Home / eBooks / Sath Sarithiram Kaattum Paathai
Sath Sarithiram Kaattum Paathai eBook Online

Sath Sarithiram Kaattum Paathai (சத் சரித்திரம் காட்டும் பாதை)

About Sath Sarithiram Kaattum Paathai :

எண்ணற்ற மகான்களை ஈன்றெடுத்த பெருமை இந்தப் புண்ணிய பாரத பூமிக்கு உண்டு. அதில் முதன்மையானவராக, ஷீரடி புண்ணிய ஸ்தலத்தில் வாழ்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பக்தர்கள் துயர் தீர்த்தருளிய ஸ்ரீ சாயிபாபாவின் ‘சமாதி மந்திருக்குச்’ செல்லும் பாக்கியம் இப்புத்தாயிரமாண்டின் துவக்க நாளான ஜனவரி முதல் தேதி எனக்குக் கிட்டியது.

மயிலாப்பூர் கோவிலில் ஸ்ரீ சாயிபாபாவை தரிசித்து விட்டு வந்த சில நாட்களுக்குள்ளாகவே என் அலுவலகத் தோழி ஒருவர் மூலம் ‘ஹேமத்பந்த்' என்று ஸ்ரீ பாபாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் என்பவரால் மராத்தியில் எழுதப்பட்ட ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தின் தமிழ் மொழி பெயர்ப்புப் புத்தகம் படிக்கக் கிடைத்தது. அதில் வெகு எளிமையான முறையில் சரளமான நடையில் கதை வடிவத்தில் அரிய பெரிய கருத்துக்கள் சொல்லப்படிருந்த விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

சத்சரித்திரத்தைப் படிக்கப் படிக்க, எப்படி 1838 ஆம் ஆண்டில் பிறந்து 1918 ஆண்டு சமாதி ஆகிவிட்ட ஒரு மகான், இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்திற்கும் பொருத்தமான அறிவுரைகளை அளித்திருக்கிறார் என்று ஆச்சரியமாக உள்ளது.

"கடவுளை தரிசனம் செய்ய பட்டினியாக ஏன் போகிறாய்?" என்று பாபா கேட்கிறார். "விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பதேயில்லை. வெறும் வயிற்றுடன் கடவுளை அறிந்து கொள்ள முடியாது. வயிற்றில் உணவின் ஈரம் இல்லையானால் அவர் தம் புகழை இசைக்க நாவுக்கு வலுவிருக்குமா? கடவுளைக் காண கண்களுக்கோ அல்லது அவர் புகழைக் கேட்க காதுகளுக்கோ தான் வலுவிருக்குமா?"

பெண்களும் பெருமளவில் வேலைக்குப் போகும் தற்காலத்தில் பாபாவின் அறிவுரை தான் எப்படி காலத்திற்கேற்றாற் போல் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது? "நான் ஒருவரை ஏற்றுக் கொண்டு விட்டால் முன்னும் பின்னும் நான்கு புறமும் அவரை சூழ்ந்து கொள்வேன்" என்பார் பாபா. இதை நாம் சர்வ சாதாரணமாக தினமும் பார்க்கலாம். நாம் போகுமிடமெல்லாம் நம்மைச் சுற்றி பாபா ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் முன்னும் பின்னுமாக நம்மை காவல் காப்பது போலப் போய்க் கொண்டிருக்கும்.

‘ச்ரத்தா - சபூரி' - நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டே வார்த்தைகளில் இவ்வுலக வாழ்க்கையையே அடக்கி விட்ட மகானின் சத்சரித்திரம் படிக்கப் படிக்க ஷீரடி பாபாவின் மேல் ஈடுபாடு அதிகரித்து ஷீரடி போகும் ஆசை மனதில் கிளர்ந்தெழுந்தது. ஷீரடி போக வேண்டும் என்ற அவா அதிகமானதும், சத்சரித்திரத்தில் வருவது போல் எனக்குப் பிரியமான உணவு ஒன்றை உண்பதை விட்டு விட்டு, அதை 'ஷீரடி வந்து உங்கள் தரிசனம் கிடைத்த பின்பே உண்பேன்' என்று தீர்மானம் எடுத்த ஒரே வாரத்தில், அலுவலக நண்பர் ஒருவர், “நாங்கள் ஒரு குழுவாக ஷீரடிக்குப் போகிறோம். உங்களுக்கு பாபா மேல் மிகவும் பிரியம் உண்டே? நீங்களும் வருகிறீர்களா?" என்று கேட்க, பாபா என்னைக் கூப்பிடுகிறார் என்பது புரிய வர மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களுடன் நானும் என் கணவரும் ஷீரடிக்குப் போனோம்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஷீரடியில் பாபா தரிசனம். ஏழு ஆண்டுகளாக சத்சரித்திரம் படித்துப் படித்து ஷீரடிக்குப் போவோமா என்று ஏங்கிப் போய் பாபாவை தரிசித்தபோது, ஜன்ம ஜன்மாய் பிரிந்திருந்த நேசத்திற்குரிய ஒரு நெருங்கிய உறவினரைப் பார்ப்பது போல் துக்கம் தொண்டையையடைக்க, கண்களில் நீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது. அழுது முடித்தவுடன் இத்தனை வருடங்களாக மனதில் மண்டியிருந்த துக்கமனைத்தும் கரைந்து போய் மனசு லேசாகிப் போனது போல் ஓர் உணர்வு.

என்னுடன் வந்திருந்த குழுவைச் சேர்ந்தவர்கள் பத்து வருடமாக ஜனவரி முதல் தேதி தரிசனத்திற்காக ஷீரடி சென்று வருகிறார்களாம். ஆனால் சமாதி மந்திருக்குப் போய் தரிசித்து விட்டு மறுநாளே கிளம்பிவிடுவார்களாம். மற்றபடி ஷீரடியைப் பற்றியோ, பாபாவைப் பற்றியோ அவர்களுக்கு விவரமாகத் தெரிந்திருக்கவில்லை.

“ஷீரடியே வந்ததில்லேன்னு சொன்னீங்க? ஆனா ஷீரடியிலே ஒவ்வொரு இடமும் உங்களுக்கு அவ்வளவு நல்லா தெரிஞ்சிருக்கே?" என்று அவர்கள் என்னைப் பார்த்து வியப்படைந்தனர். நான் சத்சரித்திரத்தைப் பற்றி அவர்களுக்குச் சொன்னேன். அந்தப் புத்தகம் படித்திருந்ததனால் ஷீரடியின் மூலைமுடுக்கெல்லாம் ஷீரடிக்கு வருவதற்கு முன்பே எனக்கு அறிமுகமாகிவிட்டது என்று நான் சொல்ல, வந்திருந்த அனைவரும் ஒரு சத்சரித்திரம் வாங்கிக் கொண்டனர்.

ஸ்ரீ சாயிபாபாவின் சத்சரித்திரம் என்பது ஒரு ஆழமான பெருங்கடல். அதன் கரையோரத்தில் நின்று என்னால் மனதால் உள்வாங்கிக் கொள்ள முடிந்த சில சாராம்சத் துளிகளை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை எனக்குத் தந்த ஸ்ரீ சாயிபாபாவின் சரண கமலங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்

- ரேவதிபாலு

About Revathy Balu :

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

பரிசுகள்:

1) இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கிறார்.
2) ஆனந்தவிகடன் வாரப் பத்திரிகையின் வைரவிழாப் போட்டியில் இவருடைய நகைச்சுவை ஓரங்க நாடகம் முதல் பரிசு வென்றிருக்கிறது.
3) கலைமகள் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு.
4) கலைமகள் 'குறுநாவல்' போட்டியில் இரண்டாவது பரிசு.
5) 'இலக்கிய பீடம்' மாத இதழ் வருடந்தோறும் நடத்தும் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
6) மங்கையர் மலர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
7) நெய்வேலி புத்தக கண்காட்சியில் 2016ஆம் வருடத்திற்கான சிறந்த எழுத்தாளர் பரிசு கிடைத்துள்ளது.

Rent Now
Write A Review

Same Author Books