Home / eBooks / Sabash! Parvathi!
Sabash! Parvathi! eBook Online

Sabash! Parvathi! (சபாஷ்! பார்வதி!)

About Sabash! Parvathi! :

நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலகாத அநுபவங்களைக் குழப்பமில்லாமல் சுவை நிரம்பிய கதையாகப் பின்னி வளர்த்துக் கொண்டு போவதில் எஸ்.வி.வி.க்கு நிகர் அவரேதான். தமிழக மக்களாலும், ஆங்கிலம் அறிந்த இந்திய அறிஞர்களாலும் ‘ஹாஸ்ய இரத்தினம்' என்று அழைக்கப்பட்டவர் எஸ்.வி.வி. அவருடைய கதைகள் என்றுமே ஜீவிய சக்தி வாய்ந்தவை. நகைச்சுவை அவர் எழுத்தின் ஆத்மாவாக விளங்கிய போதிலும், அந்த ஆத்மாவைப் பூரண ஜோதியுடன் பிரகாசிக்கச் செய்யும் சீரிய கருத்துக்களும், சுக வாழ்க்கைக்கு வழி காட்டும் அனுபவ ஞானோபதேசங்களும், பகவத் பக்தியும், சகோதர அன்பும் அவரது கதைகளில் தனிக் கோவையுடன் மின்னுவதைக் காண்கிறோம்.

அப்படிப்பட்ட தலைசிறந்த எழுத்தாளர் எஸ்.வி.வியைத் தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை அமரர் கல்கிக்குத்தான் உண்டு. எஸ்.வி.வி, அவர்கள் முதலில் ஆங்கிலத்தில் "இந்து" பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தார். அதில் உள்ள நகைச்சுவையைப் படித்து ரசத்த 'கல்கி', ஒரு நாள் திருவண்ணாமலைக்குச் சென்று, எஸ்.வி.வியைச் சந்தித்து தமிழில் எழுதுமாறு கூறினார். அதன் பயனாக, 1933ஆம் ஆண்டு எஸ், வி. வி.யின் முதல் கதை "தாக்ஷாயிணியின் ஆனந்தம்" என்ற கதை ‘ஆனந்த விகடனில்’ வெளிவந்தது. அதுமுதல் ஆனந்த விகடனால் எஸ். வி. வி. வளர்ந்தாரா? அல்லது எஸ்.வி.வி.யால் ஆனந்த விகடன் வளர்ந்ததா? என்று கூற முடியாத அளவுக்கு இரண்டும் வளர்ந்தன.

பிறகு அமரர் கல்கி அவர்கள் விகடனிலிருந்து விலகி ‘கல்கி’ பத்திரிகையை ஆரம்பித்த பிறகு, எல்லோரும் எஸ். வி. வி. இனிமேல் கல்கியிலும் எழுதுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் எஸ். வி வி. அவர்கள் விகடனைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையிலும் எழுத மறுத்து விட்டார்.

அவர் எழுதிய ஒவ்வொரு கதையும், சிறந்த கதையாக மட்டும் அமையாமல் ஒரு சிறந்த வாழ்க்கைப் பாடமாகவும் அமைந்து விட்டது. "சிறந்த இலக்கியம் என்றால் என்ன? அளப்பதற்கு ஏதாவது அளவுகோல் உள்ளதா" என்று எல்லாம் கேலி செய்யும் இன்றைய எழுத்தாளர்களுக்கு. எஸ்.வி.வி.யின் கதைகளே சாட்சி. அவர் எழுதி ஏறக்குறைய 50 ஆண்டுகளைக் கடந்த போதிலும், அவற்றை மேலும், மேலும் படிக்கத் தூண்டுகிறது. அதுதான் இலக்கியம், ஆம்! சிறந்த இலக்கியம் காலத்தால் அழியாதது.

‘ராமமூர்த்தி' என்ற நாவலில், “கணேசன், மனைவியின் மீதுள்ள மோகத்தால் பெற்ற தந்தையாரை விட்டு விட்டு மாமனார் பக்கம் சாய்ந்து அவர்கள் ஊரிலேயே வீடு வாங்குவது, அவர்கள் ஊரிலேயே வேலையை மாற்றிக் கொள்வது..." போன்ற அசட்டுக்காரியங்களைச் செய்ததால் அவனுக்கு ஏற்படும் துன்பங்களையும், 'ரமணியின் தாயார்’ என்ற நாவலில் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற விதத்தையும், "வாழ்க்கையே வாழ்க்கை". "செல்லாத ரூபாய்”, "ராஜாமணி" போன்ற கதைகளில் நகைச்சுவையையும் அள்ளி வீசியுள்ளார். இவருடைய நகைச்சுவை என்றாலே யதார்த்தமாகவும், வாழ்வில் தினமும் நடக்கக் கூடியதாகவும் இருக்கும்.

"பால் கணக்கு" என்ற கதையில் நம் வீட்டுப் பெண்களின் சாமர்த்தியத்தை எடுத்துக் காட்டி நம்மையே பிரமிக்க வைக்கிறார் எஸ். வி. வி. இதைப் படித்த பிறகு நம் வீட்டுப் பெண்களை நாம் கேலி செய்யாமல் அவர்களுக்குள்ளே இருக்கும் திறமையை வளர்த்துப் போற்றவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது. வீண் ஆடம்பரத்தால் உண்டாகும் கேட்டினை "வசந்தன்” என்ற நாவலிலும், பெண்களின் சிறப்பை “செளந்தரம்மாள்" என்ற நாவலிலும், பெண்ணின் சாமர்த்தியத்தை - "சபாஷ்!' பார்வதி!" என்ற நாவலிலும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

தற்காலத்தில் இதைப் போன்ற ஒரு கதையோ, கட்டுரையோ வராமலிருப்பது தமிழ் மக்கள் செய்த ஒரு பெரிய துர்ப்பாக்கியம் என்றுதான் கருத வேண்டும். இதைப் போன்ற நூல்கள் படித்துப் பாராட்டி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது. அவர் உண்மையாகவே ஜோஸ்யம் பார்ப்பதிலும், வைரம் பார்ப்பதிலும் வல்லவர். ஜோஸ்யம் என்ற கதையில் இதை அழகாக அவர் எடுத்துக் கூறியுள்ளார், பசுமாட்டை வாங்குவதைப் பற்றியும் மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறியுள்ளார். பிரபல வக்கீல்; இன்னும் ஏராளமான திறமைகளை தன்னுள் அடங்கிய இவரைச் சுருங்கக் கூறினால், இவரை இலக்கிய உலகில் ‘ஹாஸ்ய இரத்தினம்’ என்றும் நடைமுறையில் ‘Jack of all Trades’ அதாவது சகலகலா வல்லவன் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளருடைய எழுத்துக்கள் வெளிவருவது பற்றி நாம் மிகவும் மகிழ்ந்து போற்ற வேண்டும்.

About S.V.V. :

எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரை களையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் "ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழுக்குப் பிறந்தது புதுயோகம். 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.

Rent Now
Write A Review

Same Author Books