மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் வசித்து, அங்கு பந்த் நடைபெற்றால் என்னவாகும் என்பதை கதை சித்திரிக்கிறது.
நிமிஷத்துக்கு நிமிஷம் திக்திக்... பயம்... பதற்றம் என தொடர்கிறது.
கலவர பூமியில் நின்றுகொண்டு தம்மகனான மகேந்திரனை தேடும் அல்லது எதிர்பார்க்கும் ஒரு பெற்றோரின் மனம் என்னவெல்லாம் பாடுபடும் என்பதை சொற் சித்திரமாய் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். அதே நேரத்தில் தம் வீட்டில் விசுவாசத்தோடும் உள்ளன்போடும் வீட்டு வேலைகளைக் கவனித்து வந்த தாமோதரன் வழியில் இறந்து கிடக்கிறான் என்றதும் மேலும் அப்பெற்றோர்க்கு தம் மகனை நினைத்து பிரிவின் விளிம்பிற்கே செல்லும் காட்சி மிக அழகாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் பார்த்துக்கொண்டோ அல்லது கவனித்துக்கொண்டோ போனோமானால் தாமோதரனின் வாழ்க்கை சட்டென நெஞ்சைத் தொட்டு இழுக்கும்.
வாழ்க்கையை மிக அழகாக ரசிக்கத் தெரிந்தவன் என்றே கூறலாம். எப்படியோ வாழவேண்டியவன் இப்படி வாழ்வதற்கு தள்ளப்பட்டான் என்கிற கேள்விக்கு கதை விடையளிக்கிறது.
தொலைநோக்கிலிருந்து பார்த்தால் மகேந்திரனின் வேலையில்லா திண்டாட்டமும் அதனால் அவனுள் எழும் தாழ்வு மன்ப்பான்மை மற்றும் தன் தாயிடமே ஏதாவது கேட்க கூச்சப்படும் கட்டமும் பிறகு இப்படியொரு வாழ்க்கை தேவைதானா என விரக்தியின் அந்தத்திற்கே செல்வதும் கணக்கிட முடியாதது. தம் உறவோ அல்லது நண்பரோ வன்முறை நடக்கும் இடத்தில் சிக்கிக்கொண்டால் நம் இருதயம் எவ்வளவு மடங்கு துடித்துக்கொண்டிருக்குமோ அப்படித்தான் இந்நாவலை படித்து முடிக்கையிலும் ஏற்படுகிறது.
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட மொத்தம் 52 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 31 ஆண்டுகளாக வெளிவருகிறது. திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.
Rent Now