அவனை நான் தேடிச் சென்றதில்லை. நாடிக் கேட்டதும் இல்லை. ஆனாலும், என்னை இழுத்துப் பிடித்து தன்னை எழுத வைத்திருக்கிறான். என்னை அவன் தேர்வு செய்தது எனக்குப் பெருமை. அதற்குத் தகுதி உடையவனாக என்னை ஆக்கியிருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி.
என் ஞானகுரு மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகத்தை அழுதும் தொழுதும் வாசித்திருக்கிறேன். வாசித்தும் நேசித்தும் கண்ணீர் பெருகியிருக்கிறேன். அவர் போல் அல்ல... அது சாத்தியமும் அல்ல... ஆனாலும், அவர் கருத்துக்களை உள் வாங்கிக் கொண்டு எழுத வேண்டும்... வாசிப்போர் உருக வேண்டும் என விரும்பினேன்.
இதை நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, எழுது என்று உற்சாகப்படுத்தினார்கள். இதில் முக்கியமானவர் கோவையைச் சேர்ந்த அன்புச் சகோதரி டாக்டர் சுந்தரி கதிர்.
முகநூலில் தினம் ஒரு பாடல் என பொருளோடு எழுதத் தொடங்கினேன். என் எழுத்தை வாசித்தும் அதில் இறையை பூசித்தும் என்னை உற்சாகப்படுத்தியவர்கள் பலர். இதில் முக்கியமானவர்கள் பதி அய்யப்பன், டாக்டர். தீபப்பரியா ரமணன், மலேசியாவைச் சேர்ந்த வாணிகலை, சிவராம கிருஷ்ணன் சிவா, தமிழ் அரசி, டாக்டர் சுமதி சுந்தர், மஞ்சுபாஷினி சம்பந்த்குமார், மஞ்சுளா ஜெய். இவர்கள் தந்த உற்சாகத்தால் தான் இது சாத்தியமாயிற்று.
முகநூலில் தினமும் நான் எழுதிய பாடல்கள் எங்கோ கரைந்து விடாமல், அதற்கென ஒரு பக்கம் உருவாக்கி, நண்பர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இதை வாசிக்க வைத்து 100 பாடல்களையும் சிந்தாமல் சிதறாமல் சேமித்துத் தந்தவர் முகநூல் தோழி மீரா.
இந்நூலின் வெளியீட்டு விழா தில்லைக் கூத்தன் திருநடம்புரியும் சிதம்பரத்தில் 25.5.2014 அன்று இனிதுற நடைபெற்றது. திருப்பனந்தாள் காசிமடத்தின் இணை அதிபர் சீர்வளர்சீர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அவர்களும், திருச்சி மௌனமடம் சீர்வளர்சீர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் அவர்களும், விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்டு வாழ்த்தினர். சிவன் மீதான இந்நூலைப் பற்றி வாணியம்பாடி பேராசிரியர் கவிஞர் அப்துல்காதர் அவர்கள் சிறப்பித்து பேசி வாழ்த்தினார். விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ், மசாலா எப்.எம். புகழ் செல்லி சீனிவாசன் ஆகியோர் சிறப்புற தொகுத்து அளித்தனர்.
சிவவாசகம் நூலில் உள்ள சில பாடல்களை, இசையமைத்துப் பின்னணி இசையுடன் பாடிப் பதிவு செய்து குறுந்தகடாகக் கொடுத்த கோவையைச் சேர்ந்த கர்நாடக இசை மேதை திருமதி. கிரிஜா ஹரிஹரன் அவர்கள்.
இந்நூலை இறைத்தமிழ் உலகம் வரவேற்கும் என்று நம்புகிறேன்.
இரா. குமார்.
இரா. குமார், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் கீழப்புளியங்குடியில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரெ. இராமசாமிப் பிள்ளை. தாய் பராசக்தி.
தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர் இரா.குமார். தினமலர், தினகரன் நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர். பத்திரிகை துறையில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
சிறந்த தமிழறிஞரான இவர், எளிய இனிய நடையில் எழுதுவதிலும் மேடைகளில் சுவைபட உரையாற்றுவதிலும் வல்லவர். சிறந்த கவிஞர்.
இது வரை 15 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள ‘நடைமுறை இதழியல்’ நூல் பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை புதுக்கவிதை நடையில் எழுதி வெளியிட்டுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திம் சிறந்த எழுத்தாளர் விருது, தருமையாதீனம் குருமகாசன்னிதானம் அவர்களால், ‘இறைத்தமிழ் வேந்தர்‘ பட்டம், புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் ‘ஆன்மீகச் சுடர்‘ பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Rent Now