Home / eBooks / Snehithan
Snehithan eBook Online

Snehithan (சிநேகிதன்)

About Snehithan :

எண்ணமும் எழுத்தும்

இலக்கிய உலகில் பல எழுத்துக்கள் வணிக மயமாக்கப்பட்டு சீரழிந்து கிடக்கையில் நமது எழுத்துக்களும் கவனம் பெறுமா என்ற ஏக்கம் ஒருபுறம். மறுபுறம் ஆயிரம் பணிச் சுமை, குடும்பச் சுமை என்று பல இருந்தாலும் எழுதியே ஆகவேண்டும் என்கிற எண்ணம் மேலும் மேலும் வலுப்பெறுகிறது. ஏனெனில் எழுதுவது ஒரு சமூகப் பொறுப்பு.

மூன்று தொகுப்புகளுக்குப் பிறகு இது நான்காவது தொகுப்பு சிநேகிதன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! எப்போது எழுதினோம், எப்படி எழுதினோம் என்ற பிரமிப்பும் கூடவே ஏற்படுகிறது.

அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கூறுகளையும் சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற அவலங்களுமே ஆங்காங்கே என் கதைகளில் பிரதிபலித்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வாசகத்தளமும், நிறைந்த விமர்சனங்களையும் கொண்டு என் கதைகள் இன்றளவும் தொடர்கின்றன.

எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் கதைகளில் வந்து போனாலும் ‘எங்க சனங்களின் கதை’ இருளிலிருந்து ஒளிக்கு ஏங்குவது; அடிமைத்தனத்திலிருந்து விலங்கொடித்து விடுதலை பெறத் துடிப்பதாகும்.

அடிபட்டு வீழ்ந்து நொந்துபோன எங்க சனங்கள் இந்த சமூக அமைப்பை எதிர்த்து எனது எல்லா கதைகளிலும் தொடர்ந்து வருவார்கள், பேசுவார்கள், திமிறி எழுவார்கள்!

சாகித்திய அகாடமி (சென்னை) யில் கதை வாசிக்கப்பட்டும், தொகுப்பில் சேர்க்கப்பட்டும், மத்திய சாகித்ய அகாடமி (புதுடெல்லியில் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும், ‘இன்தாம்’ இன்டர்நெட்வரை கதை வெளிவந்திருப்பதும் சிறு சந்தோசம் தருகிற செய்தி.

எனது கதைகளை வெளியிட்ட தாமரை, செம்மலர், இந்தியா டுடே, தினமணி கதிர்... உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்கும் விமர்சனங்களினால் ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இனி உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

- விழி. பா. இதயவேந்தன்

About Vizhi Pa. Idhayaventhan :

விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.

சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.

இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:

விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.

அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

- பேராசிரியர் பழ மலாய்

Rent Now
Write A Review

Same Author Books