Home / eBooks / Puthiya Appa
Puthiya Appa eBook Online

Puthiya Appa (புதிய அப்பா)

About Puthiya Appa :

பாக்கியம் ராமசாமி என்று தமிழுலகம் நன்கு அறிந்த ஜ.ரா. சுந்தரேசனை முதன் முதலில் கல்லூரி மாணவனாக 1957'ல் சந்தித்தேன்.

புரசைவாக்கம் சுந்தரம் பிள்ளை தெரு கோடியில் ஓர் அறையில் கீழே அமர்ந்து யாருடனோ கேரம்போர்டு ஆடிக் கொண்டிருந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆர்ட்ஸ் காலேஜ் மாணவன். ஆரம்ப ஆரம்ப எழுத்தாளன்... குமுதம் பத்திரிகையின் ரசிகன்... என்றெல்லாம்.

அவருடைய சில கதைகளைப் பாராட்டிச் சொன்னபோது, முகம் மலர்ந்தது. "எப்படி உங்களுக்கு இந்த வயதில் கசப்பான மனோபாவம் (cynical) தோன்றுகிறது?" என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

"ஏதோ ஓர் உணர்வு. ஆனால் அது போன்ற கதைகளை எழுதும்போது, காப்பி குடிக்க வெளியே போனால்கூட மூட் போய் விடும்" என்றார். என்னை பங்கஜா கபேக்கு அழைத்துச் சென்று காபி வாங்கிக் கொடுத்தார். சளசளவென்று நானேதான் பேசிக் கொண்டிருந்தேன் என்று கூறத் தேவையில்லை.

ஜராசுவின் பல பழைய கதைகளை மீண்டும் படிக்க, அவர் குடுப்பத்தார் வாய்ப்பு கொடுத்தார்கள். ஒரு சில கதைகளைப் படித்ததாகவே நினைவில்லை. என்றாலும் ஞாபகசக்தி மீது படர்ந்திருந்த ஒட்டடைகளை நீக்கி இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணி வாசித்தேன்.

பதின் பருவ மன - உடல் சிக்கல்கள்; தகாத உறவு; மென்மையான நகைச்சுவை; போன்ற பலவகைக் கதைகள் இதில் அடங்கி இருக்கின்றன. விளம்பர மோகத்தை விவரிக்கிற கதையும் உண்டு; மதுவின் கெடுதலைச் சொல்லும் கதையும் உண்டு. இயல்பான முடிச்சுடனேயே எல்லாக் கதைகள் அவிழ்கின்றன.

'காஸ்ஸிரங்காக் காட்டில் ஒரு தேவதை தூங்கவில்லை' முற்றிலும் மிகப் புதிதான சூழலில் அமைந்த கதை. வேறொன்றைப் படிக்கையில் இன்றைய ராணுவ வீரர் அபிநந்தன் கண்ணுக்கு தெரிந்தார்.

'ஒரு கையால் நகைச்சுவை மூலம் நமக்குக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டே மறு கையில் இலக்கியத் தராசு படிக்கவும் தெரிந்து வைத்திருக்கும் எனது ஆன்மீகச் சகோதரர்' என்றே எஸ்.ஏ.பி. ஜராசுவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தராசில் உள்ள கதைகள்தாம் இவை. எடை போடுவது வாசர்கள் கையில்!

- வாதூலன்
(லக்ஷ்மணன்)

About Ja. Ra. Sundaresan :

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Rent Now
Write A Review

Same Author Books