Home / eBooks / Thaagam
Thaagam eBook Online

Thaagam (தாகம்)

About Thaagam :

நான் ஃபீஜித் தீவுக்குச் சென்றிருந்தபோது இந்த நாவல் என் மனதில் உருவானது. அங்கு நிகழ்ந்த கதையானதால் ஃபீஜி இந்தியரின் சரித்திரப் பின்புலத்தில் இது விரிகிறது.

ஃபீஜித்தீவுகள் 1970 வரை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது. தனது வியாபாரப் பெருக்கத்துக்காக அங்கிருந்த கரும்புத் தோட்டங்களில் கூலி வேலை செய்ய நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து பல ஏழைகளை - அத்தீவுகள் எத்தனை தொலைவு என்கிற பூகோள அறிவில்லாத எளிய மக்களை - சாமர்த்தியமாக ஐந்து வருஷ ஒப்பந்தத்தில் ஆங்கிலேயக் கம்பெனி அழைத்துச் சென்றது. அங்கு சென்ற இந்தியர்கள் பட்ட கஷ்டமும், பிறகு அங்கேயே தங்கிக் கிளை பரப்பியதும், கடும் உழைப்பினால் எட்டிய உன்னதமும் ஒரு வீர சரித்திரம்...

இது ஒரு சரித்திரக் கதை இல்லை. சரித்திரம் படைத்த ஒரு சமூகப் பின்புலத்தில் நிகழும் ஓர் அப்பாவிப் பெண்களின் அதிசயக் கதை. கதாநாயகியின் வாய் மொழியிலும், மூன்றாம் நபரின் பார்வையிலுமாக இந்தக் கதை மாறி மாறிப் பின்னிக் கொண்டு போகிறது.

இந்தக் கதையைக் கேட்டபோது எனக்குள் ஏற்பட்ட வியப்பும் - குழப்பமும் - கேள்விகளும் படித்து முடித்தபின் உங்களுக்குள்ளும் ஜனிக்கலாம். விடைகளைத் தேடிப் போவது வியர்த்தமானது என்று தோன்றுகிறது. நமக்கெல்லாம் ஒவ்வொன்றுக்கும் விடை கிடைத்தால்தான் திருப்தி. ஆனால், அந்த விடைகளெல்லாம் நமது சமாதானத்துக்காக, உண்மையில் எந்தக் கேள்விக்கும் விடை கிடையாது, பிரக்ருதியின் இயக்கத்தில் -

இன்னும் விடைகளைத் தேடிக் கொண்டிருக்கும் அந்தச் சகோதரிக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.

- வாஸந்தி

About Vaasanthi :

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Rent Now
Write A Review

Same Author Books