Padman
எளிய சொற்கள், மென்நடை, ஆழக்கருத்து இவற்றை உணர்த்திடும் பாங்கு, கவிதை இலக்கணத்தோடு தெள்ளிய நீரோடை போன்ற தமிழ்ப் (பா)பூக்கள்.
இந்த நூலைப் படித்ததும் நமது மனதினுள் தோன்றிய முதல் எண்ணங்கள் இவை.
வடமொழிப் புலமை மிக்கப் பக்தி இலக்கியங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடத்து "அண்ணா" சுப்ரமணியம் அவர்களால் தற்காலத்து தமிழறிந்த நல்லோரைச் சென்றடைந்தன. அவை யாவும் விளக்கவுரைகளாகி எல்லோருக்கும் உயர் மறைகள் எளிதில் கிட்டிய பேறு பெற்றோம்.
ஆனாலும் பகவத்பாதர் ஆதிசங்கரரின் கவிதை நயங்களில் ஒருசில, கவிதை வடிவிலேயே தமிழுலகம் காணப் பெற்றது வெகு சிலரால் மட்டுமே.
பத்மன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக கதை, கவிதை, கட்டுரைகளை எழுதிவரும் நா. அனந்த பத்மநாபன், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத் துறையில் 30 ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்தவர். தினமணி நாளிதழ், சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, வின் டிவி உள்ளிட்ட ஊடகங்களின் செய்திப் பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 2005-இல், இதழியல் குறித்து இவர் எழுதிய மூன்றாவது கண் என்ற நூல், சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதை வென்றது.
திக்கெட்டும் திருமுருகன், ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே, தத்துவ தரிசனம், முடியாத முடிவு (கவிதைத் தொகுப்பு), கருணைக்கு மறுபெயர் கசாப் (கட்டுரைத் தொகுப்பு), யாரும் சொல்லாத கதைகள் (சிறுவர் கதைகள்), சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரியின் தமிழ் மொழிபெயர்ப்பு), தென்முகக் கடவுள் துதி (தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்), ஆறுமுக அரவம் (சுப்ரமண்ய புஜங்கம்), அறுபடை அந்தாதி, பொருள் தரும் குறள் உள்ளிட்ட நூல்களைப் படைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தலைவர் வீர சாவர்க்கரின் “Six Epochs of Indian History” நூலை, “பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்” (விஜயபாரதம் பிரசுரம் வெளியீடு) என்ற தலைப்பில் அண்மையில் மொழிபெயர்த்துள்ளார்.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். வணிகம் வசப்படும், செல்வம் வசமாகும் உள்ளிட்ட நேரலை முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நெறியாளர்.அன்பு பாலம் அமைப்பிடமிருந்து பன்முக ஊடகவியலாளர் விருது (2009), புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் இதழியல் சுடர் விருது (2015), விஸ்வ சம்வாத் கேந்திரா அமைப்பிடமிருந்து சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது (2017), சிவநேயப் பேரவையின் தமிழறிவன் மாமணி விருது (2017) உள்ளிட்ட விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.