Puthiya Siragugal (புதிய சிறகுகள்)
About Puthiya Siragugal :
என்னையும் பாலாவையும் பார்ப்பவர்கள் “நெஜமாகவே ரெண்டு பேருக்குமே எழுதத் தெரியுமா?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். எழுதத் தெரிந்த இரண்டு பேர் எப்படி ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முடியும் என்பதே பலரது சந்தேகம். எங்களை விடுங்கள், தங்கள் எழுத்தில் தனித்தனி நடையழகுடன் கணவனும், மனைவியும் வெற்றிகரமான எழுத்தாளர்களாக இருக்க முடியும் என்று அசத்திக்கொண்டிருக்கும் வேதா கோபாலனையும், பாமா கோபாலனையும் பார்த்து பிரமியுங்கள்.
அந்த தம்பதியுடன் எழுத்தாளர்களாக அறிமுகம் துவங்கி, நண்பர்களாக அடர்த்தியாகி, இன்றுவரை ஆரோக்கியமாக வளர்கிறது எங்கள் உறவு.
சிறியவர், பெரியவர், முதியவர், புதியவர் என்று எந்தப் பாரபட்சமும் இன்றி, யாரையும், எதற்கும் பாராட்டும் அவர்களுடைய பெரிய இதயங்களைக் கண்டு நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இங்கே பதிய வந்தது அதைப் பற்றி அல்ல. உங்கள் கைகளில் குடியேறியிருக்கும் பாமா கோபாலனின் இந்தப் புதினம் பற்றி. மாத நாவல்கள், வார நாவல்களாகக்கூட வெளியாகி வாசகர்களுக்குப் பெரும் தீனி போட்ட காலத்தில், குமுதத்தின் மாலைமதியில் வெளியானது இந்நாவல்.
மாத நாவல்கள் எழுதுவது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். இத்தனைப் பக்கங்கள் என்று தீர்மானமானபின், அந்த வரையறைக்குள் தங்கள் வித்தைகளைக் களம் இறக்க வேண்டும். சுவாரசியமான எழுத்தால் பக்கத்துக்குப் பக்கம் வாசகர்களின் ஆர்வத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தபின் கதை திருப்தியாக இருந்தது என்ற விமர்சனத்தையும் வரவழைக்க வேண்டும். இதில் அநாயாசமாக வெற்றி பெற்றிருக்கிறார், பாமா கோபாலன்.
ஒவ்வொரு பாத்திரத்தையும் கச்சிதமாக வடிவமைத்தபின் கதை தானாக நீரோடை போல் செல்கிறது. திடுக் திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. கடைசிவரை சஸ்பென்ஸை நிலைநிறுத்தி, கதையை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கும் பாமா கோபாலனுக்குப் பாராட்டுகள்.
மிக்க அன்புடன்,
சுரேஷ் (சுபா)
About Vedha Gopalan :
1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.
கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.
1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.
சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.
குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.
அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.
தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.
கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.
சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.
Rent Now