Home / eBooks / Sarida Saridi
Sarida Saridi eBook Online

Sarida Saridi (சரிடா சரிடி)

About Sarida Saridi :

நண்பர்களையோ, உறவினர்களையோ நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது, அவர்களை எப்படிக் கூப்பிட்டு மரியாதை செய்வது அல்லது அன்னியோன்யத்தை வெளிப்படுத்துவது என்பது ஒரு முக்கியமான பிரச்னை.

மணமான சில ஆண்கள், மனைவியை அவங்க என்று தான் பயம் கலந்த எச்சரிக்கையுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த மாதரசியோ, கணவனை அசால்ட்டாக 'அது' என்று அஃறிணையில் குறிப்பிட்டு மரியாதை செய்வார்.

கணவனுக்காக கடுகளவு ஏங்காவிட்டாலும், சில மனைவிமார்கள் அவரை 'ஏங்க ஏங்க?’ என்று கூப்பிடுவது ஒரு முரண்பாடு, பெண்டாட்டியை 'டி' போட்டுத் தான் கூப்பிட வேண்டும் என்று வாதிடும் ஒரு சாரார், அதற்குக் காரணமாக முன்வைக்கும் வாதம், பெண்டாட்டி என்கிற வார்த்தையிலேயே டி இருப்பதால்தான். லா.ச.ரா. அவர்கள் ஒரு கட்டுரையில் மேனேஜரை ‘மேனேஜன்' என்று குறிப்பிட்டு, அந்த ஆளுக்கு ‘ர்’ விகுதி மரியாதை எதற்கு என்று கேட்டு, அவர் மேல் ஏற்பட்ட வெறுப்பை பதிவுசெய்வார். 'அவன்' எனப்படும் மைக்ரோவேவ் அடுப்பை உபயோகித்துச் சமைக்கும் கணவனை சில மனைவிகள், அவன் சமையல் என்று கூறி, மரியாதை கொடுக்காத மாயையை ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். பொதுக்கூட்டங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப் படும் வார்த்தை 'அவர்களே'தான். அழைப்பிதழை பிரித்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பெயரோடு ‘அவர்களே'யை ஒட்டி அழைத்துப் பேசினால், பல நிமிடங்களைத் தள்ளிவிடலாம்.

அந்தக்கால சிறுவர்களும் சிறுமிகளும், டி, டா போட்டு ஏண்டி சரோஜா, ஏண்டா சாரங்கா என்று பேசிக்கொள்வது இயற்கையாக அமைந்த ஒன்று. இப்போது டி போட்டுப் பேசினால், பெண்கள் டின் கட்டி விடுவார்கள். இந்த டி, டா சொருகல்கள் பற்றி மேலும் அறிய, உள்ளே இருக்கும் 'சரிடா சரிடி’ கட்டுரையைப் படித்து அறிந்து கொள்ளலாம்.

அக்கட்டுரையின் தலைப்பைத் தாங்கிவரும் இப்புத்தகம் வெளிவர உதவியவர்களைப் பற்றி ஓரிரு ஈரமான வார்த்தைகளைச் சொல்லாவிட்டால், முன்னுரை நிறைவு பெறாது. வாராவாரம் விடாமல் எழுத மண்டைக்குள் பொறியைப் புகுத்தி ஆசீர்வதிக்கும் விநாயகப் பெருமானுக்கு என்னுடைய முட்டிகள் கிறீச்சிடும் நமஸ்காரங்கள். அப்பொறியை ஊதிப் பெரிதாக்கி, எழுதிய கட்டுரைகளைக் கடந்த 640 வாரங்களாகத் தொடர்ந்து வெளிவந்ததற்கும், வட்டார ஏடுகளின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கே. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்.

கட்டுரைகளுக்கு அலங்காரமாகத் திகழும் ஓவியங்களை வரைந்து அளிக்கும் மியூரல் / ஓவிய மேதை நடனத்துக்கும், அவ்வப்போது பாராட்டும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இதைக் கேட்டிருக்கிறீர்களா? 'டி' போட்டுக் கூப்பிடும் வயதையும் உற்சாகத்தையும் கடந்த ஒரு 90 வயதான சூப்பர் சீனியர் சிடிஸன், தன் மனைவியை டார்லிங், ஸ்வீட்டி, ஹனி என்று பரவசத்துடன் கூப்பிடுவதைப் பார்த்து வியந்த ஒருவர், 'உங்கள் மனைவி மேல் இந்த வயதிலும் அவ்வளவு ஈர்ப்பா? காதலா?' என்று வியப்புடன் கேட்டபோது, அந்த முதியவர் சொன்ன பதில்: 'காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை அவள் பேர் மறந்து போய் பல வருஷங்கள் ஆச்சு. 'உன் பேரு என்னன்னு கேட்டா சும்மாவிடுவாளா? தொலைச்சிடுவாள் அதான்!’

அன்புடன்,
ஜே.எஸ்.ராகவன்

About J.S. Raghavan :

1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.

வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.

தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..

Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.

தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'

Rent Now
Write A Review

Same Author Books