1930-களில், ஒருமுறை சென்னையில் காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்யார் சிவானந்தலஹரியை விளக்கிப் பல நாட்கள் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதில் உள்ள நூறு ஸ்லோகங்களில், ரமண மஹரிஷி பத்தைப் பொறுக்கியெடுத்து ஒரு சாரமாகக் கொடுத்துள்ளார் என்று ரமண பக்தர் ஒருவர் சொல்லி, அதை மட்டும் பாராயணம் செய்வது போதுமா என்று பெரியவரைக் கேட்டார். அதற்கு அவர் “பேஷாகப் பாராயணம் செய்யலாம்; ரமணர் சொன்ன பின் ஏன் இந்தக் கேள்வி?” என்று பதில் அளித்து அதை வெகுவாக ஆமோதித்தார். அந்தத் தொகுப்பு வெகு நேர்த்தியாக பக்தியின் பலனையும், வழிகளையும் பற்றிக் கூறி, அவ்வாறு இருக்க முடியவில்லை என்றால் எது நடப்பதில்லை என்றும் விளக்குகிறது. தொடர்ந்து, வினைப்பயன் நம்மைத் துரத்தினால் என்ன செய்து அதிலிருந்து மீள்வது என்றும், வாதங்கள் எதிலும் ஈடுபடாமல் இறைவனிடம் உடனே சரணடையவேண்டியதன் அவசியம் பற்றியும் கூறுகிறது. அவ்வாறு சரணடைந்தவன் எவ்வாறு வாழவேண்டும் என்று விளக்கி, பின்னால் அவனுக்கு எப்பிறவி வாய்த்தாலும் அவன் இறைவனின் திருவடிகளைப் பற்றியிருப்பது ஒன்றே முக்கியம் என்று வலியுறுத்துகிறது. அவ்வாறு செய்வதால் பக்தன் எங்கே, பகவான் எங்கே என்று தெரியாதபடி அவர்கள் இருவரும் ஒன்றாகிவிடுவதைக் கூறி இத்தொகுப்பு முடிக்கிறது.
இளங்கலையில் இயற்பியல் (Physics) முதுகலையில் மின்னணு (Electronics) முனைவர் பட்டமோ பேச்சை அறியும் கணினி வழிகளில் (Speech Recognition) என்பவைதான் இந்நூலாசிரியர் S. ராமன் சென்ற கல்வி வழி. இவை நடுவில் தமிழ் எங்கே வந்தது என்று கேட்டால், தான் பிறந்தது 1944-ல் தமிழ் நாட்டில் சங்கம் வளர்த்த மதுரையில், தொடக்கத்தில் தமிழிலேயே பயின்றும், பின்பு ஆங்கிலத்தில் படிப்பு தொடர்ந்தாலும் இளங்கலைப் படிப்பு வரை தமிழ் பயின்றதும் காரணமாக இருக்கலாம் என்பார். மேலும் தமிழ் பயின்ற ஆசிரியர்களில் முதன்மையானவர் “கோனார் நோட்ஸ்” புகழ் திரு. ஐயம் பெருமாள் கோனார் என்றால் அது போதாதா என்றும் சொல்வார்.
பெங்களூர் (I.I.Sc.) இந்திய விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்திலும், பின்பு சென்னை (I.I.T.) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திலும் ஆக நாற்பது வருடங்கள் பணி புரிந்து பேராசிரியராக 2006-ல் ஓய்வு பெற்றார். தற்சமயம் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்வித் தர நிர்ணயக் குழுக்களின் அழைப்புக்கு இணங்கி அவ்வப்போது பணியாற்றி வருகிறார்.
இவர் தனது இளம் வயதிலிருந்தே திருவண்ணாமலை தவச்சீலர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் போதனைகளில் மனம் சென்றவர். அன்னாரின் உரைகளைப் பற்றியும், அது தொடர்பானவைகளைப் பற்றியும் இவர் தமிழ்ஹிந்து இணைய தளத்தில் (www.tamilhindu.com) 2010-ம் வருடத்தில் இருந்து எழுதத் தொடங்கினார். அவை தவிர தினசரி செய்திப் பத்திரிகையில் வரும் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் பெயர்ப்பதும் இவரது இன்றைய பணிகளில் ஒன்று.
இவர் எழுதிய வால்மீகி இராமாயணச் சுருக்கத்தின் மொழிபெயர்ப்பான “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு”, மற்றும் “இரமணரின் கீதா சாரம்” நூல்களை ‘இந்துத்துவா பதிப்பக’மும் , சுவாமி விவேகானந்தர் வழி நடந்து ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய, ஆஸ்திரேலியத் தமிழரான திரு. மஹாலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் வாழ்க்கை சரிதையான “இலக்கை எட்டும்வரை இடைவிடாது இயங்கு” என்ற மொழிபெயர்ப்பு நூலை “கண்ணதாசன் பதிப்பக”மும் வெளியிட்டிருக்கின்றன. இவரது இன்னுமொரு மொழிபெயர்ப்பு ஸ்ரீ ரமண மகரிஷி இணைய தளத்தில் “அத்வைத ஞான தீபம்” என்று ஒளி வீசுகிறது.
தமிழ்க் கட்டுரைகள் எழுதுவது தவிர, தனது வீட்டு மாடியின் திறந்த வெளியில் இயற்கை உரம் தயாரித்து, செடிகள் வளர்ப்பதும் இவரது இன்னுமொரு ஓய்வுகாலப் பொழுதுபோக்கு.
Rent Now