Home / eBooks / Sindhaa Nathi
Sindhaa Nathi eBook Online

Sindhaa Nathi (சிந்தா நதி)

About Sindhaa Nathi :

சிந்தா நதியின் அலைகளில், தங்கள் நெஞ்ச நெகிழ்ச்சிகளை இதயப்பாளங்களை, பரிமளங்களை, சஞ்சலங்களை அடையாளம் கண்டு கொண்டது பற்றியும், சிந்தா நதி ஸ்னானத்தில் அவர்கள் அடைந்த அமைதி, ஆறுதல், தைரியம் பற்றியும், மனம் திறந்து வெளியிட்டுக் கொண்ட போது, அது ஒன்றும் நான் மார் தட்டிக் கொள்ளும் விஷயமாக இல்லை. ஏதோ வேளைக் கூரில், சொல்லின் மந்திரக் கோல் பட்டு இந்த அலைகள், வாசகனின் தருணத்துக்கேற்றபடி, ஆத்மாவின் திறவு கோலாக அமைந்திருக்கையில், ஒருவிதமான அச்சம்தான் காண்கிறது. தரிசன பயம், மானுடத்தின் மேல் மரியாதை. சின்னச் சின்ன அலைகள், படுபடு ஆழங்கள், பிரயாணம் பகு பகு தூரம். சிட்டச் சிட்ட ஸ்வரங்கள். கனகன ராகங்கள். எட்ட எட்ட மேருக்களின், கிட்டக் கிட்ட நிழல்கள். உயர உயரத் தாருவின் இலைகள் பூமிமேல் நெய்யும் குட்டிக் குட்டிக் கோலங்கள். மின்னா மினுக்கி, மின்மினிப் பூச்சிகள் ஸகஸக ஸரிஸா கமகம கதஸா தஸபகரிகா கமதஸகஸா

சிந்தா நதி என் எஸ்டேட்டில் ஓடும் எனக்கே சொந்த நதி அல்ல. சிந்தா நதி உயிரின் பரம்பரை லோகோ ஸ்ருதியின் மீட்டல் கங்கை இதன் கிளை. வாரத் தொடராகப் பாய்ந்த போது சிந்தா நதி எனும் பொதுத் தலைப்பு தாங்கிக் கொண்டது. ஆனால் புத்தக உருவில், இந்த அலைகளுக்குத் தனித் தனித் தலைப்புக்கள் பாந்தம், தேவையெனப்பட்டது. சரி, வாருங்கள், இனி நதியில் இறங்கலாம். சிந்தா நதி தீரே சிந்தா விஹாரே...

About La. Sa. Ramamirtham :

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

Rent Now
Write A Review

Same Author Books