Home / eBooks / Shirdi Baba
Shirdi Baba eBook Online

Shirdi Baba (ஷீர்டி பாபா)

About Shirdi Baba :

அனைவருக்கும் பணிவான நமஸ்காரம்.

எனது ‘ஷீர்டி பாபா’ என்கிற புது நூல் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

எத்தனையோ நூல்கள் வெளி வந்தாலும், ஒவ்வொரு நூல் வெளியாகும்போதும் ஒரு விதமான உற்சாகம்தான். திருவிழாதான். ‘எழுத்தும் ஒரு பிரசவம்தான்’ என்று முதன்முதலாக யார் சொன்னார்களோ தெரியவில்லை... ஆனால், சத்தியம்!

எழுத்துலக வாழ்க்கையில் வெள்ளி விழாவைத் தாண்டி விட்டேன். ஆம்! 25 வருடங்கள் ஓடி விட்டன.

ஆனந்த விகடன் குழுமத்தின் ஆன்மிக இதழான ‘சக்தி விகடன்’ இதழுக்குப் பொறுப்பு ஏற்று, அந்த இதழின் துவக்க நாளில் இருந்து பணி புரியும்போது பேச்சு, மூச்சு எல்லாமே கோயில்களும் மகான்களுமாக ஆகிப் போனது. இதற்கு முன்வரை அனைத்து துறை அன்பர்களையும் பிரபலங்களையும் பேட்டி கண்டும், ஆசிரியர் இலாகாவின் பலதரப்பட்ட பணிகளிலும் இருந்து வந்த என்னை இறைவனே ‘ஆன்மிகத் துறை‘க்கென்று தேர்ந்தெடுத்து ஆட்கொண்டான் போலும்!

சக்தி விகடனில் ‘ஆலயம் தேடுவோம்’, ‘திருவடியே சரணம்’, ‘சதுரகிரி யாத்திரை’ உட்பட பல முத்திரைத் தொடர்களை எழுதினேன்.

அதன் பின் பணியாற்றிய ‘திரிசக்தி’ இதழில் ‘மகா பெரியவா’, ‘பர்வத மலை யாத்திரை’, ‘மகா அவதார் பாபாஜி’ போன்ற பேர் சொல்லும் பல தொடர்களை எழுதினேன்.

இவை அனைத்தும் சேர்ந்து ‘ஆன்மிக எழுத்தாளர்’ என்கிற ஒரு முத்திரையை எனக்குப் பெற்றுத் தந்தன. நான் பணி புரிந்த காலத்தில் என்னை ஊக்குவித்த இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த எழுத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக - அதாவது ஒரு பரிமாண வளர்ச்சியாக தற்போது ‘ஆன்மிக சொற்பொழிவாளர்’ ஆகி உள்ளேன். ‘மகா பெரியவா மகிமை’ உட்பட எண்ணற்ற ஆன்மிகத் தலைப்புகளில் பேசி வருகிறேன். எந்தக் காலத்தில் யார் யார் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நம் கையில் இல்லை. படைத்தவனுக்குத்தான் எல்லா உரிமையும்.

ஆன்மிகம் மட்டுமே எழுதுகின்ற பெரும் பேறு கிடைத்தபோது பக்தி உணர்வையும், இறை நம்பிக்கையையும் எப்படி எல்லாம் வாசகர்கள் மனதில் தூண்டிவிட முடியும் என்று யோசித்தபோது எழுந்தவைதான் மேலே சொன்ன தொடர்கள்.

‘திருவடி தரிசனம்’ தொடருக்காக பல மகான்களின் சரிதத்தையும் படிக்க நேர்ந்தது. ஷீர்டி பாபாவும் அப்படிதான் எனக்குள் புகுந்தார். பாபாவின் அருளாசியுடன் இந்த ‘ஷீர்டி பாபா’ நூலை ‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

உலகெங்கும் இருக்கக் கூடிய அன்பர்கள் அனைவராலும் கொண்டாடப்படக் கூடிய மகான்களுள் ஷீர்டி பாபாவும் ஒருவர். ‘ஹலோ’ சொல்வதற்கு பதிலாக ‘சாய்ராம்’ என்று சொல்பவர்கள் இன்று அதிகம்.

பாபா வாழ்ந்த காலத்தில் ‘ஷீர்டி’ என்பது ஒரு சாதாரண குக்கிராமம். வானம் பார்த்த பூமி. பாபா அப்போதே கிராமவாசிகளிடம் நெகிழ்வுடன் சொல்வார்: ‘ஒரு நாள் இது பெரிய ஊர் ஆகப் போகிறது. உலகெங்கும் உள்ளவர்கள் இங்கு வரப் போகிறார்கள். இந்த இடம் அனைவரது கவனிப்புக்கும் உள்ளாகப் போகிறது’ என்று. கிராமவாசிகள் அப்போது பாபாவின் மேல் நம்பிக்கை இல்லாமல் கேலியாகப் பார்த்து விட்டுப் போவார்களாம். ஆனால், இன்று பாபாவின் வார்த்தைகள் மெய்யாகி, உலகமே ஷீர்டியை நோக்கிப் படை எடுக்கிறது. அந்த மகானுக்கென்று ஷீர்டியில் அமைந்த கோயில்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வருமானம் வரும் கோயில் (முதலாவது திருமலை திருப்பதி என்று எல்லோருக்குமே தெரிந்திருக்கும்).

அத்தகைய மகானின் வாழ்க்கை பற்றி - அவரது வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை என் எழுத்து நடையில் தந்திருக்கிறேன். ஷீர்டி பாபாவைப் பற்றி எத்தனையோ அன்பர்கள் காலம் காலமாக எழுதி வருகிறார்கள். அத்தகைய பக்தர்களின் உழைப்புக்கும் பக்திக்கும் தலை வணங்கி, இந்த நூலை அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன்.

அன்புடன்,

பி. சுவாமிநாதன்

About P. Swaminathan :

பி.சுவாமிநாதன், 04 நவம்பர் 1964ம் வருடம் பிறந்தார். சொந்த ஊர் திருப்புறம்பயம் (கும்பகோணம் அருகில்). பட்டப் படிப்பு பி.எஸ்ஸி . (கணிதம்) கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. ஜர்னலிஸம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் 22 வருடமும் திரிசக்தி குழுமத்தில் 3 வருடமும் அனுபவம் உள்ளது.

ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
'பொதிகை' தொலைக்காட்சியில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சி 'யில் 'அற்புதங்கள் தரும் ஆலயங்கள்' என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். சொற்பொழிவுக்காகப் இவர் பல வெளிநாடுகளுக்கு பயனம் செய்துள்ளார். கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றில் சில விருதுகள்:
- செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது)
- சேஷன் சன்மான் விருது 2017
- குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்)
- குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்)
- சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
- பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு)
- ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
- சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை)

இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- ஜீ தமிழ் தொலைக்காட்சி ('தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது)
- சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்)
- விஜய் (பக்தி திருவிழா)
- மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்)
- ஜெயா (சிறப்பு விருந்தினர்)
- தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்)
- நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
- வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
- ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்
- ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்)
- மெகா டி.வி...

ஆன்மிக எழுத்தாளராக:
- தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
- தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
- தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
- சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
- ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
- மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
- திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)

Rent Now
Write A Review

Same Author Books