Mukil Dinakaran
வீரபத்ரன் என்னும் சாமியாடிதான் அந்த ஊரையே தன் கைக்குள் வைத்திருந்தான். ஊரில் நிகழும் திருவிழா உட்பட எல்லா நிகழ்வுகளும் அவரின் சம்மதத்தின் பேரிலும், அவர் சொல்லும் விதத்திலும்தான் நடைபெறும்.
ஒரு முறை ஊரில் ஒரு விதமான விஷக்காய்ச்சல் பரவ, அதைத் தடுக்க என்ன வழி? என்று ஊர்ப் பஞ்சாயத்து தலைவர், கோவில் தர்மகர்த்தா உள்ளிட்ட பலர் சென்று கேட்க, அந்த சாமியாடி மக்களை விஷக் காய்ச்சலிலிருந்து பாதுகாக்கும் எண்ணமின்றி, சாதிப் பாகுபாட்டை வளர்க்கும் விதமாய் ஏதேதோ சொல்ல, கோபமடைகிறான் தனபால். நாத்திகவாதி. கோபத்தில் அவன் சாமியாடியையும், கடவுளை தாறுமாறாய்த் திட்டித் தீர்க்க, அந்த கூட்டத்திலிருந்து அவன் துரத்தியடிக்கப்படுகிறான்.
ஆனால், அதே சாமியாடி வாயாலேயே ஊருக்குள் சாதிப் பாகுபாடு வேண்டாம், கீழ் சாதியும், மேல் சாதியும் இணைந்து வாழ வேண்டும், என்று சொல்ல வைத்து, மக்களிடமிருந்த வேற்றுமையைக் களைகிறான் தனபால்.
தனபால் எதை வைத்து சாமியாடியை மடக்கினான்?...நாவலை வாசித்து ரசியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.