கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களில் நாற்பதாண்டுக் காலமாகச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்றே எழுதிப் பழகி விட்ட எனக்கு இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போன்ற பேரிலக்கியங்களில் ஆழ்ந்து பயின்று கட்டுரைகள் எழுத ஓர் வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவுகூடக் கண்டதில்லை.
அந்த வாய்ப்பை எனக்கு மிகுந்த நம்பிக்கையோடு நல்கிய 'கல்கி' இதழ்ப் பொறுப்பாசிரியர் ஆர். வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இதை எழுதத் தொடங்க முடியாது. புலமை நுணுக்கத்தோடு பாடம் கேட்டுப் பயில் வேண்டிய ஒரு காப்பியம் சிலம்பு. அத்தகைய நூலைவைத்துக் கட்டுரை எழுத சாமானியனான என்னால் ஆகுமா என்னும் தயக்கம் எனக்கு.
'முடியும். நீங்கள்தான் எழுதுகிறீர்கள். 'சிலம்புச் சாலை' என்று கட்டுரைத் தலைப்பு. கோவலனும் கண்ணகியும் நடந்த பாதையிலேயே பயணம் போய் இன்றைய நிலையைக் கண்டு அனுபவித்து எழுதுங்கள்.’ என்று ஒரு மாதிரிக் கண்டிப்புடன் சொல்லிவிட்டார் வெங்கடேஷ். வேறு வழி? உடனே பயணம் தொடங்க வேண்டியதாகி விட்டது.
அன்றே பெரியவர் சிலம்பொலியார் அவர்களைச் சென்று சந்தித்தேன். 'இலக்கிய இணையர் சென்ற பாதை விவரம் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா?' என்று கேட்டேன். 'பூம்புகார் தொடங்கிக் காவிரியின் வடகரை வழியே நடந்து திருவரங்கம் வந்து, பிறகு காவிரியைக் கடந்து உறையூர், கொடும்பாளூர் வழியாக மதுரையை அடைந்து, கணவன் படுகொலையானதற்குப் பழிதீர்த்தவளாய்க் கண்ணகி இறுதியில் நெடுவேள்குன்றம் சென்றடைந்த விவரம் சிலம்பிலேயே உண்டு. நீங்கள் அப்படிப் பயணம் மேற்கொள்வது பற்றி மகிழ்ச்சி' என்று சொல்லி வாழ்த்தினார். அத்துடன் அறுபதாண்டுகளுக்கு முன்னால் இலக்கிய ஆய்வுப்பணியாகவே இதில் ஈடுபட்ட பெரியவர் ஒருவர் தஞ்சையில் இருக்கிறார். அவரைச் சந்தியுங்கள் என்று சொல்லிக் கரந்தைப் பேராசிரியர் சீ. கோவிந்தராசனார் அவர்களைச் சந்திப்பதன் அவசியத்தைப் பற்றியும் கூறினார்.
இன்றைக்குத் தம்முடைய 94-ஆம் அகவையில் உள்ள பேராசிரியரை தரிசிப்பதே பெறற்கரிய பேறு. 1945இல் பூம்புகார்க் கடற்கரையில் தனியொருவராகத் தொடங்கிய அவருடைய கள ஆய்வுப் பணி கேரள - தமிழக எல்லைப் பகுதியில் உள்ள நெடுவேள்குன்றம் என்று அறியப்பட்ட இன்றைய சுருளிமலைத் தொடரில் சேரன் செங்குட்டுவனால் எடுப்பிக்கப்பட்டு இன்றைக்கு இடிபாடுகளாய்க் கொட்டிக் குவிந்துகிடக்கும் ஆலய வளாகத்தில் 17-11-1963 அன்று கண்ணகி தேவியின் உடைந்த திருமேனியைக் கண்டெடுத்து அதன் தொன்மைச் சிறப்பை உறுதி செய்து அறிவித்ததுவரை தொடர்ந்தது. உடைந்த அந்தப் பகுதியைக் கொண்டுவந்து அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடம் ஒப்படைத்த சாதனையாளர் இவர். அதைப்பற்றிப் பேசுகையில் 'அந்தச் சிலைப்பகுதி இப்போது எங்கே என்ன நிலையில் இருக்கிறதோ' என்றும் கவலையோடு குறிப்பிட்டார். உடைந்த அந்தத் திருமேனியின் (முகப்பகுதி) ஒளிப்படம் மட்டுமே இவரிடம் உள்ளது. இந்த ஆய்வுக்காக சென்ற ஆண்டில் செம்மொழிச் சிறப்பு விருது வழங்கி பாரத அரசு இவரை கெளரவித்துள்ளது. பேராசிரியரின் நடைப் பயண அனுபவங்களை 1991 ஆம் ஆண்டில் ஓர் அரிய நூலாகவே வெளியிட்டது மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் (கண்ணகியார் அடிச்சுவட்டில்: புகார் முதல் வஞ்சி வரையில்). நாம் பயணம் தொடங்கிய போது அது உடனடியாகக் கிடைக்கவில்லை. எனினும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகர் சி. ஜெயக்குமார் அவர்கள் நூலகத்திலிருந்து படியெடுத்துத் தந்து உதவினார். இன்னும் சில கட்டுரைப் படிகளையும் தந்தார்.
என்னுடைய 'சிலம்புச் சாலை’ப் பயணத்தில் உற்ற துணையாக உடன்வந்து வழிகாட்டி உதவியது பேராசிரியரின் கட்டுரைகளும் அவரே வரைந்த சில வரைபடங்களுமே. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் 'சிலப்பதிகார ஆய்வுரைத் தொகுப்பும், முனைவர் சிலம்பொலியாரின் 'சிலப்பதிகாரம் - தெளிவுரை நூலும், அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் 1976இல் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட 'BALLAD POETRY' நூலும் பெரும் அளவில் உதவின. மற்றைய நூல்களைப் பற்றி இந்த நூலில் ஆங்காங்கே பதிவு செய்திருக்கிறேன். கண்ணகி நடந்த பாதையில் பயணம் சென்று அதனுடைய இன்றைய நிலையை உணர்ந்து அனுபவித்து எழுதுவதே என்னுடைய நோக்கமாக அமைந்திருந்தது. அதை நல்ல முறையில் நிறைவேற்றியிருப்பதாகவே நம்புகிறேன்.
எல்லாவற்றுக்கும் மகுடச் சிறப்பாக, எளியவனான என்னுடைய முயற்சியைத் தொடக்கம் முதலே கவனித்து உற்சாகமூட்டி வந்த அறிஞர் பெருந்தகை சிலம்பொலியார் அவர்களே தம்முடைய கடுமையான பணிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி ஓர் அரிய அணிந்துரையை ஆய்வுரையாகவே எழுதி வழங்கி எனக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இப்பெருமக்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் என்றென்றும் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.
- சுப்ர. பாலன்
திருகோகர்ணம் சுப்ரமணிய அய்யர் பாலசுப்ரமணியன், எழுத்துப் பணியில் ஈடுபட்ட எழுபதுகளில் 'சுப்ர.பாலன்' ஆனார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் என்ற பெயர்களிலும் கல்கி, அமுதசுரபி., தீபம் , கோபுரதரிசனம், மங்கையர் மலர் போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவருகிறார். சிறுகதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல். மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல்கள் என்று பல துறைகளிலும்.. மேனகா காந்தி, சுதா மூர்த்தி, ஆடிட்டர் நாராயணசாமி போன்றோரின் நூல்களைத்தமிழாக்கம் செய்துள்ளார். மகாகவி காளிதாஸரிடம் ஈடுபாடு. மேகசந்தேச விளக்கமும், சூரியனை தரிசித்து தினமும் பதிவிடுகிற சிந்தனைகளும் அடுத்து வெளியாக உள்ளன. அமரர் கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களையும் தேடித்தொகுத்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் எண்பது கடந்துள்ளார்.
விண்வெளி அறிவியலில் நீண்டகால ஆர்வம். இவருடைய 'மத்தாப்பூ' சிறுவர் பாடல் தொகுப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுபெற்றது.
Rent Now