Home / eBooks / Sri Annaiyin Vazhviyal Vazhikattuthal
Sri Annaiyin Vazhviyal Vazhikattuthal eBook Online

Sri Annaiyin Vazhviyal Vazhikattuthal (ஸ்ரீ அன்னையின் வாழ்வியல் வழிகாட்டுதல்)

About Sri Annaiyin Vazhviyal Vazhikattuthal :

"முதன் முதலாக திரு. ஆழ்வார் அவர்கள் 'ஸ்மித் லேன், ஸ்ரீ அன்னை சென்டரில்' நீங்கள் பேச வேண்டும்" என்று கூறியவுடனேயே என் ஞாபகங்கள் பின்னோக்கி ஓடின.

எகிப்து நாட்டில், அலெக்ஸாந்த்ரியா நகரில் உள்ள ‘பிரிட்டிஷ் கௌன்சில்' நூலகத்தில் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை ஆகிய இருவரின் எழுத்துக்களை என் தந்தையின் உதவியோடு புரிந்துகொள்ள முயன்ற அந்த காலகட்டத்திற்குப் பயணித்தேன்.

ஸ்ரீ அரவிந்தரின் ஆங்கிலப்புலமை தான் முதலில் அந்த 17 வயதில் ஈர்த்தது என்பதுதான் உண்மை. கையில் 'டிக்க்ஷனரி’ இல்லாமல் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தினமும் புதுப்புது ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம்தான் இருந்தது.

'சட்' என்று ஒரு நாள், ஒரு மின்னல் போன்று ஒரு கீற்றாக, என் ஓயாத ஓர் கேள்விக்கு பதில் கிடைப்பது போலத் தோன்றியது.

'என்ன, என்ன' என்று தேடத்தேட, பூரண வெளிச்சமாக பரவ, மனம் அமைதியடையத் துவங்கியது. அன்றிலிருந்து இன்று வரை மனச்சஞ்சலங்கள் தோன்றினால், கிரஹஸ்தாஸ்ரம வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்ட பொழுது, தற்சமயம் வானபிரஸ்தாஸ்ரம வாழ்வில் சரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா எனும் கேள்வி எழுந்தால் ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் ஓயாது பதிலளிக்கின்றனர்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஸ்ரீ அன்னை சென்டரில் பேசுகையில், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகையில், மீண்டும், மீண்டும் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் வார்த்தைகளை படிக்கையில் மனமெல்லாம் பூரித்துப் போகின்றது. என் மீது முழு நம்பிக்கை வைத்து, 'நீங்களே தலைப்பை தேர்ந்தெடுங்கள்' என்று ஒவ்வொரு முறையும், திரு. ஆழ்வார் அவர்கள் கூறுகையில் பொறுப்பு மிக அதிகமாக கூடுகிறது.

ஆனால், பல்வேறு புத்தகங்களை கிடைக்கச் செய்யும் ஸ்ரீ அன்னையின் கருணையை என்னவென்று கூறுவது? 1971-ஆம் ஆண்டு மும்பை கல்லூரியிலிருந்து ஓர் தென்னாட்டு பயணம் ஏற்பாடாகியது. Tourism & Travel படிப்பு படித்துக் கொண்டிருந்த நான், அனைத்து ஏற்பாடுகளைச் செய்யும் குழுவில் இருந்தேன்.

பாண்டிச்சேரி சென்று ஸ்ரீ அன்னையை நேரில் தரிசித்ததை என் வாழ்வில் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அந்தக் கண்களில் ததும்பி வழியும் அன்பையும், காருண்யத்தையும் நினைவு கூர்கையில் இன்றும் நான் பரவசமடைகிறேன். என் ஒவ்வொரு செயலிலும், எண்ணத்திலும் எப்படியோ புகுந்து, எடுத்த பொறுப்பை சரியாகச் செய்ய வைக்கிறார் ஸ்ரீ அன்னை.

எனக்குள் எப்பொழுதும் இருக்கும் நிதானமும், அமைதியும் பன்மடங்கு பெருகச் செய்வதில் ஸ்ரீ அன்னையின் பங்கு உள்ளது.

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக ஞானம் அள்ள, அள்ள குறையாதது. ஓர் தந்தையின் கண்டிப்பு அவர் வார்த்தைகளில் உண்டு. என்னைப் பெற்ற தாய் மறைந்த திருமதி. கனகாம்பாவும், என் தந்தை மறைந்த திரு. எல். ராமசுப்ரமணியன் ஆகிய இருவரும் எனக்களித்த ஊக்கத்தினை மறக்க இயலாது. என் 'சரணாகதி'யை புரிந்துகொண்டு அதற்குரிய ஓர் இடத்தை அளித்த அவர்களுக்கு வணக்கங்கள்.

பல்வேறு விதமாக வாழ்க்கையில் பல பிரச்சினைகளையும், மிகுந்த பொறுப்புகளையும் சந்தித்தபொழுது, என்னுடன் அன்றும், இன்றும், என்றும் பயணிக்கும் ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் பாதாரவிந்தங்களை வணங்குகிறேன். திரு. ஆழ்வார் மற்றும் ஸ்ரீ அன்னை சென்டரை சார்ந்த அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றி என்றும் உரித்தாகுக. "நீ பேசு, உன்னால் முடியும்" என்று நான் உடல் உபாதையில் அவதிப்படும் பொழுதும், தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது என்னைப் பெற்ற தாய், தந்தையைவிட ஒரு படி மேலாக அரவணைத்து அன்பு பாராட்டும் என் அன்பு கணவருக்கு என் நன்றிகள்.

அதே சமயத்தில் இத்தகைய ஓர் வாழ்வு அளித்த ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தருக்கும் என் கோடானு கோடி வந்தனங்கள்.

நான் மிகக் குறைவாக பேசுபவள் என்பதை நன்கு புரிந்து கொண்டு, என்னை தன் சகோதரியாக ஏற்று, பேசாமலேயே அன்பு பாராட்டும் சகோதரர் டாக்டர் திரு. சோலையப்பன் அவர்கள் மூலமாக இப்புத்தகம் வெளிவருவதில் நான் மிகவும் மகிழ்கிறேன்.

என்றும் அன்புடன்
காந்தலட்சுமி சந்திரமௌலி

About Kanthalakshmi Chandramouli :

சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books