எழுதி வைத்திருந்தார். விருப்பு வெறுப்பின்றி எழுதிய அந்தக் குறிப்புக்களை அப்படியே ஏற்று இந்நூலுக்கு முன்னுரையாகப் பெற்றுக் கொண்டேன். என்னில் குறைகளும் உண்டு என்பதை உணர்ந்தவன் நான். அவருக்கு நன்றி.

- சுப்ர. பாலன்

வித்தியாசமாக ஒரு முன்னுரை

‘பீஷமன்' - நா.சீ. வரதராஜன்.

‘புல்வெளிப் பயணங்கள்!' - தலைப்பே புல்லரிக்கச் செய்தது. ஒவ்வொரு கதையைப் படித்ததும் மனத்தில் தோன்றியதை அப்படியே ஒரு சில வாக்கியங்களில் குறித்து வைத்தேன். அந்தக் குறிப்புகளையே இந்தப் புத்தகத்துக்கு முன்னுரையாக நண்பர் 'சுப்ர.பாலன்' ஏற்றுக் கொண்டு விட்டார். இந்தக் குறிப்புகள் ஒரு ரசிகனின் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுகளே! முன்னுரை என்று ஏற்றுக் கொண்டதிலும் எனக்கு மகிழ்ச்சி தான்.

புல்வெளிப் பயணங்கள்! - மாறுதலான சிந்தனைப் புல்வெளியில் கூட - அடியில் ஒரு மெளனமான சோக அழுத்தம்! வாழ்க்கையில் 'புல்' போன்ற பிரச்சினைகள் கூட 'முள்’ளாகிக் குத்தத்தான் செய்கின்றன. சுவாரஸ்யமாகக் கதை நடைபோடுகிறது. மீண்டும் ஒரு துவாரகை - படித்துப் படித்து மகிழ வேண்டிய ஒரு நல்ல கற்பனை. கவிதை. அதுவும் நல்ல நளினமான கவிதையைப் படித்த நிறைவு கிட்டுகிறது. அவளுக்கும் ஒரு வாழ்க்கை - நல்ல கதை. யதார்த்தம். சத்திய ஆவேசத்தை அடக்கிக் கொண்டு காட்சி தருகிறது.

மீண்டும் நாம் கூடுகையில் - கதை 'ட்ரமாட்டிக்' (Dramatic) ஆக முடிகிறது. யதார்த்தமாக இல்லை. ஒருவேளை எனக்குத் தான் அப்படித் தோன்றுகிறதோ? தெரியவில்லை.

அட்சதைகளும் கொத்து மலர்களும் - கதைக்கரு பலபேர் பல நிலைகளில் பல கோணங்களில் மென்று துப்பி விட்ட ஒன்று தான். கதை எழுதப்பட்ட விதம் நன்றாக இருக்கிறது.

புஷ்பக விமானத்தில் போனவள். ஓர் அமானுஷ்யமான கற்பனை. சுவாரசியமாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விசித்திரக் கற்பனை கதை வடிவில் திரைப்படமாகிவிடுகிறது. காட்சி அழகு மனக்கண்ணில் நிலைத்து விடுகிறதே! மைலா - இதுவும் அருமையான சிறுகதை. மைலா நாளைக்கு என்ன ஆனால் என்ன? இன்று உயர்ந்து நிற்கிறாளே!

இதுவும் ஒரு யோகம் - ஒரு வித்தியாசமான கற்பனை. இப்படிக் கூட இருப்பார்களா? இப்படி ஒரு மன பேதலிப்பா? என்று நினைக்கத் தோன்றினாலும் கதை ஒரு நிஜவாழ்க்கையை நம்முன் நிறுத்தி, இந்தக் கேள்விகளைப் பொய்யாக்கிவிடுகிறது.

நாய் வால் - வேடிக்கையான கதை. நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. கற்பனை சமயத்தில் நிஜமாகவும் இருக்கும் தான்!

தேடல் - ஒரு புதிய கனவுலகக் காட்சி தான் இதுவும். ஆனால் முடிவு மனத்தில் எந்தவித பாதிப்பையும் தராமல் புதிர் போல நிற்கிறதே!

பிற்பகலில் - 'சங்கர மூர்த்திகள்' இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதிர்ச்சி வைத்தியங்கள் அவர்களைப் பூரணமாக மாற்றிவிடுகின்றனவா என்ன? ஆனால் ஒன்று... அவர்கள் இந்தக் கதையைப் படிக்கும் போது ஏற்படும் 'சுருக்' அவர்களைச் சிந்திக்க வைக்கலாம்.

உயரங்கள் - ஓர் அருமையான தம்பதிகளின் 'அந்தி நேரம்' செம்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நெஞ்சைத் தொடும் வரிகள் நிறைந்திருக்கின்றன. தலைவர்கள் - கதை மிக இயல்பாக நடைபோடுகிறது. முடிவில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவதைத் தவிர்க்க முடிந்திருந்தால் நல்லது.

இரண்டாம் வனவாசம் - இராமாயணம். எத்தனையோ கதாசிரியர்களுக்குப் பலவிதமான ஊகங்களுக்கும் கற்பனைக்கும் இடமளித்து வந்திருக்கிறது: வருகிறது! சுப்ர. பாலனின் கற்பனையில் சீதையின் அகத்தைப் புரிந்து கொண்ட தமஸா நதியின் சிலிர்ப்பைத் தமிழ்ச் சொற்கள் ஏந்தி வந்து நம்மையும் அந்த அனுபவத்தைப் பெற வைத்துவிடுகின்றன. நல்ல கதை.

முடிவாக –

சுப்ர.பாலனின் நாலாவது சிறுகதைத் தொகுதி இது. வித்தியாசமாகவே இவர் சிந்தனைகள் படர்ந்தாலும் மனித இயல்பின் கரையை மீறி விடாமல் இருப்பது எத்தனை நிறைவு தருகிறது!

எங்கெங்கோ வாழும் எத்தனையோ மனிதர்களுடன் நெருக்கமாகப் பழகிவிட்டு வந்த அனுபவம். புத்தகத்தைப் படித்து முடித்ததும் கிடைக்கிறதே! அந்த சுகத்திற்காக சுப்ர.பாலனுக்கு நான் நன்றி கூறியாக வேண்டும்.

நீங்களும் கூறுவீர்கள்.
பீஷ்மன்.

About Subra Balan :

திருகோகர்ணம் சுப்ரமணிய அய்யர் பாலசுப்ரமணியன், எழுத்துப் பணியில் ஈடுபட்ட எழுபதுகளில் 'சுப்ர.பாலன்' ஆனார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் என்ற பெயர்களிலும் கல்கி, அமுதசுரபி., தீபம் , கோபுரதரிசனம், மங்கையர் மலர் போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவருகிறார். சிறுகதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல். மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல்கள் என்று பல துறைகளிலும்.. மேனகா காந்தி, சுதா மூர்த்தி, ஆடிட்டர் நாராயணசாமி போன்றோரின் நூல்களைத்தமிழாக்கம் செய்துள்ளார். மகாகவி காளிதாஸரிடம் ஈடுபாடு. மேகசந்தேச விளக்கமும், சூரியனை தரிசித்து தினமும் பதிவிடுகிற சிந்தனைகளும் அடுத்து வெளியாக உள்ளன. அமரர் கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களையும் தேடித்தொகுத்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் எண்பது கடந்துள்ளார்.

விண்வெளி அறிவியலில் நீண்டகால ஆர்வம். இவருடைய 'மத்தாப்பூ' சிறுவர் பாடல் தொகுப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுபெற்றது.

Rent Now
Write A Review

Same Author Books