Puratchi Thuravi (புரட்சித்துறவி)
About Puratchi Thuravi :
கையில் ஒரு புத்தகம் இல்லாமல் அறிஞர் அண்ணாவைப் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான். எழுதாத நேரங்களில், மேடை ஏறாத நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண் டிருப்பது அவர் வழக்கம்.
உயிருக்குப் போராடிக்கொண்டு, மருத்துவமனையில் படுத்திருந்த சமயம் கூட, ஏதோ ஒரு நாவல் படித்துக் கொண்டிருக்கிறார் என்று க.ராசாராம் சொன்னதாக நிருபர் பால்யூ ஒருமுறை தெரிவித்ததும், அது என்ன புத்தகம் என்று தெரிந்து வரும்படி சொன்னார் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.
மேரி கொரெல்லி என்ற நாவலாசிரியை எழுதிய Master Christian என்பதுதான் அந்த நாவல் எனத் தெரிந்தது. அண்ணா காலமான சமயம் அந்தப் புத்தகத்தைக் கடையில் வாங்கினார் எஸ்.ஏ.பி. தானும் படித்துவிட்டு, என்னையும் படிக்கச் சொன்னார். பெரிய நாவலாக இருந்த அதை அப்படியே மொழி பெயர்க்க வேண்டாமென்றும் சுருக்கமாக எழுதுமாறும் என்னைப் பணித்தார். அண்ணா கடைசியாகப் படித்த புத்தகம் என்ற குறிப்புடன், புரட்சித் துறவி என்ற இந்த நாவலை சுருக்கி, சுமார் 25 வாரங்களுக்கு நான் எழுதினேன்.
இதை எழுதிய மேரி கொரெல்லியின் உண்மைப் பெயர் மேரி பெக்கே. விக்டோரியா மகாராணி உட்பட இங்கிலாந்தின் பெரிய மனிதர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் முதலான பலரின் நட்பையும், பாராட்டையும் பெற்றவர். ஷேக்ஸ்பியரின் பிறந்த ஊரை அழகுபடுத்தியவர். கத்தோலிக்க மதத்தில் இருந்த சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதையே தன் எழுத்தின் லட்சியமாகக் கொண்டிருந்தார். புரட்சித் துறவி யும் அவரது கருத்தை வரையுறுத்துவதாகவே அமைந்துள்ளது. கதை தெரிஞ்சும் வருகிற சிறுவன் மானுவேல் உண்மையில் ஏசுநாதர்தான் என்பதுபோல அவர் எழுதியிருந்ததைப் பலர் ஆட்சேபித்தார்கள், எதிர்த்தார்கள். பொதுவாகவே ஆண்களை வெறுக்கும் மனோபாவம் கொண்டவர் இவர். எந்த ஆணாவது தொட்டால் சீறிவிடுவார்.
இந்த நாவலைச் சுருக்கமாக எழுதியதாலும், அப்போது மொழிபெயர்ப்பு விஷயத்தில் எனக்கு அனுபவம் போதாமல் இருந்ததாலும் புரட்சித் துறவியைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று கூற முடியாது. பாத்திரங்களும் அவர்களின் பெயர்களும் அதிகம். எனினும் வாசகர்கள் இதை ஆர்வத்துடன் படித்துப் பாராட்டினார்கள்.
ரா. கி. ரங்கராஜன்
About Ra. Ki. Rangarajan :
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா
Rent Now