La. Sa. Ramamirtham
இது ‘அபிதா' எனும் நாவலின் கதாநாயகி ஆகிய பெண்மணிக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன். கருவூலங்கள் எப்படிப் பிறக்கின்றன என்பது இன்னும் புரியாத வெளிச்சம்தான்.
‘சௌந்தர்ய' ஒரு ஏழை குருக்கள் குடும்பத்தைப் பற்றியது. இப்பொழுது விசாலாட்சியும் மறைந்து விட்டாள். அவளுடைய கணவன் வைத்தியநாத குருக்களும் காலமாகி விட்டார். அவர்களுக்கு சந்ததி கிடையாது. எப்படி வந்தார்களோ அப்படி போய் விட்டார்கள். அவர்கள் வாழ்ந்தவரை அந்த வாழ்க்கை எனக்குக் கவிதையாகவே படுகிறது.
பொதுவான வார்த்தை:- அந்த நாளில் இந்த இரண்டு புத்தகங்களில் வாழ்ந்தவர்கள் வெகு நல்லவர்கள். அந்தக் காலமே அப்படி. காசு இல்லாத குறையை, ப்ரியம், மரியாதை, பிராம்மணர் விஸ்வாசம் இதுபோன்ற பிறவிப் பண்புகளால் இட்டு நிரப்பினார்கள். இனி, அந்த மனிதர்களும் வரமாட்டார்கள். அந்தக் காலமும் வராது. நான் அனுபவித்தேன். பாக்கியவானானேன்.
'சௌந்தர்ய' என்ற தலைப்பின் அடிப்படையே இதுதான்.
அன்புடன்
-லா. ச. ராமாமிருதம்
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.
லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.
அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.